உலகின் ஒரேயொரு மிதக்கும் அஞ்சலகம்!



உலகிலேயே மிகப்பெரிய அஞ்சல் சேவையைக் கொண்ட நாடு, இந்தியாதான். இங்கே உள்ள கிராமப்புறங்களில் 1,49,385 அஞ்சலகங்களும், நகர்ப்புறங்களில் 15,614 அஞ்சலகங்களும் உள்ளன. ஆக மொத்தம் 1,64,999 அஞ்சலகங்கள் இருந்தாலும், முற்றிலும் வித்தியாசமானது இந்த மிதக்கும் அஞ்சலகம். 

அதென்ன மிதக்கும் அஞ்சலகம்? 

ஜம்மு காஷ்மீரின் கோடைகால தலைநகரமான ஸ்ரீநகரில் அமைந்திருக்கிறது, தால் ஏரி. உள்ளூர்வாசிகள் மட்டுமல்லாமல், உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வருகை தரும் ஓர் இடம் இது. ஜம்மு காஷ்மீரின் இரண்டாவது மிகப்பெரிய ஏரியும் இதுவே. இந்த தால் ஏரியில் வீற்றிருக்கிறது உலகின் ஒரேயொரு மிதக்கும் அஞ்சலகம். அதாவது, ஒரு படகு வீடு, தால் ஏரியில் அஞ்சலகமாக இயங்கி வருகிறது. 

எப்போதுமே தண்ணீரிலேயே மிதந்துகொண்டிருப்பதால் இதனை மிதக்கும் அஞ்சலகம் என்று அழைக்கின்றனர். இணையதளம், அலைபேசி இல்லாத காலகட்டத்தில், 1953ல் ஆரம்பிக்கப்பட்டது இந்த மிதக்கும் அஞ்சலகம். அப்போது தால் ஏரியைச் சுற்றி வசித்து வந்தவர்கள் ஒரு படகின் மூலமாக கடிதங்களை அனுப்பியும், பெற்றும் வந்தனர். இதற்காக பிரத்யேகமாக ஒரு படகு இயங்கி வந்தது. பல வருடங்களாக தால் ஏரியின் அஞ்சல் சேவையை அந்தப் படகுதான் செய்து வந்தது. 

கடந்த 2011ம் வருடம் ஜம்மு காஷ்மீரின் அஞ்சல்துறையில் பணியாற்றி வந்த உயர் அதிகாரியான ஜான் சாமுவேல் என்பவர், அந்தப் படகுச் சேவையை மிதக்கும் அஞ்சலகமாக மாற்றியமைத்தார். அத்துடன் அந்தப் படகு புதுப்பிக்கப்பட்டு, அஞ்சலகம் நடத்துவதற்குரிய அனைத்து வசதிகளும் செய்யப்பட்டன. 

ஸ்ரீநகர் அஞ்சல்துறையின் நிர்வாகத்தின் கீழ், முன்பைவிட உற்சாகத்துடன் இயங்க ஆரம்பித்தது மிதக்கும் அஞ்சலகம். எழுபது வருடங்களுக்கு மேலாக தால் ஏரிப் பகுதியில் வசிப்பவர்களுக்கு வெளி உலகத்துடன் தொடர்புகொள்வதற்கான சாதனமாக இந்த மிதக்கும் அஞ்சலகம் இருந்து வருகிறது. 

ஆம்; இ-மெயில், வாட்ஸ்அப் என பல இணைய வசதிகள் வந்த பிறகும் கூட தால் ஏரி மக்கள் இந்த அஞ்சலகத்தை தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். தங்களது உறவினர்களுக்கு இந்த அஞ்சலகம் மூலமாக கடிதம் அனுப்புவதை ஒரு சடங்குபோல அந்த மக்கள் கடைப்பிடிக்கின்றனர். 

பல வருடங்களாக தால் ஏரியைச் சுற்றி வசித்து வந்த உள்ளூர்வாசிகள் மட்டுமே மிதக்கும் அஞ்சலகச் சேவையைப் பயன்படுத்திவந்தனர். அஞ்சலகத்தைப் புதுப்பித்த பிறகு தால் ஏரியைச் சுற்றிப்பார்க்க வரும்  சுற்றுலாப் பயணிகளையும் மிதக்கும் அஞ்சலகம் கவர்ந்தது. 

‘‘இது போஸ்ட் ஆபீஸுக்கும் மேலான ஒன்று. இது காஷ்மீர் பாரம்பரியத்தின் அடையாளம், எங்களின் கடந்த காலத்தையும், நிகழ்காலத்தையும் இணைக்கும் பாலம். நாங்கள் எப்படி இணைந்திருந்தோம் என்பதை நினைவுபடுத்தும் சின்னம்...’’ என்று புகழ்கிறார் மிதக்கும் அஞ்சலகத்தில் பணிபுரியும் தாந்த்ரே. இவருடன் சேர்ந்து நான்கு பேர் மிதக்கும் அஞ்சலகத்தில் பணிபுரிகின்றனர். 

‘‘செல்போன், இ-மெயில், கூரியர் வசதிகள் அறிமுகமாவதற்கு முன்பு, தால் ஏரி மக்கள் தங்களின் கடிதங்கள் மற்றும் பொருட்களை இந்த ஹவுஸ்போட் மூலமாகத்தான் அனுப்பினார்கள். 

நான்தான் ஏரி முழுவதும் சுற்றி கரைகளில் இருப்பவர்களிடமிருந்து கடிதங்களையும், பொருட்களையும் சேகரித்து வருவேன். பிறகு அவை உரிய முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த ஹவுஸ்போட் எங்கள் வாழ்க்கையின் அடையாளம்...’’ என்று சொல்கிறார் தாரிக் அகமது. 

மிதக்கும் அஞ்சலகம் செயல்படும் படகுவீட்டின் உரிமையாளர் இவர். ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் 20 பேராவது மிதக்கும் அஞ்சலகத்துக்கு பார்சல் அல்லது கடிதம் அனுப்ப வருகை தருகின்றனர். இதில் உள்ளூர்வாசிகளும், சுற்றுலாப் பயணிகளும் அடங்குவார்கள். 

காஷ்மீரின் சால்வை, குங்குமப்பூ, வால்நட் போன்ற பொருட்களை மிதக்கும் அஞ்சலகம் மூலமாக தங்களின் அன்புக்குரியவர்களுக்கு அனுப்புகிறார்கள் சுற்றுலாப் பயணிகள். 
உள்ளூர்வாசிகள் கைகளால் எழுதப்பட்ட கடிதங்களையும், வாழ்த்து அட்டைகளையும் ஏரியைத் தாண்டி வெளியூர்களில் இருக்கும் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் அனுப்புகின்றனர். 

மட்டுமல்ல, ஒவ்வொரு நாளும் மிதக்கும் அஞ்சலகத்தைச் சுற்றிப்பார்க்கவும், புகைப்படங்கள் எடுக்கவும் வருகை தருபவர்களின் எண்ணிக்கை ஏராளம். தால் ஏரியில் அதிக சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் இடமே இந்த மிதக்கும் அஞ்சலகம்தான். 

‘‘சில சுற்றுலாப் பயணிகள் நீண்ட கடிதத்தை எழுதி அனுப்புகிறார்கள். சிலர் அஞ்சலகத்தில் அமர்ந்தே கடிதம் எழுதுவார்கள். சிலர் ஒரேயொரு வரி கடிதம்தான். அந்த வரி கூட அவர்களுக்கும் இந்த இடத்துக்குமான பிணைப்பைத்தான் சொல்லும். தால் ஏரிக்கு வருகை தரும் ஒவ்வொருவரும் இந்த ஏரியிலிருந்து ஏதாவது ஒரு நினைவை எடுத்துக்கொண்டு செல்ல விரும்புகின்றனர். அது புகைப்படத்தைவிட மேலானதாக இருக்க வேண்டும் என்பது அவர்களது விருப்பம். 

அதனால் இந்த அஞ்சலகம் மூலம் தங்களின் குடும்பத்தினருக்கோ அல்லது நண்பர்களுக்கோ கடிதம் எழுதுகிறார்கள், பரிசுப்பொருட்களை அனுப்புகிறார்கள். சிலர் பத்துக்கும் மேலான கடிதங்களை எழுதி, பல நண்பர்களுக்கு அனுப்புவதைப் பார்த்திருக்கிறேன். மிதக்கும் அஞ்சலகத்தில் இருந்து அனுப்பப்பட்ட கடிதம் அல்லது பரிசுப் பொருள் என்பதே அவர்களுக்குப் பெரும் நினைவாக மாறுகிறது...’’ என்கிறார் தாந்த்ரே. 

நவீன காலத்துக்கு ஏற்ப பல அஞ்சல் சேவைகளையும் செய்து வருகிறது, மிதக்கும் அஞ்சலகம். ஆம்; வழக்கமான கடிதம் அனுப்பும் சேவை மட்டுமல்லாமல், விரைவஞ்சல் (Speed Post) சேவையும் உள்ளது. ஒவ்வொரு நாளும் மிதக்கும் அஞ்சலகத்தில் அனுப்பப்படும் கடிதங்களும், பொருட்களும் கதிரவன் மறைவதற்குள் கரைக்குச் சென்று, உரிய இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். 

மிதக்கும் அஞ்சலகத்தில் இரண்டு அறைகள் உள்ளன. அதில் கம்ப்யூட்டர், லாக்கர் என நவீன அஞ்சலகத்தில் உள்ள அனைத்து வசதிகளும் இருக்கின்றன. இதுபோக சிறிய அளவிலான அஞ்சல் தலை மியூசியமும் உள்ளது. வழக்கமான கடிதப் போக்கு வரத்து இன்று உயிருடன் இருப்பதற்கு மிதக்கும் அஞ்சலகமும் ஒரு காரணம் என்று சொன்னால் அது மிகையாகாது.

த.சக்திவேல்