வாழ்க்கையில் ஃபுட்பால் ஆடியதில்லை...ஆனால், இவர்தான் கால்பந்து பாட்டி!



வாழ்க்கையில் ஒருமுறை கூட விளையாடாத கால்பந்து விளையாட்டில் புகழ்பெற்றவராக, வழிகாட்டியாக வலம் வருகிறார் லைபி ஃபன்ஜோபாம் என்ற பெண்மணி. 
கால்பந்து வீராங்கனைகளின் மத்தியிலும், மணிப்பூர் பெண்களின் மத்தியிலும் பிரபலமான ஓர் ஆளுமை இவர். லைபி உருவாக்கிய கால்பந்து வீராங்கனைகள் தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் சாதனைகள் புரிந்து வருகின்றனர். இப்போது லைபியின் வயது 65.

யார் இந்த லைபி ஃபன்ஜோபாம்?

மணிப்பூரின் இம்பால் கிழக்கு மாவட்டத்தில் அமைந்திருக்கும் அழகான கிராமம், ஆன்றோ. இந்தக் கிராமத்தின் அடையாளமாக இருக்கும் ஒரு பெண்தான், லைபி. கல்வித்துறையில் பணியாற்றி, ஓய்வுபெற்றுவிட்டார். கடந்த 30 வருடங்களாக கால்பந்து விளையாட்டின் மூலம் ஆயிரக்கணக்கான பெண்களின் வாழ்க்கையில் ஒளியைப் பாய்ச்சி வரும் இவரது அர்ப்பணிப்பும், தன்னலமற்ற சேவையும் போற்றுதலுக்குரியது. இத்தனைக்கும் ஒருமுறை கூட கால்பந்து விளையாடாதவர் இவர். 

லைபி வாழ்ந்து வந்த கிராமத்தில் சிறு வயதிலேயே பெண்களுக்குத் திருமணம் செய்து வைத்துவிடுவார்கள். அதனால் பல பெண் குழந்தைகள் பள்ளிப்படிப்பைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு, யாரோ ஒருவருக்கு மனைவியாகி விடுவார்கள். அதற்குப் பிறகு அவர்களது கல்வியும், கனவும் புதைக்கப்பட்டுவிடும்.

 பதின் பருவத்திலிருந்தே குடும்பம், குழந்தைகளுக்காக வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார்கள். 2001ம் வருடம் லைபியின் கிராமத்தில் செய்யப்பட்ட ஆய்வின்படி, அங்கே வசித்து வந்த பெண்களில் வெறும் 44 சதவீதம் பேர்தான் கல்வியறிவு பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

அந்தக் கிராமத்தில் நடக்கும் குழந்தை திருமணங்கள்தான் கல்விக்குப் பெரும் தடையாக இருந்ததும் ஆய்வில் தெரியவந்தது. இப்படியான ஒரு இக்கட்டான சூழலில், ஆன்றோ கிராமத்திலிருந்த அனைத்து தடைகளையும் உடைத்தெறிந்து, முதன்முதலாக கல்லூரிக்குச் சென்று பட்டம் பெற்ற பெண் லைபிதான். 

அதுவும் 40 வருடங்களுக்கு முன்பே பட்டம் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. எண்பதுகளின் ஆரம்பத்தில் மணிப்பூரில் நிலவிய அரசியல் சூழல், இளைஞர்களின் மத்தியில் ஒருவித கட்டுப்பாடற்ற தன்மையையும், கொந்தளிப்பான மனநிலையையும் உருவாக்கியது. இதில் பெண்களும் அதிகளவில் பாதிப்புக்குள்ளானார்கள். 

இந்தச் சூழலிலிருந்து பெண்களைத் திசை திருப்ப, மணிப்பூர் பெண்களைக் கால்பந்து விளையாட்டில் ஈடுபடுத்தினார் லைபி. இதற்காக ‘ஆன்றோ மஹிலா மண்டல் அசோசியேஷன்’ (Amma) எனும் ஃபுட்பால் கிளப்பை ஆரம்பித்தார் லைபி. ‘அம்மா’ கிளப் பெண்களின் மத்தியில் கால்பந்து விளையாட்டை ஊக்குவித்ததோடு மட்டுமல்லாமல், பெண்களுக்குப் பாதுகாப்பு அரணாகவும், அவர்கள் தங்களது வாழ்க்கையின் நோக்கத்தை அறிந்துகொள்வதற்கான ஓர் இடமாகவும் இருந்து வருகிறது. 

லைபிக்கு கால்பந்து விளையாடிய எந்த அனுபவமும் இல்லை. இருந்தாலும் கால்பந்து விளையாட்டைப் பற்றித் தெரிந்துகொண்டு, முழு அர்ப்பணிப்புடன் சிறுமிகளுக்கும், இளம் பெண்களுக்கும் கால்பந்து விளையாட்டைக் கற்றுக்கொடுத்தார். 

எந்தவித வசதிகளும் இல்லாத தொலைதூர கிராமமான ஆன்றோவில் கால்பந்து விளையாடுவதற்கான மைதானத்தை உருவாக்கினார். 

கால்பந்து விளையாட்டுடன் குழுவாக இணைந்து செயல்படுதலின் முக்கியத்துவம், ஒழுக்கம், மீள்தன்மை போன்ற நற்பண்புகளையும் கற்றுக்கொடுத்தார். 

இதற்கிடையில் நெசவுத் தொழில் செய்தும், கல்வித்துறையில் பணியாற்றியும், தனது சிறு பண்ணையைக் கவனித்தும் வந்தார் லைபி. இதில் கிடைக்கும் வருமானத்தைக் கூட  கிளப்பின் முன்னேற்றத்துக்காகச் செலவிட்டார்.‘‘முதலில் உங்களின் சொந்தக் கால்களில் நில்லுங்கள்; உங்களுக்குத் தெரிந்த வழியில் சம்பாதியுங்கள்; உங்களுக்கான அடையாளத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள்...’’ என்று பெண்களுக்கான ஆலோசனைகளை வழங்குகிறார் லைபி. 

இவரது கிளப்பில் தையல் பயிற்சி, பட்டுப்புழு வளர்ப்பு, கம்ப்யூட்டர் கல்வி என பெண்களுக்கான தொழில் வாய்ப்புகளை உருவாக்கித்தரும் பயிற்சிகளும் அளிக்கப்
படுகிறது. ‘அம்மா’ கிளப்பை ஆரம்பித்த சில வருடங்களிலேயே, மணிப்பூர் கால்பந்து சங்கத்தின் அங்கீகாரத்தைப் பெற்றுவிட்டது. 

இன்று தேசிய அளவில் முக்கியமான கால்பந்து கிளப்பாக மிளிர்கிறது, ‘அம்மா’.  இதில் சேர்ந்து பயிற்சி பெற்ற பல வீராங்கனைகள் தேசிய அளவில் விளையாடி, தங்களின் திறமைகளை நிரூபித்து வருகின்றனர். லைபியை அந்தப் பெண்கள் பாட்டி என்று உரிமையுடன் அழைக்கின்றனர். 

‘‘பாட்டி ஃபுட்பால் விளையாட மாட்டாங்க. ஆனால், அவங்களோட எல்லா சக்தியையும் எங்களுக்குக் கொடுத்துட்டாங்க...’’ என்கிறார் நிர்மலா தேவி. மணிப்பூரைச் சேர்ந்த முக்கியமான கால்பந்து வீராங்கனை இவர். இந்தியாவில் பெண்களுக்கான தொழிற்முறை கால்பந்து கிளப்பான ‘சேது ஃபுட்பால் கிளப்’பின் கேப்டனாக இருக்கும் நிர்மலா தேவி, பெண்களுக்கான தேசிய அணியிலும் விளையாடி வருகிறார். இவர் ‘அம்மா’ கிளப்பில் பயிற்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மட்டுமல்ல; மணிப்பூரைச் சேர்ந்த திரைப்பட இயக்குநரும், தேசிய விருது பெற்றவருமான மீனா லாங்ஜாம் என்பவர், லைபியின் அசாதாரணமான வாழ்க்கையை ‘ஆன்றோ ட்ரீம்ஸ்’ என்ற பெயரில் ஆவணப்படமாக்கியிருக்கிறார். 

ஒரு மணி நேரம் ஓடும் இந்த ஆவணப்படம், லைபியும், அவரது கிளப்பில் பயிற்சி பெற்ற பெண்களும் எப்படி சமூக விதிகளை உடைத்து முன்னேறி வந்தார்கள் என்பதையும், ஆன்றோ கிராமத்தின் பழமையான கட்டுப்பாடுகளையும், அதன் பொருளாதாரச் சவால்களையும் எப்படி எதிர்த்து தங்களுக்கான பாதைகளை உருவாக்கிக் கொண்டனர் என்பதையும் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறது. 

இதில் கதை சொல்லியாக நிர்மலாதேவி வருகிறார். இரண்டு வருடங்களுக்கு முன்பு இந்த ஆவணப்படம் சர்வதேச அளவில் நடந்த திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு, பாராட்டுகளை அள்ளியது குறிப்பிடத்தக்கது. அத்துடன் லைபியின் தன்னலமற்ற செயல்பாட்டுக்கு ஓர் அங்கீகாரமாகவும், சாட்சியாகவும் என்றென்றும் இருக்கும் இந்த ஆவணப்படம்.

த.சக்திவேல்