ஆப்கானிஸ்தான் vs பாகிஸ்தான் என்ன பிரச்னை..?
சமீபத்தில்தான் இஸ்ரேல், காசா போர்நிறுத்தம் வந்திருக்கிறது. இருந்தும்கூட அங்கே இன்னும் பதற்றங்கள் தணியவில்லை. இதற்கிடையே ஆப்கானிஸ்தானும், பாகிஸ்தானும் தங்கள் எல்லையில் சண்டையிட்டு வருவது உலக நாடுகளைக் கவலையில் ஆழ்த்தியிருக்கிறது. கடந்த வாரம் இருநாடுகளும் மோதிக்கொண்ட போது பாகிஸ்தான் வீரர்கள் 58 பேர் கொல்லப்பட்டதாகவும், தங்கள் தரப்பில் ஒன்பது பேர் இறந்ததாகவும் தலிபான் செய்தியில் சொல்லப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம், வான்வழி மற்றும் தரைவழி தாக்குதல்களை வேகப்படுத்த அந்தப் பகுதியே பதற்றமானது. அடுத்ததாக ஆப்கானிஸ்தானின் 200 தலிபான்களை வீழ்த்தியதாக பாகிஸ்தான் தெரிவித்தது. இந்நிலையில் இருதரப்பிலும் சண்டை உக்கிரமாகி வருகிறது.
பொதுவாக பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும் நட்பு நாடுகள் என்பது எல்லோரும் அறிந்தது. இரண்டு நாடுகளும் நெருக்கமான வர்த்தக உறவுகளையும் கொண்டுள்ளன. அப்படியிருந்தும் ஏன் இரு நாடுகளும் சண்டையிட்டுக் கொள்கின்றன?
இதற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று தூரந்த் கோடு. மற்றொன்று தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் எனும் பாகிஸ்தானிய தலிபான் இயக்கம்.
தூரந்த் கோடுஆப்கானிஸ்தானையும் பாகிஸ்தானையும் பிரிக்கும் 2,640 கிலோமீட்டர் நீளமுள்ள சர்வதேச எல்லைக் கோடு இது.
கடந்த 1893ம் ஆண்டு ஆப்கானிஸ்தான் ஆஃப் எமிரேட்ஸையும், பிரிட்டிஷ் இந்தியப் பேரரசையும் பிரிக்கும் சர்வதேச எல்லையாக இது நிர்ணயிக்கப்பட்டது. அப்போது ஆப்கானிஸ்தானின் அமீர் அப்துர் ரஹ்மான்கானும், அந்தப் பகுதி பிரிட்டிஷ் இந்திய சிவில் சர்வீஸ் அதிகாரியாக இருந்த சர் ஹென்றி மார்ட்டிமர் தூரந்தும் சேர்ந்து இந்த எல்லையை வரையறுத்தனர். அதனாலேயே இது தூரந்த் எல்லைக்கோடு என அழைக்கப்படுகிறது.
ஆனால், அடுத்து வந்த ஆப்கானிஸ்தான் ஆட்சியாளர்கள் இந்த எல்லையை ஏற்கவில்லை. இந்த தூரந்த் கோடு பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்துன்க்வா, பலுச் சிஸ்தான் மற்றும் சர்ச்சைக்குரிய கில்கிட்-பால்டிஸ்தான் ஆகிய பகுதிகளை ஆப்கானிஸ்தானின் வடகிழக்கு மற்றும் தெற்கு மாகாணங்களிலிருந்து பிரிக்கிறது.
இதில் வடகிழக்குப் பகுதியில் உள்ள பஷ்துன் பகுதிகளை ஆப்கானிஸ்தான் உரிமை கோருகிறது. ஏனெனில் ஆப்கானிஸ்தானின் மக்கள்தொகையில் நாற்பது சதவீதம் பஷ்துன்கள் உள்ளனர். பாகிஸ்தானில், இவர்களின் எண்ணிக்கை சுமார் 18 சதவீதம் வரை உள்ளது. இதனிடையே தூரந்த் எல்லைக்கோட்டின் இருபுறமும் உள்ள பல பஷ்துன் தேசியவாதிகள் பஷ்துனிஸ்தான் என்ற சுதந்திர நாட்டை கோரி வருகின்றனர். இந்நிலையில் 1947ம் ஆண்டு பாகிஸ்தான் தனிநாடான பிறகு இந்தப் பிரச்னை இன்னும் மேலோங்கியது. அப்போது பாகிஸ்தான் ஐக்கிய நாடுகள் சபையில் சேருவதற்கு எதிராக வாக்களித்த ஒரே நாடு ஆப்கானிஸ்தான் ராஜ்ஜியம்தான். காரணம் தூரந்த் எல்லைக்கோடு.
இருந்தும் 1990களில் ஆப்கானிஸ்தானில் தலிபான் கிளர்ச்சியின் போது அவர்களுக்கு நிதியுதவியும், தளவாடங்களும் பின்புலத்தில் இருந்து வழங்கியது பாகிஸ்தான். பிறகு 1996ம் ஆண்டு தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியைப் பிடித்தபோது அவர்களை அங்கீகரித்த ஒரே நாடும் பாகிஸ்தான்தான். தொடர்ந்து 2001ம் ஆண்டு அவர்கள் ஆட்சியிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட போதும் அவர்களுக்கு பக்கபலமாக நின்றது பாகிஸ்தான். அதனால் 2021ல் மீண்டும் தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியை அமைத்தனர்.
இப்படியாக இரு நாடுகளும் நல்லுறவைப் பேணி வந்தன. தற்போது பாகிஸ்தானிய தலிபான் இயக்கத்தால் (TTP) இந்த உறவில் விரிசல் விழுந்துள்ளது. தெஹ்ரிக்-இ-தலிபான் எனும் பாகிஸ்தானிய தலிபான் இது பஷ்துன் தேசியவாத போராளிக்குழுவாகும். ஆனால், இதனை சர்வதேச அளவில் ஐ.நா.வும், பல்வேறு நாடுகளும் பயங்கரவாதக் குழுவாக அறிவித்துள்ளன. கடந்த 2007ம் ஆண்டு பைதுல்லா மெஹ்சூத் என்பவரால் உருவாக்கப்பட்டது இந்த ஜிஹாதிக் குழு.
பாகிஸ்தான் ராணுவத்திற்கு எதிரான எதிர்ப்பை ஒன்றிணைக்க உருவாக்கப்பட்ட போராளிகளின் வலையமைப்புக் கூட்டணி இது எனச் சொல்லப்படுகிறது. இவர்கள் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் எல்லையில் பஷ்துன்களுக்கு தனி தேசம் கோரி போராடுகின்றனர்.
இதனால் பாகிஸ்தான் ராணுவத்திற்கு எதிராக சண்டையிட்டு வருகின்றனர்.இந்த அமைப்பினரும், ஆப்கானிஸ்தான் தலிபான்களும் ஒரே சித்தாந்தங்களைக் கொண்டவர்கள். 2001 முதல் 2021 வரை ஆப்கானிஸ்தானில் நடந்த போரின்போது ஆப்கான் தலிபான்களுக்கு ஆதரவாக நிறைய உதவி செய்தவர்கள் பாகிஸ்தானிய தலிபான்கள். இந்நிலையில் ஆப்கானில் தலிபான் அரசு அமைந்ததும் இவர்களின் போராட்டம் மேலோங்கி இருக்கிறது. கடந்த 2024ம் ஆண்டு மார்ச் மாதம் ஆப்கான், பாகிஸ்தான் எல்லையில் பாகிஸ்தானிய தலிபான்கள் டிரக் பாம் மூலம் பாகிஸ்தான் ராணுவ வீரர்களைக் கொன்றனர்.பிறகு பாகிஸ்தான் ராணுவத்தினர் எதிர்த் தாக்குதல் நடத்தினர். அது கொஞ்சம் கொஞ்சமாக மேலெழுந்து போர்ச்சூழல் உருவானது.
இந்நிலையில் பாகிஸ்தான் அரசு, ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசுதான் பாகிஸ்தானிய தலிபான்களுக்கு அடைக்கலம் கொடுத்து உதவுவதாகக் குற்றம் சாட்டியது. இதனால் இருதரப்புக்கும் இடையே சண்டை மூண்டுள்ளது. தற்போது இந்த இருதரப்பு சண்டையையும் தூரந்த் எல்லைக்கோடு சாட்சியாக இருந்து பார்த்து வருகிறது.l
பேராச்சி கண்ணன்
|