எம்ஜியாரின் தனிப்பிறவி வில்லன்!



‘‘‘தியேட்டரில் டிக்கெட் கிழிக்கும் பழம்பெரும் நடிகர்’னு ‘குங்குமம்’ பத்திரிகைல வெளியான ஒரு கட்டுரைதான் என்னை இன்னைக்கு நடிகனா மாத்தியிருக்கு.என்னுடைய அப்பா யார்னு சொல்றதுக்கு ஒரு புகைப்படம் கூட என்கிட்ட இல்ல. ஒரு மகனாக அவர் யார் என்பதை உலகுக்கு சொல்ல வேண்டிய கடமை எனக்குத்தானே இருக்கு..?’’
பல நினைவுகளை அசை போட்டபடியே பேசத் தொடங்கினார் நடிகர் நிவாஸ் ஆதித்தன். 

13 படங்களுக்கு மேல் நடித்த ஒரு பழம்பெரும் நடிகர், ஆதித்தன். மக்கள் திலகம் எம்ஜிஆருடன் நடித்தவர். ஒருசில படங்களில் ஆதித்தன்தான் கதாநாயகன்...இப்படிப்பட்ட ஒருவரைப் பற்றி இந்த சினிமா உலகம் முற்றிலும் மறந்துவிட்டது என நினைக்கும்போது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.‘‘எங்களுக்கு சொந்த ஊர் காரைக்கால். அப்பா ஆதித்தன். சினிமாவில் பெரிய கலைஞரா ஆகணும் என்கிற ஆசையில்தான் சென்னைக்கு வந்தார். 

அப்பாவுக்கு மொத்தம் ஒன்பது பிள்ளைங்க. நான்தான் அதில் கடைசி. ‘விளக்கேற்றியவள்’ படத்தில் ‘கத்தியை தீட்டாதே... புத்தியை தீட்டு...’ பாடல்ல எங்க அப்பா ஆதித்தன்தான் நடித்திருப்பார். 

இப்போது வரையிலும் அந்தப் பாட்டு அசோகன் சாருக்கு உருவாக்கப்பட்டது அப்படின்னுதான் நினைச்சுட்டு இருக்காங்க. ஆனால், அந்த பாட்டில் நடித்தது எங்க அப்பா. 
அந்தப் பாடலுக்கு வீடியோ காட்சி எதுவும் இல்லை. அந்த பாடலுக்கு மட்டுமல்ல, ‘தாயும் மகளும்’ படத்தின் பாடல்களுக்கும் கூட வீடியோ எதுவும் கிடையாது. இந்தப் பாடல்களுக்கு ஆடியோ மட்டுமே இருக்கு. 

எம்ஜிஆர் சார் நடிச்ச படம் ‘தனிப் பிறவி’. இதுல என்னுடைய அப்பாவுக்கு வில்லன்களில் ஒருவராக ஒரு கதாபாத்திரம் இருக்கும். அந்தப் படம் இப்பவும் வீடியோவா கிடைக்கிறதால எங்கப்பாவை ஓரளவுக்கு பார்க்க முடியும். 

ஒரு சிலைக்கு அடியில் உட்கார்ந்துகிட்டு ‘காதல் படுத்தும் பாடு...’ என அந்தப் படத்துல பேசிகிட்டு இருப்பார். அந்த முக மாஸ்க் கழட்டினால் அதிலும் சஸ்பென்ஸ்... சாண்டோ சின்னப்பா தேவர்தான் இருப்பார்.தேவர் பிலிம்ஸ் தயாரிச்ச ‘தெய்வச்செயல்’ படத்தில் மேஜர் சுந்தர்ராஜன் சாருக்கு துரோகம் செய்யும் கதாபாத்திரத்தில் என்னுடைய அப்பா ஆதித்தன் நடித்திருப்பார். 

மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் ஜெய்சங்கர் சார் நடிச்ச ‘சிஐடி சங்கர்’ படத்துலயும் அப்பா நடிச்சிருக்கார். இந்தப் படம் ஆரம்பிக்கும் பொழுதே பாம் வைத்து ஒரு போலீஸ் அதிகாரி கொல்லப்படுவார். அந்த அதிகாரியா நடிச்சது எங்கப்பா ஆதித்தன்தான்...’’ பேசிக் கொண்டிருந்த நிவாஸ், சற்று நிறுத்தினார். 

மூச்சை இழுத்துவிட்டவர், முழுமையாக தன் அப்பா ஆதித்தன் குறித்த தகவல்களை நம்மிடம் பகிர்ந்தார்.‘‘திருமலை ராயன் பட்டினத்தில் மிராசு மகனாக இருந்தவர் எங்கப்பா. ராணுவத்தில் சேரணும்னு ஆசைப்பட்டார். அதன்படியே ராணுவத்தில் சேர்ந்தார். ஆனால், எதிர்பாராத நேரத்துல குண்டடிபட்டார். இதனால ராணுவத்திலிருந்து வெளியேற வேண்டிய சூழல். 

அவருக்குள்ள சினிமா ஆசை இருந்தது. சொல்லப்போனா ராணுவத்துல சேரணும் என்பதை விட சினிமாவில் நடிக்கணும் என்பதுதான் அவரோட தணியாத தாகம்.இப்ப கிடைச்ச வாய்ப்பை பயன்படுத்தி சினிமாவில் நடிக்க முழுமூச்சா இறங்கினார். 

ஆரம்பத்துல நாடகங்கள்ல நடிச்சார். அந்தக் காலத்துல சினிமாவில் நடிப்பதற்கான என்ட்ரி நாடகங்கள்ல நடிப்பதுதானே? காரைக்கால் ‘கார்க்கோடகன் நாடகக் குழு’வில் சேர்ந்து தொடர்ந்து ஏராளமான மேடை நாடகங்கள்ல நடிச்சார். எல்லா நாடகங்களிலும் அப்பாதான் கதாநாயகன்.

சினிமாவில் நடிக்கணும் என்கிற அவரது ஆசை காரணமா 1970கள்ல ‘திருமுருகன் திரையரங்கம்’ என்கிற டூரிங் கொட்டகையை சொந்தமா நடத்தினார். அப்பாவோட திறமைக்கும் தேடலுக்கும் பலன் கிடைக்க ஆரம்பிச்சது...’’ நிறுத்திய நிவாஸ், சில கணங்களுக்குப் பின் தொடர்ந்தார்.‘‘சினிமாவில் சில வாய்ப்புகள் கிடைச்சது. எல்லாமே முதன்மை கதாபாத்திரமாகவே வரத் துவங்கிச்சு. பல படங்கள்ல நடிக்கத் தொடங்கியவருக்கு காலம் வில்லன் கதாபாத்திரங்களையே கொடுக்கத் துவங்கியது. 

அதையும் தாண்டி அடுத்தடுத்து குணச்சித்திர கதாபாத்திரங்கள் கிடைச்சது. ஆனா, திரைத்துறை பரமபதம் இல்லையா... ஏற்ற இறக்கங்கள் மாறி மாறி வரத்தானே செய்யும்... அப்படி அப்பாவுக்கு ஒரு கட்டத்துக்குப் பிறகு என்ன காரணம்னு புரியாத நிலைல துண்டுக் கதாபாத்திரங்கள் மட்டுமே கிடைச்சது.

ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் அளவுக்கு சினிமா எங்கப்பாவை ஓரம் கட்டியது. ஆனாலும் அப்பா துவண்டு போகலை. அடுத்து மிகப்பெரிய அடியெடுத்து வைக்க முடிவு செய்தாரு.எங்க தாத்தா - அப்பாவின் அப்பா - மிராசுதார்னு சொன்னேன் இல்லையா... தாத்தா, தன் சொத்துக்களை தன் பிள்ளைகளுக்கு பிரித்துக் கொடுத்தாரு. 

அந்தவகைல தனக்கு வந்த சொத்துக்களை அப்பா வித்து, ‘சூரிய நமஸ்காரம்’ என்கிற படத்தை, தானே தயாரிச்சாரு. இதுல எங்கப்பா ஆதித்தன்தான் கதாநாயகன். அப்பாவைப் பத்தி தெரிஞ்சவங்க குறைந்த சம்பளத்துல கதாநாயகியா நடிக்க சம்மதிச்சாங்க. அவங்க வேற யாருமில்ல... கே.ஆர்.விஜயா அம்மாதான்.

ஆனா, யார் கண் பட்டுச்சோ... ஒரு கட்டத்துல ஃபைனான்சியர் பின்வாங்கிட்டாரு. மொத்த படப்பிடிப்பும் நின்னுடுச்சு. நினைச்சுப் பார்க்க முடியாத அளவுக்கு பொருளாதார அடி. ஏராளமான இழப்பு. அதுக்குப் பிறகு வறுமைதான்...’’ சொல்லும்போதே நிவாஸின் கண்கள் கலங்குகின்றன.

இதன் பிறகு கிடைத்த வேலைகளை எல்லாம் செய்தபடி வாழ்ந்திருக்கிறார் ஆதித்தன். 1986ம் ஆண்டு ‘கைதியின் தீர்ப்பு’ படத்தில் அவருக்கு வில்லன் கதாபாத்திரம் கிடைத்தது. எனினும் அது போதவில்லை. 

டெய்லர் கடையில் வேலை செய்யத் துவங்கினார். ஆதித்தனுக்கு இரண்டு மனைவிகள். சந்திரா, மற்றும் பத்மா. முதல் மனைவிக்கு ஐந்து பிள்ளைகள். இரண்டாவது மனைவிக்கு நான்கு பிள்ளைகள். அதில் கடைசி மகன்தான் நிவாஸ் ஆதித்தன்.

ஆதித்தன் சொந்தமாக சினிமா திரையரங்கம் நடத்தியவர் என்பதால், அந்த அனுபவத்தை பயன்படுத்திக்கொள்ள ‘பி.எஸ்.ஆர் திரையரங்கம்’ அவருக்கு வேலை கொடுத்தது. துவக்கத்தில் சூப்பர்வைசராக இருந்தவர், ஒரு கட்டத்தில் டிக்கெட் விநியோகத்தில் உட்கார வைக்கப்பட்டார். தன் நிலையை நினைத்தும், தான் கடந்து வந்த பயணத்தையும் அசைபோட்டார். விரக்தி. 

வெறுமை சூழ்ந்தது.உடனே தன் சேகரிப்பில் இருந்த தன்னைக் குறித்து பத்திரிகைகளில் வந்த செய்திகள், புகைப்படங்கள், ‘சூரிய நமஸ்காரம்’ படத்தின் ஃபிலிம் ரோல்கள்... என தன்னைக் குறித்த அனைத்து அடையாளங்களையும் தீயில் எரித்திருக்கிறார்.எத்தனையோ வருத்தங்கள்... சினிமா மேல் கோபங்கள்... அனைத்தும் அவருக்குள் இருந்தபடி அவரைப் பொசுக்க... ஒருநாள் காலதேவன் அவரை அழைத்துக்கொண்டான்.

ஆதித்தன் என்னும் நடிகர், தயாரிப்பாளர், ஹீரோ... இருந்த அடையாளம் ஒன்று கூட இப்பொழுது இல்லை.அவர் மகன் நிவாஸ் ஆதித்தன்தான், தன் தந்தையின் கதையை உலகுக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறார். அவரும் நடிகராக  இந்த தீபாவளிக்கு கேம் ஆஃப் லோன்ஸ் படம் கொடுத்திருக்கிறார்.

தனது கடைசிக் காலத்தில் நலிந்த கலைஞர்களுக்கான உதவித் தொகையாக 500 ரூபாய் பெற்று ஆதித்தன் வாழ்ந்திருக்கிறார்.சில கலைஞர்களை உச்சத்தில் அமரவைக்கும் திரைத்துறை, ஆதித்தன் மாதிரியான பல கலைஞர்களை அடையாளமே தெரியாத அளவுக்கு புதைத்திருக்கிறது.

இன்னும் எத்தனை ஆதித்தன்கள் சென்னையில், தமிழகத்தில், தென்இந்தியாவில், இந்தியாவில், உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்களோ..?

செய்தி: ஷாலினி நியூட்டன்

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்