அப்பா எனக்கு சவால்களை வைச்சுகிட்டே இருக்கார்...
துருவ் விக்ரம் Exclusive
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் தீபாவளியை ஒட்டி வெளியான ‘பைசன்’ வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. ஒன்றரை வருடங்களுக்கு மேலாக இப்படத்துக்காக தன்னையே மாற்றிக் கொண்டிருக்கும் துருவ், அதற்கான பலனை இப்பொழுது அறுவடை செய்தபடி இருக்கிறார். முகமெல்லாம் அவ்வளவு மகிழ்ச்சி. 90களில் ‘சீயான்’ விக்ரம் திரையில் பேசினால் எப்படி இருக்குமோ அப்படியிருக்கிறது இப்போதைய துருவ்வின் குரல்.
 ஏன் ‘பைசன்’தான் உங்களுக்கு முதல் படம்னு சொல்றீங்க..?
தப்பா சொல்லலையே... அறிமுகமான ‘ஆதித்ய வர்மா’ ரீமேக் படம். அப்புறம் நடிச்ச ‘மகான்’, அப்பாவோட படம். ஆனா, ஒரு நடிகனா ஒரு படத்துக்காக முழு அர்ப்பணிப்பா வேலை செய்ததும், ஒரு மனிதனா இந்த சமூகத்துக்கு நான் நடிச்ச படம் வழியா ஒரு விஷயத்தை சொல்லியிருக்கேன் என்கிற நிம்மதியும் ‘பைசன்’லதான் கிடைச்சிருக்கு. அப்ப இதைதானே எனது முதல் படம்னு சொல்ல முடியும்!
 ஒரு கபடி வீரரா மாற கஷ்டமா இருந்ததா..?
கஷ்டம்னு சொல்ல மாட்டேன். நிறைய உழைச்சேன்னு வேணும்னா சொல்லலாம். நிறைய ஒர்க்அவுட் செய்தேன். நிஜமாகவே கபடி விளையாடினேன்.இதை ஏன் அழுத்தி சொல்றேன்னா... டென்னிஸ், பேட்மிண்டன்... இப்படிதான் விளையாடியிருக்கேன். கபடி..? ம்ஹும். இன்டோர் ஸ்டேடியம் அல்லது செப்பனிடப்பட்ட மைதானத்துல இல்ல... புழுதி பறக்கும் மண்ணுல, கல்லுல ஆடணும். பாதுகாப்பா கால் முட்டிக்கான கேப், ஷூ, கை முட்டியில் பெல்ட் மாதிரியான எந்த பாதுகாப்பு அம்சங்களும் கிடையாது.நான் வாழ்ந்த வாழ்க்கைல இந்த மாதிரியான விளையாட்டெல்லாம் அறிமுகமாகலை... அதனால பழக்கமில்லை. 
மண்ணுல விளையாடறப்ப தோல் கிழியும். முட்டில அடிபடும். கை, கால்கள்ல சிராய்ப்பு, அடி... கால் பாதம் தேய்ஞ்சு தோலே உராய ஆரம்பிச்சிடும். இதையெல்லாம் அவ்வளவு சந்தோஷமா அனுபவிச்சேன்.
அடிபடறப்ப மனசுக்குள்ள ‘ஜெயிக்கணும்னா கஷ்டப்பட்டுத்தான் ஆகணும்... எந்த வெற்றியும் சுலபமா கிடைச்சிடாது. உன் அப்பா அனுபவிச்ச கஷ்டங்களுக்கு முன்னாடி இதெல்லாம் ஒண்ணுமேயில்ல’னு ஒரு குரல் ஒலிக்கும். அடுத்த செகண்ட், வலியெல்லாம் பறந்துடும். ஆனா, சின்னதா எனக்கு அடிபட்டா கூட மாரி சார் பதறிப் போய் ஓடி வந்து என்னைத் தூக்குவார். மாரி செல்வராஜ் பயிற்சி கொடுத்தாரா..?
வாழ வைச்சார்! ஆமா... முதல்ல என்னை ஒரு ஊர்ல கொண்டுபோய் விட்டார். அங்க இருக்கும் சின்னச் சின்ன பசங்க கூட வெறித்தனமான கபடி வீரர்கள். அவங்களோடு கபடி ஆடச் சொன்னார். அவங்களோடு வாழச் சொன்னார். தினமும் குறைந்தது ஒன்றரை மணி நேரம் கபடி விளையாட்டு. தொடர்ந்து நீச்சல். அப்புறம் ஊர்ல இருக்கற ஆடு மாடுகளை மேய்க்கணும். இப்படி நிறைய டாஸ்க் கொடுத்தார்.
ஒரு கட்டத்துல நான் யார், எங்க இருந்தேன்... இப்ப எங்க இருக்கேன் என்பதே மறந்துடுச்சு. அந்த ஊர்க்காரனாவே வாழ ஆரம்பிச்சுட்டேன். அந்த மக்களும் அவங்கள்ல ஒருத்தனா என்னை ஏத்துகிட்டு பழக ஆரம்பிச்சாங்க.இந்த இயல்பு வந்த பிறகுதான் மாரி சார் முகத்துல சிரிப்பையே பார்த்தேன். இதை நீங்க பயிற்சினு சொன்னா... ஐ அக்சப்ட். பட், எனக்கு இது வாழ்க்கையோட தொடக்கமா இருக்கு! நடிப்பைத் தாண்டி வேறு எதில் எல்லாம் உங்களுக்கு ஆர்வம்..?
முன்னாடி போட்டோகிராபி, ஆர்ட்ல ஆர்வம் இருந்தது. சிங்கிள் பாடல்கள், மியூசிக்... இப்படியொரு கனவு. அப்பப்ப சிங்கிள் பாடல்கள் எழுதி, நானே பாடி ரிலீஸ் செய்திருக்கேன். இதெல்லாம் ‘பைசன்’ ப்ராஜெக்ட்டுக்கு முன்னாடி.
ஆனா, ‘பைசன்’ல ஒப்பந்தமாகி மாரி சாருடன் பழக ஆரம்பிச்சதும் சினிமா, நடிப்பு என்பது வெறும் பாடி பில்டிங், ஒர்க் அவுட் மட்டுமில்லனு புரிஞ்சுது. அதுஒரு ஓஷன். கடல். நீள, அகல, ஆழம் அதிகம். கடலை புரிஞ்சுக்கணும்னா கடல்ல இறங்கணும். இறங்கியிருக்கேன். புரிஞ்சுப்பேனான்னு தெரியலை! சினிமா பயணம் கிராண்டா ஆரம்பிக்கும்போதே, விமர்சனங்களும் கடினமாக ஆரம்பிச்சதே..?
ஆமா. நல்லது சொன்னா நிச்சயம் கேட்டுப்பேன். அதே சமயம் வதந்தி, அடிப்படை இல்லாத செய்திகள்ல கவனம் செலுத்தறதில்ல. சோஷியல் மீடியாவுல பெருசா ஆக்டிவ்வா இல்ல.
அப்பா என்ன சொல்றார்?
அவர் கதை, படங்கள்ல தலையிடவே மாட்டார். ‘பைசன்’ படத்துக்காக நான் கஷ்டப்பட்டதை பார்த்தப்ப அவர் வருத்தப்படல. மாறா, ஒரு படத்துல நடிப்பதற்காக போராட ஆரம்பிச்சுட்டான்னு சந்தோஷப்பட்டார். ஒரு விஷயம். அப்பா அளவுக்கு ஒரு படத்துக்காக மெனக்கெடுவேனானு தெரியல.
அந்த விஷயத்துல அப்பா இமயமலை. ஆனா, அப்பா செலுத்தற உழைப்பைப் பார்த்து இன்ஸ்பையர் ஆனவன் நான். அதனால குறைந்தபட்சம் பறங்கிமலை அளவுக்காவது கண்டிப்பா படத்துக்குப் படம், கேரக்டருக்கு கேரக்டர் எஃபெக்ட் போடுவேன். ‘பைசன்’ அதற்கான ஆரம்பம். மாரி சார், இந்த விளக்கை எரிய வைச்சிருக்கார். அணையாம பார்த்துப்பேன்.
எதைச் செய்தாலும் அப்பாவுடன் ஒப்பீடு இருக்கும்... அதுக்குத் தயாரா இருக்கீங்களா..?
தயார்படுத்திக்கிட்டேன்! ‘அகில்’னு எனக்கு பெயர் வைக்கதான் அம்மா விரும்பினாங்க. ஆனா, அப்பா தேர்வு செய்தது ‘துருவ்’. துருவ நட்சத்திரம் மாதிரி வரணும்னு நான் பிறந்தப்பவே முடிவு செய்துட்டார் போல!எந்தத் துறைக்கு நான் வரணும்னு அப்பாவும் சரி... அம்மாவும் சரி... முடிவு பண்ணலை. ஆனா, நான் தேர்வு செய்ததை முழுமையா ஆதரிச்சு தேவையான ஆதரவை கொடுத்தாங்க.சினிமா துறையை தேர்ந்தெடுத்தது நான்தான். அப்பவும் அப்பா, அவரை விட நான் முன்னாடி போகணும்னுதான் விரும்பினார்.
வாழ்க்கையோட ஒவ்வொரு கட்டத்துலயும் அவர் எனக்கு மறைமுகமா சவால்களை வைச்சுகிட்டே இருந்தார். ‘நான் நடிக்க வந்தப்ப பண வசதி குறைவு, வாய்ப்புகளுக்காகவும் நிறைய உழைக்க வேண்டியிருந்தது. உனக்கு எல்லாமே இருக்கு. எல்லாமே சுலபமா நடக்குது. அப்படியிருக்கிறப்ப குறைந்தபட்ச உழைப்புகூட உன்னால செலுத்த முடியாதா’னு கேட்காம கேட்பார்.
இந்த சவால்... சவால்கள் எனக்குப் பிடிச்சிருக்கு.நிச்சயமா என்னுடைய ஒவ்வொரு அசைவையும் அப்பாவோடு ஒப்பிடுவாங்க. தவிர்க்கவே முடியாது. ஆனா, ஆரம்பத்துலதான் அப்பாவின் பின்னணி சினிமாவுல எனக்கு உதவும்.
தொடர்ந்து முன்னேறணும்னா, நிலைத்து நிற்கணும்னா, கஷ்டப்பட்டுதான் ஆகணும். ஈசியா இதெல்லாம் கிடைச்சுடாது. இதுதான் எதார்த்தம்.நிதர்சனத்தை நல்லா புரிஞ்சு வைச்சிருக்கேன். அதனால அப்பாவுடன் ஒப்பீடு செய்யறப்பவும், ‘அப்பா விக்ரம், மகனுக்கு எல்லாமே ஈசி’ என்கிற விமர்சனத்தையும் பொருட்படுத்தறதில்லை. லைட்டான கதை, சாக்லேட் பாய், காதல், டூயட்..?
அப்படிப்பட்ட கதைகள் என்னைத் தேடி வரும்போது... ஒய் நாட்? இந்த நிமிஷம் வரை இப்படிப்பட்ட கதைகள் என்னைத் தேடி வரலை. ‘பைசன்’ படம் இப்ப பரவலா பேசப்படுது. மாபெரும் வெற்றினு சொல்றாங்க. நிறைவா மகிழ்ச்சியா இருக்கு. ஒருவேளை இதுக்குப் பிறகு சாக்லெட் பாய் கதைகள் என்னைத் தேடி வரலாம். இப்படியான கதைதான்னு இல்லாம, சிறப்பான எந்தக் கதைக்குள்ளும் என்னை பொருத்திக்கணும்னு நினைக்கறேன்.அம்மா யாருக்கு ரசிகை...
அப்பாவுக்கா? உங்களுக்கா?
ரொம்ப ரிஸ்க்கான கேள்வி. ஆனா, என்னதான் கணவன் ஆயிரம் செய்தாலும், மகன் செய்கிற ஒண்ணு மொத்தத்தையும் ஓரம் கட்டிடும்னு சொல்லுவாங்க. அப்படி அம்மா அனேகமா எனக்குதான் ரசிகைனு நினைக்கிறேன். ஏன்னா, அப்பாவை விட என்னை அதிகம் அம்மா பாராட்டி கேட்டிருக்கேன். ஒரு தந்தையா, இதை நினைச்சு அப்பா மகிழ்வார்னுதான் நினைக்கறேன்! மே பி அப்பாவும் எனக்கு ரசிகரா இருக்கலாம்!
ஷாலினி நியூட்டன்
|