Must Watch



ஓடும் குதிரை சாடும் குதிரை

சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான மலையாளப் படம், ‘ஓடும் குதிரை சாடும் குதிரை’. இப்போது தமிழ் டப்பிங்கில் ‘நெட்பிளிக்ஸி’ல் காணக்கிடைக்கிறது. அபிக்கும், நிதிக்கும் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. திருமணத்துக்கு முந்தைய நாள் நள்ளிரவில் அபியின் வீட்டுக்கு வருகிறாள் நிதி. அபி ஒரு வெள்ளைக் குதிரையில் உலா வருவதைப் போல கனவு கண்டதாகவும், அதனால் கல்யாணத்துக்கு வெள்ளைக் குதிரையில் வரும்படி அபியிடம் கோரிக்கை வைக்கிறாள் நிதி.  

வருங்கால மனைவியின் விருப்பத்துக்கு அபியும் சம்மதம் தெரிவிக்கிறான். திருமணம் நடக்கும் நாளில் அபி வெள்ளைக் குதிரையில் வருவதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. 
அபி வெள்ளைக் குதிரையில் பயணிக்க தயாராகிறான். இந்தக் குதிரை கொஞ்சம் விநோதமானது; கோபம் வந்தால் அதனை கட்டுப்படுத்த முடியாது என்று அபியிடம் எச்சரிக்கை செய்கிறான் அவனது நண்பன். 

அபி வெள்ளைக் குதிரையில் சென்றுகொண்டிருக்கும்போது, திடீரென அபியைக் கீழே தள்ளிவிடுகிறது. பலத்த அடிபடும் அபி கோமா நிலைக்குத் தள்ளப்படுகிறான். 
அபி மீண்டு வந்தானா? அவனுக்குத் திருமணம் நடந்ததா? வெள்ளைக் குதிரைக்குப் பின்னணியில் ஏதாவது சூழச்சிகள் இருக்கிறதா போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது திரைக்கதை. ஃபகத் ஃபாசில் நடித்த இப்படத்தை இயக்கியிருக்கிறார் அல்தாஃப் சலீம்.

சுந்தரகாண்டா

‘ஜியோஹாட்ஸ்டாரி’ல் பார்வைகளை அள்ளிக்கொண்டிருக்கும் தெலுங்குப் படம், ‘சுந்தரகாண்டா’. தமிழிலும் காணக்கிடைக்கிறது. முப்பது வயதைக் கடந்த பிறகும் கூட திருமணமாகாமல் தனியாக இருக்கிறான், சித்தார்த். தனக்கு உரித்தான சரியான துணையைத் தேடிக்கொண்டே இருக்கிறான். ஆனால், கிடைப்பதில்லை. அவனைத் தேடி நிறைய வரன்கள் வருகின்றன. ஆனால், எல்லோரையும் நிராகரிக்கிறான். தனக்கு வரப்போகும் மனைவியிடம் ஐந்துவிதமான தகுதிகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறான். 

அந்தத் தகுதிகள் என்னவென்று அவனுக்கு மட்டும்தான் தெரியும். அந்தத் தகுதிகள் இல்லாத பெண்களை நிராகரிக்கிறான். ஒரு நாள் ஈரா என்ற பெண்ணைச் சந்திக்கிறான் சித்தார்த். அவன் எதிர்பார்க்கும் எல்லா தகுதிகளும் ஈராவிடம் இருக்கின்றன. ஈராவின் மீது காதலில் விழுகிறான் சித்தார்த். சித்தார்த்துக்கு வயது முப்பதைக் கடந்துவிட்டதால் இந்தக் காதலில் ஈராவின் அம்மாவுக்கு கொஞ்சம்கூட விருப்பமில்லை. சித்தார்த்தின் காதல் கைகூடியதா என்பதே மீதிக்கதை. கலகலப்பாக, ஜாலியாகச் செல்லும் இந்தப் படத்தின் இயக்குநர்  வெங்கடேஷ் நிம்மலப்புடி. 

த ஹோம்

‘அமேசான் ப்ரைமி’ல் வெளியாகி, பார்வைகளை அள்ளி வரும் ஆங்கிலப்படம், ‘த ஹோம்’. தமிழ் டப்பிங்கிலும் காணக்கிடைக்கிறது. மேக்ஸ் ஒரு வளர்ப்புக் குழந்தை. அவனது வளர்ப்புத் தந்தை ஒரு வித்தியாசமான மனிதர். மேக்ஸுக்கு ஓர் அண்ணன் இருந்தான். அவன் சில வருடங்களுக்குமுன் தற்கொலை செய்து இறந்துவிட்டான். அந்த அண்ணனும் வளர்ப்புக் குழந்தைதான். 

இந்நிலையில் புதிதாக ஓர் இடத்துக்கு மேக்ஸும், அவனது வளர்ப்புத் தந்தையும் குடிபோகின்றனர். நான்காவது மாடிக்கு யாரும் செல்லக்கூடாது என்று அந்த தந்தை கட்டளையிடுகிறார். அப்படி நான்காவது மாடியில் என்னஇருக்கிறது என்று பார்க்க ஆவல் கொள்கிறான் மேக்ஸ்.

இரவு நேரங்களில் அவனது வீட்டில் அமானுஷ்யமான நிகழ்வுகள் அரங்கேறுகின்றன. சிலருடன் நட்பாகி, நான்காவது மாடிக்குச் செல்கிறான் மேக்ஸ். அங்கே தாக்கப்பட்டு, திரும்பவும் இங்கே வரக்கூடாது என்று எச்சரிக்கை செய்யப்படுகிறான். அந்த நான்காவது மாடியில் அவனது அண்ணன் தற்கொலை செய்துகொண்டான் என்ற விஷயம் மேக்ஸுக்குத் தெரிய வர, சூடுபிடிக்கிறது திகில் கதை. திகில் படப்பிரியர்கள் தவறவிடக்கூடாத இந்தப் படத்தை இயக்கியவர் ஜேம்ஸ் டிமொனாக்கோ. 

வார் 2

சில வருடங்களுக்கு முன்பு வெளியாகி, வசூலைக் குவித்த இந்திப்படம், ‘வார்’. அதன் இரண்டாம் பாகம் இது. ‘நெட்பிளிக்ஸி’ல் தமிழ் டப்பிங்கிலும் காணக் கிடைக்கிறது. 
ஒரு கூலிப்படையை நடத்தி வருகிறான் கபீர். சர்வதேச அளவில் அவனுக்கு வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். 

எவ்வளவு ஆபத்து மிகுந்த இடங்களில் கூட, சர்வ சாதாரணமாக நுழைந்து தனக்குக் கொடுக்கப்பட்ட வேலையைக் கச்சிதமாக முடிப்பவன் கபீர். அதனால் வாடிக்கையாளர்கள் மத்தியில் அவனுக்கு நல்ல மதிப்பு. ஜப்பானில் உள்ள ஒரு தாதாவைக் கொன்றுவிட்டு, ஜெர்மனியில் உள்ள ஒரு வாடிக்கையாளரைச் சந்திக்கிறான் கபீர். 

அந்த வாடிக்கையாளர் இந்தியாவுக்கு போதைப் பொருட்களை வியாபாரம் செய்பவர். அங்கே இன்னொரு குழுவைச் சேர்ந்த உறுப்பினர் கபீருக்கு அறிமுகமாகிறார். 
இந்தியாவுக்குள் ஊடுருவி, இந்திய அரசை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவேண்டும் என்பது அந்தக் குழுவினரின் திட்டம். இதற்காக கபீரின் உதவியை நாட, சூடுபிடிக்கிறது திரைக்கதை. லாஜிக் எல்லாம் பார்க்காமல் ஜாலியாக பாலிவுட் மசாலாக்களைப் பார்ப்பவர்களுக்கு உரிய படம் இது. இதன் இயக்குநர் அயன் முகர்ஜி. 

தொகுப்பு: த.சக்திவேல்