பெண்கள் இதைப் படிக்காதீங்க!
மேக்கப்பில்லாமல் பெண்கள் இல்லை. அந்தளவுக்கு ஊனுடனும் உடலுடனும் அரிதாரம் பூசிக் கொள்வது கலந்துவிட்டது. ஆனால், இது ஆடம்பரமானதல்ல என்ற எண்ணம் நீக்கமற நிறைந்திருப்பதுதான் இதில் முக்கியமான விஷயம்.யெஸ். பெண்களுக்கு மேக்கப் என்பது அத்தியாவசியத் தேவையாக மாறிவிட்டது. அதிகப்படியாக இல்லையென்றாலும், ஃபவுண்டேஷன், கண் மை. லிப்ஸ்டிக் இல்லாமல் இன்று பெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்வதில்லை.
ஆனால், மேக்கப்பால் குறிப்பிட்ட நேரம் மட்டுமே சருமத்தை பளபளப்பாக வைத்திருக்கமுடியும். எனில் வாழ்நாள் முழுதும் சருமம் பளபளப்பாகவும், பொலிவாகவும், வயது குறைந்த தோற்றத்தினைப் பெற என்ன செய்ய..?
 இதற்கு அழகியல் சிகிச்சைகள் தீர்வாக அமைந்து வருகின்றன. அப்படிப்பட்ட சிகிச்சை முறைகளுக்கு தனிப்பட்ட பயிற்சியினை அளித்து வருகிறார் அழகியல் நிபுணரான கன்னியம்மாள் வெங்கடேசன். சென்னையில் இயங்கி வரும் ‘எலைட் எஸ்.ஆர்.எம் அழகியல் பயிற்சி மைய’த்தின் நிறுவனரான இவர் அழகுக்கலை நிபுணர்கள், மருத்துவர்கள் மற்றும் இல்லத்தரசிகளுக்கு என தனிப்பட்ட அழகியல் பயிற்சியினை அளித்து வருகிறார்.
 ‘‘நர்சிங் துறையில் டிப்ளமோ முடித்துவிட்டு என் கரியரை மருத்துவத்துறையில் செவிலியராக ஆரம்பித்தேன். அதில் எனக்கு பல ஆண்டுகள் அனுபவங்கள் இருந்தாலும் அழகுக் கலையின் மேல் ஏற்பட்ட ஆர்வத்தினால் அதற்கான பயிற்சிகளை எடுத்துக் கொண்டேன். மருத்துவப் பணியில் காஸ்மெட்டாலஜி துறையிலும் நான் பயணிக்க நேர்ந்தது. பிரஸ்ட் என்லார்ஜ்மெண்ட், லைப்போசக்ஷன் என காஸ்மெட்டாலஜி சார்ந்த சிகிச்சை முறைகளில் டாக்டருடன் இணைந்து செயல்பட்டேன்.
அப்போதுதான் அழகியல் பற்றி தெரிய வந்தது. நான் ஏற்கனவே அழகுக் கலை பயின்றிருந்ததால், அழகியல் குறித்தும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டு அமெரிக்கன் இன்ஸ்டிட்யூட்டில் டிரைக்காலஜி மற்றும் காஸ்மெட்டாலஜியில் ஃபெல்லோஷிப் செய்தேன்; பெர்மனென்ட் மேக்கப் குறித்தும் கற்றுக் கொண்டேன்.
அப்படி நான் கற்றுக்கொண்டதை மற்றவர்களுக்கு தரமான முறையில் சொல்லித்தர விரும்பினேன். அதன் விளைவாகத்தான் அழகியல் பயிற்சி மையத்தினை துவங்கினேன்...” என்றவர் தன் பயிற்சி மையத்தில் அளிக்கப்படும் பயிற்சிகள் குறித்து விவரித்தார்.
‘‘அழகியல் பயிற்சியினை மெடிக்கல், பாராமெடிக்கல் மற்றும் நான் மெடிக்கல் என மூன்று பிரிவுகளாகப் பிரித்து பயிற்சி அளிக்கிறோம். மெடிக்கல் பிரிவில் எம்பிபிஎஸ், சித்தா, ஆயுர்வேதம், யுனானி, எம்.டி.எஸ் மருத்துவர்கள் மட்டும்தான் பயிற்சி பெறமுடியும்.
இதில் ஏஸ்தெடிக் மெடிசன், ஏஸ்தெடிக் காஸ்மெட்டாலஜி, பெர்மனென்ட் மேக்கப் இன் காஸ்மெட்டாலஜி, கிளினிக்கல் காஸ்மெட்டாலஜி, டிரைக்காலஜி ஃபெல்லோஷிப் மற்றும் கிளினிக்கல் காஸ்மெட்டாலஜி மற்றும் டிரைக்காலஜியில் முதுகலை டிப்ளமோ பயிற்சிகள் அளிக்கிறோம்.
பாராமெடிக்கல் பிரிவில் காஸ்மெட்டாலஜியில் ஃபெல்லோஷிப், டிரைக்காலஜி, கிளினிக்கல் காஸ்மெட்டாலஜி மற்றும் பெர்மனென்ட் மேக்கப்பில் அட்வான்ஸ்ட் டிப்ளமோவும்; பெர்மனென்ட் மேக்கப் காஸ்மெட்டாலஜியில் முதுகலைப் பட்டப்படிப்பும் பெறலாம். இந்தப் பயிற்சியினை லேப் டெக்னீஷியன், செவிலியர்கள், இயன்முறை மருத்துவர்கள், மருந்தாளர்கள் மேற்கொள்ளலாம்.
அதேபோல் இல்லத்தரசிகள், அழகுக் கலை நிபுணர்கள், கல்லூரி மாணவர்களுக்கும் தனிப்பட்ட பயிற்சிகள் உள்ளன...’’ என்றவர் அழகியல் குறித்தும் அதில் செய்யப்படும் சிகிச்சைகள் பற்றியும் விவரித்தார்.
‘‘அழகுக் கலை மற்றும் அறிவியலை இணைத்து ஒருவரின் சருமம் மற்றும் தலைமுடியினை அழகாகவும் ஆரோக்கியமாகவும் மாற்றி அமைப்பதுதான் அழகியல். எதிர்காலம் அழகியல் என்பதால் டாக்டர்கள் உட்பட பலரும் இப்பயிற்சியினை எடுத்துக் கொள்ள விரும்புகிறார்கள். அதனாலேயே ஒருவரின் படிப்பிற்கு ஏற்ப பாடத்திட்டங்களை அமைத்திருக்கிறோம். காரணம், மருத்துவர்கள் செய்யக்கூடிய சிகிச்சை முறைகளை அழகுக்கலை நிபுணர்களோ இல்லத்தரசிகளோ செய்ய முடியாது.
ஒவ்வொருவருக்கும் ஏற்ப தனிப்பட்ட பாடங்களை பின்பற்றுகிறோம். பயிற்சிக்குப் பிறகு எழுத்து மற்றும் நடைமுறைத் தேர்வும் உண்டு. மாணவர்களுக்கு சிகிச்சைக்கான இயந்திரங்களை முறையாகக் கையாளும் பயிற்சியினை அளித்து அவர்களை முழுமையான அழகியல் நிபுணராக உருவாக்குகிறோம்.
பொதுவாக பெண்கள் வெளியே செல்லும் போது மேக்கப் இல்லாமல் செல்வதில்லை. அதிகம் இல்லையென்றாலும், காம்பாக்ட் பவுடர், புருவ திருத்தம் மற்றும் லிப்ஸ்டிக் போட்டுக் கொள்கிறார்கள். இவை முகம் கழுவியதும் நீங்கிவிடும். முகம் கழுவினாலும் சருமம் பளிச்சென்றும், புதுப்பொலிவுடனும் இருக்கச் செய்வதுதான் பெர்மனென்ட் மேக்கப். இந்த சிகிச்சையினை முறையாக எடுத்துக் கொண்டால் ஐந்து வருடம் வரை சருமம் பளபளப்பாகவும், பொலிவுடனும் இளமையாகவும் இருக்கும். காரணம், சருமத்தில் உள்ள கொலாஜனை இயற்கை முறையில் ஊக்குவித்து, ரத்த ஓட்டத்தினை அதிகரிக்கச் செய்கிறோம்.சிலருக்கு புருவங்கள் இருக்காது. அப்படியே இருந்தாலும் அடர்த்தியாக இருக்காது. ஒருவரின் புருவங்களை அழகாகவும் அடர்த்தியாகவும் மைக்ரோ பிளேடிங் மூலம் செய்யலாம்.
ஏற்கனவே உள்ள புருவங்களுக்கு இடையே பிக்மென்டேஷனை நிரப்பும்போது பார்க்க அடர்த்தியாக இருக்கும். ஐப்ரோவிற்கு மை தீட்ட வேண்டும் என்ற அவசியமில்லை. புருவங்களுக்கு இடையே சிகிச்சைகளை மேற்கொள்வதால், ஏற்கனவே இருக்கும் புருவ அமைப்பினை பாதிக்காது.
இன்று பலரும் கொரியன் சருமம் போன்று வழவழப்பாகவும், பளபளப்பாகவும் தங்களின் சருமம் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அவர்களின் சரும அமைப்பு போல் நம்முடையது இருக்காது என்றாலும், நம் சருமத்தை இளமையாகவும், பள பளப்பாகவும் அமைக்கமுடியும்.
பிபி க்ளோ செய்துகொண்டால் மேக்கப் போடுவதற்கான அவசியம் இருக்காது. நம் சரும நிறத்திற்கு ஏற்ப தாவரங்கள் கொண்டு தயாரித்த பிக்மென்டேஷனை ஊசிகள் கொண்டு சருமத்தில் செலுத்துவோம்.
அவை சருமத்திற்குள் ஊடுருவிச் சென்று கொலாஜனை அதிகரித்து, இறந்த செல்களை நீக்கி, ரத்த ஓட்டத்தை சீராக்கும். இதனால் சருமம் புத்துயிர் பெற்று பொலிவடையும். சருமம் மட்டுமில்லாமல் உதட்டின் நிறத்தையும் மாற்றி அமைக்கலாம். சிலருக்கு உதடு கருமையாக இருக்கும். அதில் நிறமிகளை செலுத்தினால், லிப்ஸ்டிக் போட்டது போல் உதட்டின் நிறம் மாறும்.
இவை தவிர மருக்களை நீக்கலாம். தலைமுடி வளர மைக்ரோநீடிலிங் செய்யலாம், கெமிக்கல் பீலிங் செய்வதன் மூலம் சருமத்தை வழவழப்பாக்கலாம். PRP (Platelet Rich Plasma) என்பது சருமம் மற்றும் தலைமுடிக்கான சிகிச்சை.
ஒருவரின் ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவினைப் பிரித்து அதனை சருமம் மற்றும் தலையில் முடியில்லாத பகுதியில் செலுத்த வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள கொலாஜன் அதிகரித்து இளமை தோற்றத்தை கொடுக்கும். தலையில் செலுத்தும் போது முடியில்லாத பகுதியில் முடி வளரும். இந்த சிகிச்சைகளை மேற்கொள்வதால், பிரச்னை ஏற்படும் என்று பயப்படத் தேவையில்லை. காரணம், இவையாவும் அறுவை சிகிச்சைகள் கிடையாது. நம் சருமத்திற்குத் தேவையான ஊட்டச்சத்தினை இயற்கை முறையில் ஊக்கப்படுத்தும் டெக்னிக். அதே சமயம் முறையாக பயிற்சி பெற்றவர்களிடம்தான் இவற்றை செய்துகொள்ள வேண்டும். இல்லையென்றால் சருமத்தில் தழும்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
அழகியல் பயிற்சிகளை பெண்கள் மட்டுமில்லை ஆண்களும் கற்றுக் கொள்ளலாம். இந்தத் துறையில் சிம்பிளான சிகிச்சையினை முறைப்படி கற்றுக்கொண்டாலே அவர்கள் மாதம்தோறும் கை நிறைய சம்பாதிக்க முடியும்...’’ என்கிறார் கன்னியம்மாள் வெங்கடேசன்.
ப்ரியா
|