லண்டன் மெட்ரோவில் ஒலிக்கும் காதல் குரல்!
இது லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டரில் உள்ள எம்பாங்க்மெண்ட் ரயில் நிலையத்தில் தினமும் நிகழும் காதல் கதை.நான்கு மெட்ரோ பாதைகள் இணையும் பிஸியான இந்த நிலையத்தில், பல ஆண்டுகளாக தினமும் வருகைதரும் ஒரு வயதான பெண்மணியை பார்க்கலாம். அதுவும் நார்தர்ன் லைன் நடைமேடையில் தனியாக இருக்கை ஒன்றில் அமர்ந்திருப்பார்.
 ரயில் நிலையத்துக்குள் நுழையும் போதெல்லாம் அவர் நிலைய ஊழியர்களைப் பார்த்து புன்னகைப்பார். அவ்வளவுதான். பிறகு அமைதியாக நடைமேடை இருக்கையில் அமர்ந்து ரயில்கள் வருவதையும் போவதையும் விடாமல் பார்த்துக் கொண்டிருப்பார். சிறிது நேரம் கழித்து திருப்தியுடன் அங்கிருந்து வெளியேறிவிடுவார். சில சமயங்களில் ரயிலிலும் ஏறி பயணிப்பார். கூட்டம் நிரம்பி வழியும் அந்த ரயில் நிலையத்தில் அவரது தினசரி வருகை சற்று வித்தியாசமாகத் தோன்றினாலும், ரயில்களைப் பார்ப்பதில் ஆர்வம் கொண்டவர் போல என்றே நிலைய ஊழியர்கள் நினைத்தார்கள். யாரையும் அவர் தொந்தரவு செய்யாததால் அவரை யாரும் கேள்வி கேட்கவில்லை.
2012ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஒரு நாள் -வழக்கம்போல அந்தப் பெண்மணி ரயில் நிலையம் வந்தார். தனியாக இருக்கையில் அமர்ந்தார். நிலைய ஊழியர்கள் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சிக்கான தயாரிப்பில் பிஸியாக இருந்தனர்.
வழக்கம்போல் ரயில் நிலையம் பரபரப்பாக இயங்கியது. அப்போது அவர் ரயில் நிலைய ஊழியர் ஒருவரை அணுகி மெதுவாகக் கேட்டார்... “சார்... அந்தக் குரல்... போய்விட்டது...”நிலைய ஊழியர் அவர் சொல்வதைக் கவனிக்கவில்லை. எனவே மீண்டும் கேட்டார்... “ சார்... அந்தக் குரல்... அந்த அறிவிப்பு குரல்... அது எங்கே போனது?”நிலைய ஊழியருக்கு ஒன்றும் புரியவில்லை. புரிந்தபோதோ திகைத்தார். அந்த முதிய பெண் குறிப்பிட்டுக் கேட்டது, ரயில் பிளாட்பாரத்துக்கும் ரயிலுக்கும் இடையில் உள்ள இடைவெளியைக் கவனிக்குமாறு எச்சரிக்கும் அறிவிப்பு ஒலி குறித்து. ‘Mind the Gap!’ஆம்! இறந்துவிட்ட தன் கணவரின் குரல் ஒலிக்கும் ரயில்வே அறிவிப்பைக் கேட்பதற்காகவே 50 வருடங்களாக தினமும் ரயில் நிலைய நடைமேடையில் வந்து அமர்ந்திருக்கிறார் இந்த காதல் மனைவி.
லண்டனைச் சேர்ந்த டாக்டர் மார்கரெட் மெக்காலம் என்பவரின் கணவர் ஒஸ்வால்ட் லாரன்ஸ். இவர் நாடக நடிகராகவும், குரல்வளம் மிக்க கலைஞராகவும் லண்டனில் வலம் வந்தவர்.
2007ம் ஆண்டு ஒரு நாள் திடீரென ஒஸ்வால்ட் லாரன்ஸ் மரணமடைய, ஏற்கனவே இவர் லண்டன் டியூப் மெட்ரோ ரயில் நிலையத்திற்காக ‘Mind the Gap’ என்ற எச்சரிக்கை ஒலியை தன் குரலில் பதிவு செய்து கொடுத்தது, லண்டன் மெட்ரோவில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகளின் காதுகளில் ஒலிக்க ஆரம்பித்தது.
கணவரின் இந்தக் குரலை தினமும் ரயில் நிலையம் வந்து கேட்பதன் மூலமாக டாக்டர் மார்கரெட் மெக்காலம் தனது வாழ்தலை அர்த்தமாக்கிக் கொண்டிருக்கிறார். ஆம்! தினமும் காலை லண்டனின் Embankment இரயில் நிலையம் செல்லும் டாக்டர் மார்கரெட், ரயில்வே பிளாட்பாரத்தில் அமைதியாக அமர்ந்து, தனது கணவரின் குரலில் வருகிற அறிவிப்பை திரும்பத் திரும்பக் கேட்டு மகிழ்வார்.
TfL (Transport for London) நிறுவனம், 2012ல் பழைய ஒலிப் பதிவுகளை மாற்றியபோது, மார்கரெட் சற்று மனம் தளர்ந்தார். உடனடியாக அவர் லண்டன் TfL-க்கு எழுதிய கடிதத்தில், “என் கணவர் ஒஸ்வால்ட் லாரன்ஸ் குரல்தான் எனக்கு தோழன். அதை மீண்டும் கேட்க முடியாத நிலை வந்தால், எனது உயிர் சுவாசமே நின்றுவிடும்...” என தன் காதலின் வலியைப் பதிவு செய்தார். இது ரயில்வே அதிகாரிகளை உலுக்க, அந்த ஒரு குரல் பதிவை மட்டும் TfL நிறுவனம் மீட்டெடுத்து, Embankment நிலையத்தில் மீண்டும் ஒலிக்க ஏற்பாடு செய்தது.
லண்டன் மெட்ரோவில் மீண்டும் அந்தக் குரல் ஒலிக்கத் தொடங்க... மார்கரெட் மெக்காலம் காதல் மட்டுமல்ல; லண்டன் TfL நிறுவனத்தின் மனிதநேயமும் இதில் உயிர்பெற்றது. காதல் என்பது தோற்றத்தில் அல்ல... நினைவுகளில் உயிரோடிருக்கும் ஒலியில்தான் வாழ்கிறது என்பதை சொல்லாமல் சொல்கிறது டாக்டர் மார்கரெட்டின் இந்தச் செயல்.
மகேஸ்வரி நாகராஜன்
|