முதல் முறையாக 29 பதக்கங்கள்!
ஒன்றல்ல... இரண்டல்ல... மொத்தம் 29 பதக்கங்கள். இதில் 11 தங்கம், 12 வெள்ளி, 6 வெண்கலப் பதக்கங்கள் எனக் கொத்தாக வென்று கெத்து காட்டுகின்றனர் ஜிம் பெண்கள்.
சமீபத்தில் சென்னை மாவட்ட பவர்லிஃப்டிங் அசோசியேஷன் சார்பில் தமிழகத்தில் முதல்முறையாக மாநில அளவிலான பெண்கள் பவர்லிஃப்டிங் மற்றும் டெட்லிஃப்ட் போட்டிகள் நடந்தன. இதில்தான் சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த ஃபிட்னஸ் பாரடைஸ் ஜிம்மைச் சேர்ந்த பெண்கள் 29 பதக்கங்களை அள்ளியதுடன் ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பையையும் கைப்பற்றி சாதனை படைத்துள்ளனர்.
 ‘‘எங்க ஜிம்மில் பயிற்சி எடுக்க வருபவர்களுக்கு உடலை பலப்படுத்தவும், உடல் எடையை குறைக்கவும் ஸ்குவாட், டெட்லிஃப்ட் போன்ற பயிற்சிகள் கொடுப்பது வழக்கம். அதில் சிறப்பா பயிற்சி செய்பவர்களை போட்டிக்குத் தயார்படுத்துவோம். அப்படியாக மாவட்ட அளவில் நடந்த போட்டிகளில் எங்க ஜிம் பெண்கள் கலந்துக்கிட்டு ஜெயிச்சாங்க. இப்ப, முதல்முறையா மாநில அளவிலான போட்டி பெண்களுக்கென்றே தனியாக நடத்தப்பட்டுச்சு. அதில் 29 பதக்கங்களுடன் சாம்பியன் பட்டத்தையும் வென்றிருப்பது ரொம்ப சந்தோஷமா இருக்கு...’’ என உற்சாகமாகப் பேசினார் ஜிம்மின் நிறுவனரும், தலைமைப் பயிற்சியாளருமான மகாதேவன்.  ‘‘முன்னாடியெல்லாம் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சேர்ந்தாற்போலவே போட்டிகள் நடந்துச்சு. இப்ப, நிறைய பெண்கள் பவர்லிஃப்டிங் விளையாட்டுக்கு ஆர்வமாக வர்றதால் இவங்களுக்குத் தனியாக ஆரம்பிச்சிருக்காங்க.இந்தப் போட்டி சப்-ஜூனியர், ஜூனியர், சீனியர், மாஸ்டர்ஸ்னு நடக்கும். எங்க ஜிம்மில் பள்ளி, கல்லூரியில் படிக்கிற பசங்களும் இருக்காங்க. வேலைக்குப் போகிற பெண்களும் இருக்காங்க. ஹவுஸ்வொய்ஃப்களும் இருக்காங்க. இவங்கதான் தங்களால் முடியும்னு பதக்கம் வென்று காட்டியிருக்காங்க.
இதில் சிறப்பு என்னனா எங்க ஜிம்மிலிருந்து ஒரு அம்மாவும், மகளும் சேர்ந்து பங்கேற்றாங்க. அதில் அம்மா வெள்ளிப் பதக்கமும், மகள் இரண்டு தங்கமும், இரண்டு வெண்கலமும்னு ஜெயிச்சாங்க. இன்னொரு பெண் போட்டிக்கு முன்னாடி பயிற்சியின் போது முதுகுத் தசை பிடிச்சிடுச்சு. அந்த வலியுடன் வந்து பதக்கம் வென்று, பெண்களால் எதுவும் முடியும்னு நிரூபிச்சாங்க...’’ எனப் பெருமையுடன் குறிப்பிடும் மகாதேவன் இந்த ஜிம்மை கடந்த 26 ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.
அவருக்கு உறுதுணையாகவும், பெண்களுக்கான பயிற்சியாளராகவும் இருந்து செயல்படுகிறார் அவர் மனைவி ஹேமா. அத்துடன் மகாதேவனின் நண்பர் ஆனந்தகுமாரும் உடனிருந்து பயிற்சியளித்து வருகிறார். ‘‘வெயிட்லிஃப்டிங்கிற்கும், பவர்லிஃப்டிங்கிற்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. ரெண்டுமே பளுதூக்குதல் போட்டிதான். வெயிட்லிஃப்டிங்கைப் பொறுத்தவரை ஸ்நாச், கிளீன் அண்ட் ஜெர்க்னு ரெண்டு பிரிவில் எடையைத் தூக்குவாங்க.
பவர்லிஃப்டிங்கில் பெஞ்ச் பிரஸ், ஸ்குவாட், டெட்லிஃப்ட்னு மூணு பிரிவுகள், பெஞ்ச் பிரஸில் படுத்துக்கொண்டு எடையை தூக்கிக் காட்டணும். அப்புறம், ஸ்குவாட்டில் தோளில் எடையைத் தூக்கியபடி உட்கார்ந்து எழணும்.
டெட்லிஃப்டில் சாதாரணமாக நின்றபடி எடையைத் தூக்கணும். இந்த மூன்றுக்கும் சேர்த்து மதிப்பெண் போட்டு யார் முதலில் வருகிறார்னு பார்ப்பாங்க. அப்புறம், இதில் பவர்லிஃப்டிங்கிற்கு ஒரு பதக்கமும், டெட்லிஃப்ட்டை மட்டும் பார்த்து தனியாக ஒரு பதக்கமும் கொடுப்பாங்க. இதில் கொடுக்கப்படும் சான்றிதழும், பதக்கமும் சப் ஜூனியர், ஜூனியர் பிரிவில் கலந்துக்கிறவங்களுக்கு கல்லூரிகளில் ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் சேர உதவும். தேசிய அளவில் போனால் வேலைவாய்ப்புகளும் கிடைக்கும்...’’ என பயிற்சியாளர் ஆனந்தகுமார் சொல்ல, பயிற்சியாளர் ஹேமா தொடர்ந்தார். ‘‘பெண்கள் உடல் எடையைக் குறைக்க வந்தாலும் எடை தூக்குறதைப் பார்த்து ஆர்வமாகிடுறாங்க.
இயல்பான உடல் போயிடுமோ, தசைகள் முறுக்கேறிய மாதிரி மாறிடுமோனு சில பெண்களுக்குக் கவலைகள் இருக்கு. அப்படி எதுவும் ஆகாது. எடையைத் தூக்கும்போது தங்கள் உடல் எடை குறையும். அதேநேரம் உடலும் பலமாகும். பொதுவாக பெண்களுக்கு உடலை பலமாக்கும் பயிற்சி அவசியம்.
குறிப்பாக 40 ப்ளஸ்ஸில் உள்ளவர்களுக்கு. அதனால்தான் ஃபிட்னஸ் பயிற்சியுடன் நாங்க பவர்லிஃப்டிங்கையும் ஊக்கப்படுத்துறோம்...’’ என ஹேமா நம்பிக்கையாகச் சொல்ல, அதனை அத்தனை பெண்களும் பதக்கங்களை உயர்த்திக் காட்டி ஆமோதித்தனர். ஜெயித்தவர்களின் வாக்குமூலம்!
பவர்லிஃப்டிங்கில் பதக்கங்கள் வென்ற சில பெண்களைச் சந்தித்தோம். முதலில் 12ம் வகுப்பு படிக்கும் ஷஸ்மிதா பேசினார். ‘‘கடந்த ஆறு மாதமாகத்தான் இங்க பயிற்சி எடுக்கிறேன். எடையைக் குறைக்கதான் வந்தேன். அப்புறம் ஒரு போட்டிக்காக கூப்பிட்டாங்கனு பயிற்சி பண்ண ஆரம்பிச்சு அப்படியே ஆர்வமாகிடுச்சு.
ஆரம்பத்துல பயமாக இருந்தது. போட்டியில் கலந்துக்கிட்டதும் அந்த பயம் போயிடுச்சு. இப்ப மாநில அளவில் சப் ஜூனியர் பிரிவில் பவர்லிஃப்டிங் அண்ட் டெட்லிஃப்ட் இரண்டிலுமே தங்கப் பதக்கம் ஜெயிச்சது சந்தோஷமா இருக்கு. இப்ப 17 வயசாகுது. 18 வயது முடிவதற்குள் தேசிய அளவில் ஒரு தங்கப் பதக்கமாவது ஜெயிச்சிடணும்...’’ என்கிறார் நம்பிக்கையாக.
21 வயசாகும் தீக்ஷா ஜூனியர், சீனியர் என இரண்டிலும் பதக்கங்கள் வென்று வந்துள்ளார். இவரின் அம்மா காமாட்சியும் 95 கிலோ டெட்லிஃப்ட் பிரிவில் வெள்ளி வென்று அசத்தியுள்ளார்.
‘‘ஐடியில் வேலை செய்றேன். இங்க பயிற்சிக்கு வந்தப்ப மகாதேவன் சார்தான் பவர்லிஃப்டிங் பத்தி சொல்லி ஊக்கப்படுத்தினாங்க. நம்பிக்கையாக செய்தேன். கூடவே என் அம்மாவும் பவர்லிஃப்டிங்கிற்கு வந்தாங்க.
முதல்ல சென்னை மாவட்ட அளவிலான டெட்லிஃப்ட் போட்டியில் கலந்துக்கிட்டு தங்கப்பதக்கம் ஜெயிச்சேன். இப்ப ஜூனியர் பிரிவில் பவர்லிஃப்டிங், டெட்லிஃப்ட் இரண்டிலும் தங்கப் பதக்கங்களும், சீனியர் பிரிவிலும் வெண்கலப்பதக்கங்களும் வாங்கியிருக்கேன். என் அம்மாவும் டெட்லிஃப்டில் வெள்ளிப் பதக்கம் வென்றிருக்காங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு...’’ என்றார்.
அவரைப் போலவே ஐடி வேலையில் சேரவிருக்கும் தனுஜா பவர்லிஃப்டிங்கில் ஜூனியர், சீனியர் என இரண்டிலும் வெள்ளியும் டெட்லிஃப்டிங்கில் தங்கமும் வென்றுள்ளார்.
‘‘முதல்முறையாக மாநில அளவில் கலந்துக்கிட்டு தங்கம் வென்றிருக்கேன். முன்னாடி வீட்டுல ரொம்பத் திட்டினாங்க. எதுக்கு உனக்கு இதெல்லாம்னு சொன்னாங்க. அப்போ, என் அம்மாதான் சப்போர்ட்டாக இருந்தாங்க. இப்போ வீட்டுல எல்லோரும் பாராட்டுறது சந்தோஷமாக இருக்கு...’’ என தம்ஸ்அப் காட்டி சிரிப்பவரை தொடர்ந்தார் சீனியர் கேர்ள் ஷாலினி.
‘‘நான் பி.காம் மூன்றாம் ஆண்டு படிச்சிட்டே வேலையும் பார்க்கிறேன். உடல் எடையைக் குறைக்க இங்க ரெண்டு மாசத்திற்கு முன்னாடிதான் சேர்ந்தேன்.
இதில் டெட்லிஃப்ட் தொடங்கியே மூன்று வாரங்கள்தான் இருக்கும். இருந்தும் ஜிம் மாஸ்டர்கள் எல்லோரும் நம்பிக்கை விதைச்சாங்க. இப்போ நான் டெட்லிஃப்டில் சீனியர் பிரிவில் வெள்ளிப்பதக்கமும், ஜூனியர் பிரிவில் தங்கப்பதக்கமும் ஜெயிச்சிருக்கேன். இந்தப் பதக்கங்களை எல்லாம் பார்க்கிறப்ப தொடர்ந்து அச்சீவ் பண்ணணும்னு ஆசையாயிருக்கு...’’ என்றார்.
42 வயதான அனுஜா ஃபெர்னாண்டோ, போட்டிக்கு ஒருநாளுக்கு முன்பு முதுகுத் தசைப் பிடிப்பால் அவதிப்பட்டவர். அந்த வலியைப் பொருட்படுத்தாமல் இரண்டு தங்கம், இரண்டு வெள்ளிப் பதக்கங்களைத் தட்டி வந்துள்ளார்.
‘‘நான் கடந்த ஜூன் மாசம்தான் இந்த ஜிம்மில் சேர்ந்தேன். பயிற்சி செய்யும்போதே பவர்லிஃப்டிங் பிடிச்சிருந்தது. நானே தன்னார்வமாகப் போய் மாஸ்டர்கிட்ட நானும் வரலாமானு கேட்டேன்.
அதுக்கு அவர், ‘இப்பதான் நீங்க வந்திருக்கீங்க. அதுக்குள்ள வேண்டாம். இன்னும் பயிற்சி செய்யுங்க’னு சொன்னார். பிறகு போட்டி வந்ததும் நான் ரொம்பக் கேட்டதால் சரி வாங்கனு பயிற்சி அளிச்சார்.
முதல்ல சென்னை மாவட்ட அளவிலான போட்டியில் ஒரு தங்கமும், வெள்ளியும் வென்றேன். அது எனக்குள் நம்பிக்கையைக் கொடுத்தது. பிறகு மாநில அளவிலான போட்டிக்கு பயிற்சி செய்யும்போது என்னுடைய சிறுதவறால் முதுகுத் தசை பிடிச்சிடுச்சு. என்ன பண்றதுனே தெரியல. இரண்டு மருத்துவர்கள்கிட்ட காட்டினேன். அவங்க ஒரு பக்கெட் தண்ணீர்கூட நீங்க தூக்கக்கூடாதுனு சொன்னாங்க.
நான் ஹவுஸ்வொய்ஃப். வீட்டைக் கவனிக்கணும். வீட்டு வேலைகளைச் செய்யணும். எல்லோரும் ரெஸ்ட் எடுங்கனு சொன்னாங்க. மாஸ்டர்தான் நம்பிக்கையாக, ‘இவ்வளவு நாள் கஷ்டப்பட்டீங்க. வாங்க’னு ஊக்கப்படுத்தினார்.
அந்த வலியுடன் மாஸ்டர் பிரிவில் பவர்லிஃப்டிங்கில் தங்கம் ஜெயிச்சேன். இதில் சீனியர் பிரிவில் வெள்ளி வென்றேன். அப்புறம், டெட்லிஃப்டில் மாஸ்டர் பிரிவில் தங்கமும், சீனியர் பிரிவில் வெள்ளியும் ஜெயிச்சேன். மொத்தமாக நான்கு பதக்கங்கள் ஜெயிச்சதும் இருந்த முதுகு வலியெல்லாம் பறந்துபோனது மாதிரி ஆகிடுச்சு...’’ என நெகிழ்ந்தார் அனுஜா.
செய்தி: பேராச்சி கண்ணன்
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்
|