செயற்கை மார்பகங்கள் இலவசமாகக் கிடைக்கும்!



மன அழுத்தத்துக்கு ஆளாக வேண்டாம்... எதையும் நீங்கள் இழக்கவில்லை...

இன்று இந்தியாவில் பெண்களிடையே பொதுவான வகை புற்றுநோயாக மார்பகப் புற்றுநோய் இருந்து வருகிறது. இதில் பாதிக்கப்படும் பெண்களுக்குப் புற்றுநோய் கட்டியை அகற்ற அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும். அப்போது பெண்கள் தங்கள் மார்பகங்களை இழக்க நேரிடும்.குறிப்பாக புற்றுநோயின் தாக்கத்தைப் பொறுத்து அவர்கள் ஒரு பக்கமோ அல்லது இரண்டு பக்க மார்பகங்களையோ இழக்கின்றனர். ஆனால், பொதுவாக ஒரு பெண்ணை, பெண்ணாக அடையாளப்படுத்துவதே மார்பகங்கள்தான். 

தாய்மையின் அடையாளமாக விளங்கும் அதில் ஒன்றையோ அல்லது இரண்டையுமோ இழக்க நேரிடும்போது அவர்களின் நிலை மிகுந்த வேதனைக்கு உள்ளாகிறது. இந்த வேதனையை எப்படி போக்குவது? இந்த ஒற்றை கேள்விதான் ஜெய ரத்தன் என்ற பெண்மணியை ‘சாய்ஷா இந்தியா’ அறக்கட்டளை எனும் அமைப்பைத் தோற்றுவிக்கச் செய்திருக்கிறது.  
மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்த அமைப்பு, புற்றுநோயால் மார்பகங்களை இழந்து வாடும் பெண்களுக்காக பருத்தி நூலால் உருவாக்கப்பட்ட ‘செயற்கை மார்பகங்களை’ தயாரித்து அதனை இலவசமாகவே கொடுத்து வருகிறது. 

அதுமட்டுமில்லாமல், புற்றுநோயால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு கீமோதெரபியால் முடிகொட்டும். இதற்காக பீனீஸ் எனும் காட்டன் தொப்பிகளை உருவாக்கி அதனையும் இலவசமாக வழங்கி வருகிறது.இதன் தமிழ்நாடு மண்டல ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் சக்தி ஹரிநாத். செயற்கை மார்பகங்கள் குறித்து அவரிடம் பேசினோம். ‘‘முதல்ல எங்க அமைப்பைப் பத்தி சொல்லிடுறேன். 
‘சாய்ஷா’ என்றால் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான அர்த்தமுள்ள வாழ்க்கைனு பொருள். இதனை கடந்த 2018ம் ஆண்டு ஜெயஸ்ரீ ரத்தன் மேடம், அவரின் கணவர் குமார் ரத்தனின் முழு ஆதரவுடன் ஆரம்பிச்சாங்க. அவங்களுக்கு பூர்வீகம் தமிழ்நாடு. இப்போ, மும்பையில் செட்டிலாகிட்டாங்க. 

இந்நிறுவனம் ஆரம்பிக்கப்பட காரணமே ஒரு சம்பவம்தான். ஜெயஸ்ரீ மேடம் அமெரிக்கா போயிருந்தப்ப அங்க நிட்டட் நாக்கர்ஸ்னு (Knitted Knockers) செயற்கை மார்பகங்கள் தயாரித்து கொடுக்கிற ஒரு யூனிட்டில் இதன் செய்முறையைக் கத்துக்கிட்டாங்க. அப்புறம், அவங்க சொந்தக்காரர் ஒருத்தங்க புற்றுநோயால் மார்பக அறுவை சிகிச்சை செய்து மருத்துவமனையில் இருந்தாங்க. இவங்களுக்கு குரோஷே நிட்டிங் தெரியும் என்பதால் ஓர் ஆர்வத்துடன் நாக்கர்ஸ் பண்ணி அவங்களைப் பார்க்கப் போயிருக்காங்க. 

அப்போ, அந்த சொந்தக்காரர் இதன் மதிப்பை உணர்ந்து, ‘நீ எனக்கு பண்ணிக் கொடுத்திட்ட. உன்னை தெரியாதவங்க எத்தனையோ பேர் இருப்பாங்க. அவங்களுக்கும் நீ பண்ணிக் கொடுக்கணும்’னு கேட்டிருக்காங்க. அந்தத் தூண்டுதல்தான் ஜெயஸ்ரீரத்தன் மேடத்தை இந்த அமைப்பைத் தொடங்க வச்சது.

உடனடியாக ஐந்து தோழிகளுடன் சேர்ந்து இந்த அமைப்பை ஆரம்பிச்சாங்க. அப்புறம், ஒவ்வொருத்தராக தெரிஞ்சு தன்னார்வலர்களாக சேர்ந்தாங்க. நான் எப்படி சேர்ந்தேன்னா, எனக்கு குரோஷே பின்னல் தெரியும். என் பசங்களுடைய ஃப்ரண்டின் அம்மா கீதா கிருஷ்ணன், இதில் தன்னார்வலராக இருக்காங்க. அவங்க என்னுடைய குரோஷே பின்னலைப் பார்த்து இந்த அமைப்பைப் பத்தி சொன்னாங்க. 

அப்போ நான் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்தேன். இந்த அமைப்பு எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. என்னுடைய குரோஷே பின்னல் ஜெயஸ்ரீ ரத்தன் மேடத்திற்கும் சந்தோஷமாக இருந்தது. அப்படியாக நான் இதில் தன்னார்வலராக சேர்ந்தேன். 

பிறகு, அருகில் உள்ள நண்பர்களை வாரா வாரம் வீட்டிற்கு அழைத்து அவங்களுக்கு ட்ரைனிங் கொடுத்தேன். அதன்வழியாக நிறைய தன்னார்வலர்களை உருவாக்கினோம். இப்போ, லேட்டஸ்ட்டா சோசியல் மீடியா நிறைய பங்களிப்பு செய்யுது.

இதன் மூலமாக 450க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் உலகம் முழுவதும் இருக்காங்க. எல்லோருமே பெண்கள். நாங்க ஒரு குடும்பமாக சேர்ந்து நாக்கர்ஸை உருவாக்குறோம்...’’ என்கிற சக்தி ஹரிநாத், நாக்கர்ஸ் தயாரிப்பு குறித்து பேசினார்.‘‘எங்க அமைப்பின் முக்கிய பணியே மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நாக்கர்ஸ் உருவாக்குவதுதான். இதில் நாக்கர்ஸ் என்பது செயற்கை மார்பகங்களைக் குறிக்கும்.

இதை பதப்படுத்தப்பட்ட பருத்தி நூலால் அதாவது மெர்சடைஸ் காட்டன் யான் என்னும் நூலைக் கொண்டு நிட்டிங் மற்றும் குரோஷே முறைகளில் மென்மையாகவும், பாதுகாப்பாகவும் உருவாக்குறோம். இதனை மார்பகங்களை இழந்த பெண்கள் தங்கள் உள்ளாடைக்குள் பொருத்தி பயன்படுத்தலாம்.

 இதில் தன்னார்வலர்களின் பங்கு என்பது தங்களது சொந்த செலவில் நூல் வாங்கி வீட்டிலேயே நிட்டிங் மற்றும் குரோஷே முறையில் நாக்கர்ஸ் தயாரிப்பாங்க. பிறகு இந்த நாக்கர்ஸை மும்பை, சென்னை, பெங்களூரு போன்ற இடங்களில் உள்ள எங்கள் மையங்களுக்கு அனுப்பி வைப்பாங்க.

அங்க தரக்கட்டுப்பாடு செய்யப்பட்டு, பெர்ஃபெக்‌ஷன் செக் பண்ணி அப்ரூவல் கொடுப்போம். பிறகு, நாங்க சைஸ் வாரியாக பிரித்து டேக் பண்ணுவோம். இதுல ஏ,பி,சி,டினு நாலு சைஸ் இருக்கு. இதன்பிறகு சென்னை, பெங்களூரு, மும்பை ஆகிய மையங்களில் தொடர்ச்சியாக ஃபில்லிங் செஷன்ஸ் நடத்தப்படும்.

  ஃபில்லிங் செஷன்ஸ் என்பது இந்த நாக்கர்ஸ் உள்ளே வெர்ஜின் ஃபைபர் வச்சு நிரப்பும் பணி. இதனால் இயற்கையான மார்பகத்தின் தோற்றத்தை நாக்கர்ஸ் பெறும். இதுவே பயனாளிகளுக்கு இயல்பான உணர்வையும், அதிக தன்னம்பிக்கையையும் கொடுக்கும்.

இந்த நாக்கர்ஸை நாங்க எப்படி விநியோகம் பண்றோம்னா, பயனாளிகள் எங்கள் saaishaindia.org வெப்சைட்லயோ அல்லது saaisha.india@gmail.com முகவரியிலோ பதிவு பண்ணி கோரிக்கை வைக்கணும். அவங்க தேவைக்கேற்ப அனுப்பி வைப்போம். இதில் ஒரு பக்க மார்பகத்தை எடுத்தால் அவங்களுக்கு இரண்டு நாக்கர்ஸும், இரண்டு பக்கமும் மார்பகத்தை எடுத்திருந்தால் அவர்களுக்கு நான்கு நாக்கர்ஸும் அனுப்புறோம். 

இது அனுப்பும்போதே அவங்களுக்கு எப்படி பயன்படுத்தணும் என்பதற்கான பயனர் வழிகாட்டியும் அனுப்பிடுவோம். அவங்க எங்களுக்குக் கோரிக்கை வைக்கும்போதே அந்த விண்ணப்பத்தில் தாய்மொழி, மருத்துவர் யார், எப்போ அறுவை சிகிச்சை பண்ணப்பட்டது, என்ன சைஸ் உள்ளாடை அணிகிறார் உள்ளிட்ட விவரங்களை வாங்கிடுவோம். 

அதற்கேற்ப நாக்கர்ஸும், பயனர் வழிகாட்டியும் போஸ்டல்ல அனுப்பி வைப்போம். இதுல பயனாளர்களுக்கு துளி அளவும் எந்தவித செலவும் கிடையாது. இது முழுக்க முழுக்க இலவசமாகவே செய்யப்படும் சேவை. மருத்துவமனைகள் மற்றும் பயனாளர்களிடமிருந்து வரும் கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு இந்தியாவில் மட்டுமே நாங்க விநியோகம் செய்றோம்.  

அப்படியாக கடந்த ஏழு ஆண்டில் நாங்க இதுவரைக்கும் 27,500 நாக்கர்ஸிற்கும் மேல் வினியோகம் பண்ணி இருக்கோம். இதுதவிர கீமோதெரபி பண்ற குழந்தைகளுக்கு பீனீஸ்னு சொல்லப்படுகிற காட்டன் தொப்பிகளைக் கொடுக்கிறோம். இந்த பீனீஸ் மட்டும் இதுவரை 3,200க்கும் மேல் வழங்கியிருக்கோம். சில பெண்கள் கீமோ போகும்போது அவங்களுடைய உடல் வடிவமைப்பு கொஞ்சம் மாற்றமாகும். அந்த மாதிரி நேரங்களில் அட்ஜஸ்ட் பண்ணும் வகையிலேயே இந்த நாக்கர்ஸை உருவாக்குறோம். 

இந்த நாக்கர்ஸை 23 மாதங்கள் வரை பயன்படுத்தலாம். இதை அணிவதால் எந்த அரிப்பும் இருக்காது. ஒருநாள் பயன்படுத்தியதை துவைத்து மறுநாள் பயன்படுத்திக்கலாம். ஆனா, கையினால்தான் துவைக்கணும். துவைத்தபிறகு டேபிள்லதான் காய வைக்கணும். தொங்கவிடக் கூடாது. அப்புறம், 23 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் கோரிக்கை வச்சு இலவசமாகவே நாக்கர்ஸைப் பெற்றுக் கொள்ளலாம்.   

இன்னைக்கு புற்றுநோயால் மார்பகத்தை இழந்த பெண்கள் பலர் கர்சீப் உள்ளிட்டவற்றை பயன்படுத்திட்டு வர்றாங்க. வெளியே போகவே கூச்சப்பட்டு வீட்டில் இருக்கிறவங்களும் உண்டு. அவங்களுக்கெல்லாம் இந்த நாக்கர்ஸ் ஒரு வரப்பிரசாதம்னு சொல்லலாம்.இப்போ, எங்களுக்கு நிறைய பயனாளர்கள் இருக்காங்க. அவங்க எல்லோருமே ரொம்ப சந்தோஷமாக இருப்பதாகச் சொல்றாங்க. நம்பிக்கையாக வெளியில் போகமுடியுதுனு அவங்க சொல்றதை கேட்கிறப்ப எங்களுக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு.   

அதேபோல் உலகம் முழுவதும் எங்களுக்குத் தன்னார்வலர்கள் இருக்காங்க. இருந்தும் இன்னும் எங்களுக்கு நிறைய தன்னார்வலர்கள் தேவை. இப்போ நிறைய பயனாளர்களை அடையணும் என்கிற நோக்கில் வேலை செய்திட்டு இருக்கோம்.

ஆங்காங்கே மண்டல அளவில் அலுவலகங்களும் வச்சிருக்கோம். என்னை மாதிரி மண்டல ஒருங்கிணைப்பாளர் இருக்காங்க. அவங்க அவுட்ரீச் செயல்பாடுகள்ல வேலை செய்திட்டு இருக்காங்க. இந்தியாவைப் பொறுத்தவரை இந்த ஃபீல்டுல இவ்வளவு தன்னார்வலர்களுடன் இயங்குவது நாங்க மட்டும்தான். 

இப்போ, எங்கள் சாய்ஷாவில் தயாரிக்கப்படும் ஒவ்வொரு நாக்கர்ஸும், பயனாளர்களுக்காக செய்யப்படும் ஒவ்வொரு தொலைபேசி அழைப்பிற்கும், தன்னார்வலர்கள் செலவிடும் ஒவ்வொரு நிமிடத்திற்கும் பின்னால் இருக்கிற ஒரே உணர்வு நம்பிக்கைதான்.

அதாவது மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் மீண்டு வருவாள் என்கிற நம்பிக்கை எங்களுக்குக் கிடைக்குது. ஒரு பெண் மீண்டு வரும்போது அந்த வீடும் நல்லாயிருக்கும், சமூகமும் ஒளிரும் இல்லையா...’’ என ஆத்மார்த்தமாகச் சொல்கிறார் சக்தி ஹரிநாத்.

பேராச்சி கண்ணன்