சிறுகதை - கூடு



வீட்டு வாசற்படியில் வழக்கமாக உட்கார்ந்திருக்கும் வித்யாவையும் மீனுவையும் காணவில்லை. 

என்னாச்சு அம்மா, பெண்ணுக்கு?

காலிங் பெல் அடித்தேன் ரொம்ப நாளைக்குப் பிறகு.வித்யா வந்து கதவைத் திறந்தாள்.“குளிர் கூட இன்னும் ஆரம்பிக்கல. வாசல் அலுத்துப் போச்சா..?” என்றேன் வேடிக்கையாக.வித்யா எதுவும் பேசவில்லை.“ஏய் மீனுக்குட்டி...”அடுத்த ஆச்சர்யம் மீனு பள்ளிப் புத்தகத்துடன் இருந்தாள்.

“என்னாச்சு உங்க ரெண்டு பேருக்கும்?’’
“ப்ச்...”
காபி டம்ளர் எதிரில் வைக்கப்பட்டது. உடை மாற்றிக் கொண்டு வந்தேன். டம்ளரைக் கையில் எடுத்துக் கொண்டு எதிர் வீட்டைப் பார்த்தேன்.“என்ன பூட்டியிருக்கு? ஊருக்குப் போயிருக்காங்களா? சொல்லவே இல்லியே...”“வீடு காலி பண்ணி போயிட்டாங்கப்பா...”என்னது... இப்போது எனக்குப் பேச்சு வரவில்லை. மறுபடியும் பூட்டியிருந்த எதிர் வீட்டையே பார்த்தேன். ஜன்னல்கள் அடைத்து வீடு மௌனத்தில் இருந்தது. நேற்று கூட அந்த வீட்டுக் குழந்தை பூரணி மீனுவுடன் விளையாடிக் கொண்டிருந்தாள்.“என்ன திடீர்னு..?”
“அம்மா ரொம்ப அப்செட்...”“எதுவுமே சொல்லலியா?” என்றேன் குழப்பமாய்.

“ம்ஹும்...”
“டிரான்ஸ்பர் வந்திருந்தாக் கூட முன்னாடியே தகவல் சொல்லி இருப்பாரே...”
நானாக யோசித்து யோசித்து புலம்பினேன்.
“பூரணி அம்மாவும் எதுவும் சொல்லலியா..?”
“இல்லப்பா...”

வாசலுக்குப் போகவே தயக்கமாக இருந்தது. இரு வீட்டுக் கதவுகளும் பெரும்பாலும் திறந்தே கிடக்கும். மீனு அங்கே ஓடுவதும் பூரணி இங்கே வருவதும் எப்போதும் கலகலப்பு. 
பூரணியின் அம்மா கரண்டியில் சாம்பார் சூடாய் கொண்டு வந்து ‘என்னமோ தப்பா இருக்கு. நீ டேஸ்ட் பார்...’ என்று சொல்வதும், வித்யா ‘புதுசா ஒரு பாயசம் வச்சேன்...’ என்று கொண்டு போவதும் ஒரே வீட்டுப் பெண்கள் போலவே அயலாருக்குத் தோன்றும்.

‘இன்னிக்கு நைட் என்ன டிபன்...’ என்று வழக்கமாகக் கேட்பேன். இன்று அதையும் கேட்க மனமில்லை. மீனு பிரித்த புத்தகத்தை மூடவே இல்லை. டிவி அமைதியாக இருந்தது.சமையலறையில் இருந்தவளிடம் போனேன்.“விடு. நாம என்ன சொந்தமா? ஏதோ பழகினோம் இத்தனை நாள். அதுல திருப்திப்பட்டுக்க வேண்டியதுதான்...”“சொல்லிட்டு போயிருக்கலாம்...”“ஒருவேளை அவங்களுக்கும் மனசுக்குக் கஷ்டமா இருந்துச்சோ என்னவோ....”“சும்மா மழுப்பாதீங்க. அப்படியா பழகினோம்...”இப்போது எனக்குள் ஒரு சுர்ர்ர்.

“அவங்க வந்த புதுசுல என்ன நடந்துச்சு நினைவு இருக்கா?”
குப்பையைப் பெருக்கி எங்கள் வீட்டுப் பக்கம் தள்ளி விட்டார்கள். வாசல் தெளிக்கிறேன் என்று நிறைய தண்ணீரைக் கொட்டி வழுக்கி விழ வைத்தார்கள். முட்டை ஓடு எங்கள் வீட்டு வாசலில் போட்டதும் வித்யாவிற்குக் கோபம் வந்துவிட்டது.

‘‘இதென்ன அநியாயம்?’’

‘‘என்ன பெருசா அநியாயத்தைக் கண்டுட்டீங்க? புள்ளைக்கு உடம்பு சரியில்லைன்னு போனதும் டாக்டர் சொன்னார், தெம்புக்கு கொடுக்கச் சொல்லி. அது கூடவா குத்தம்..?’’
‘‘அதுக்கு ஏன் எங்க வீட்டு வாசல்ல குப்பையை போடுறிங்க?’’
‘‘பறந்து வந்துருக்கும். தெருவே உங்களுக்கு சொந்தமா என்ன?’’

மாலையில் நான் வீட்டுக்கு வந்ததும் வித்யா வீட்டுக்குள் வரவிடவில்லை.
‘‘இப்பவே போய் அவங்களை என்னன்னு கேளுங்க...’’
‘‘விடும்மா...’’
‘‘தைரியமே இல்லாத மனுசனைக் கட்டிக்கிட்டு...’’
‘‘வாயை மூடு...’’

‘‘என்கிட்ட கத்துங்க...’’
பிறகு கடைத்தெருவில் எதிர் வீட்டுக்காரர் என்னிடம் சமாதானமாய் பேசினார்.
‘‘விடுங்க. இதெல்லாம் நாம தலையில் ஏத்திக்கக் கூடாது...’’
என்னுடன் பேசிக் கொண்டே வீட்டுக்கு வந்தார்.

‘‘வாங்க. டீ சாப்பிடலாம்...’’
தயக்கமின்றி வந்து விட்டார்.
வித்யாவுக்கு அவரைப் பார்த்ததும் தடுமாற்றம்.

‘‘நீ டீ சூப்பரா போடுவேன்னு சொல்லியிருக்கேன்...’’ என்றேன் சிரிப்புடன்.
மீனு உடனே எதிர்வீட்டுக்கு ஓடினாள். திரும்பும்போது பூரணியும் அவள் அம்மாவும்.
‘‘அங்கிள் ஒரு பொய் சொல்லிட்டேன். நீங்க அழைச்சுகிட்டு வரச் சொன்னதா...’’
பூரணியும் மீனுவும் கை கோர்த்துக் கொண்டிருந்தார்கள்.

அவ்வளவுதான். சூழலே மாறி விட்டது. வித்யா சமையலறைக்குள் போனபோது பூரணியின் அம்மாவும் கூடவே போனார். டீ கப்புகளை இருவருமாகக் கொண்டு வந்தார்கள்.
‘‘நைட் இங்கேயே சாப்பிடலாம்...’’ என்றாள் வித்யா.‘‘அச்சச்சோ... அப்புறம் சமைச்சு வச்சதை நாளைக்கு நான்தான் சாப்பிடணும். இன்னொரு நாள் வச்சுக்குவோம்...’’
நேற்று வரை நிலவிய சண்டை மனோபாவம் சட்டென்று மாறிப் போனதை நினைத்து ஆச்சர்யப் பட்டுக் கொண்டே தூங்கினோம்.

அவர்கள் வீட்டு விசேஷத்திற்கு எங்களை அழைப்பதும் பதிலுக்கு நாங்கள் அழைப்பதுமாய் சுமுகமான நல்லுறவு வளர்ந்து கொண்டிருந்தது.
இப்படி சட்டென்று சொல்லாமல் கொள்ளாமல் காலி செய்துவிட்டுப் போனதில் வித்யாவின் வருத்தம் புரிந்தது. ஆனால், என்ன செய்ய இயலும்?

“நாளைக்கு நான் லீவு போடவா..?”
“அதெல்லாம் ஒண்ணும் வேணாம்...”
“அப்படின்னா நீ உம்முன்னு இருக்காதே...”
மீனு முனகினாள்.
“பாரேன்பா. இந்த பூரணி கூட...”
“மீனு உனக்கும்தான். இதை மறந்துட்டு வேற யோசி...”

இரவு படுக்கப் போகுமுன் ஒருமுறை எதிர் வீட்டை எட்டிப் பார்த்தேன். ம்ஹும் . அடைத்துத்தான் கிடந்தது. நிஜம்தான் . கற்பனை இல்லை.
மறுநாள் நான் ஆபீஸ் போகவில்லை. வித்யா இந்த அளவிற்கு மூட் அவுட் ஆனது எனக்குமே கொஞ்சம் அதிர்ச்சிதான். டிசம்பரில் காலியாகப் போகும் லீவை எடுத்து விடலாம்.
“வெளியே எங்கியாச்சும் சாப்பிடப் போகலாமா?”

“வேணாம்...”
“சினிமா?”
“ம்ஹும்...”
அதற்குள் வித்யாவிற்கு போன். அவள் அம்மாவிடமிருந்து. படபடப்பாய் பேசினார் என்று மட்டும் புரிந்தது.
“ம்ம். சொல்லும்மா... ம்ம்... ம்ம்...”
எனக்கு ம்ம் மட்டும்தான் கேட்டுக் கொண்டிருந்தது.

“அம்மா அதெல்லாம் ஒரு பிரச்னையே இல்லை. நான் சொல்ற மாதிரி செய்யுங்க...’’
வித்யாவின் நிதானமான ஆலோசனை ஐந்து நிமிடம் ஓடியது.

“சரிம்மா வச்சுடறேன்...”
வித்யாவா இது? இந்த மாதிரி நேரத்தில் ‘இங்கே பார். உன் பிரச்னையை என்கிட்ட கொண்டு வராதே. என்னவோ செய். எப்படியோ சமாளி...’ என்று ஒரு சத்தம் போட்டு அழைப்பை துண்டித்திருப்பாள்.

காலிங் பெல் அடித்தது.
கதவைத் திறந்தால்... பூக்காரம்மா.
“ரெண்டு நாளா மேலுக்கு முடியலம்மா. வாங்கி வச்ச பூ எல்லாம் அழுகிப் போச்சு...’’
“உன் மருமக வருவாளே?”

“அவ இப்ப எங்கூட இல்லம்மா. தனியா போயிட்டாங்க...”
“ரெண்டு நாளா சாமிக்கு பூ வைக்கல. இன்னிக்குத்தான் கடைத்தெரு போவலாம்னு நினைச்சேன்...”
“அதான்மா எடுத்துகிட்டு வந்தேன்...”
“டீ குடிக்கிறியா?”

“இல்லம்மா. வாய் கசக்குது...”
“டாக்டர்ட்ட போனியா?”
“நவுரவே முடியல. அவருதான் ஏதோ வாங்கிட்டு வந்தாரு...”

“கஞ்சி போட்டுத் தரவா?”
“இந்தாம்மா இதை தலைக்கு வச்சுக்க...’’
இன்னொரு கிள்ளல் பூவைக் கொடுத்தார் பூக்காரம்மா. மாதம் முழுக்க கொடுத்து விட்டு மொத்தமாகப் பணம் வாங்கிக் கொள்வார்.
“போன மாசப் பணம்?’’
வித்யா நீட்டிய பணத்தைப் பார்த்து சொன்னார்.

“ரெண்டு நாள் போடலியே. அதைக் கழிச்சுக்கலியா?”
“உடம்பைப் பார்த்துக்க...”
பூக்காரம்மா போய் விட்டார். இதே வித்யா முன்பு கணக்காய் கழித்து விட்டுத் தருவாள். பூரணி அம்மாவுக்கும் இதே பூக்காரம்மாதான்.
“இவங்ககிட்டல்லாம் கணக்கு பார்க்கக் கூடாது...” என்று வித்யாவிடம் சொன்னார் ஒரு முறை.

மீனுவிடமும் மாற்றங்கள். ‘அப்புறம் பண்றேன்பா...’ என்பவள் வீட்டுப் பாடத்தை முதலில் முடித்துவிடுகிறாள் இப்போதெல்லாம். அம்மாதான் செய்ய வேண்டும் என்று அழிச்சாட்டியம் செய்பவள் தன் வேலைகளைத் தானே செய்ய ஆரம்பித்தாள்.“வித்யா இங்கே வாயேன். மீனு நீயும் வா...”எதிரில் நின்றார்கள்.

“நினைவு இருக்கா? எதிர் வீடு ஒரு வருசமா பூட்டி  இருந்தது. அதுக்கு முன்னாடி ஒரு ஃபேமிலி இருந்துச்சு. ஏழெட்டு மாசம்தான் இருந்தாங்க. நம்ம கூட பேசக் கூட இல்ல...”

வித்யா யோசித்து தலையாட்டினாள்.“நாமும் கவலைப்படல. அப்புறம் இவங்க வந்தாங்க. பழக ஆரம்பிச்சோம். ஹோட்டல்,  சினிமால்லாம் போனோம். நீ சொல்லுவ அப்போ. என்னை மாதிரியே அவரும் ரொம்ப கணக்கு பார்க்கிறதில்ல. 

நம்ம கூட பாசமா இருக்காருன்னு...”
“ம்ம்...”
“அவங்க வந்ததும் நம்ம கிட்ட என்னென்ன மாற்றம் வந்துச்சுன்னு யோசிச்சு பாரு. சில விஷயங்கள் அவங்க நம்ம கிட்ட கத்துகிட்டாங்க. நாமும்  அவங்ககிட்ட கத்துகிட்டோம். கத்துக்கிறோம்னு தெரியாமயே கத்துகிட்டது...”“அதெல்லாம் இப்ப எதுக்கு?” வித்யா பொரிந்தாள்.

“வாழ்க்கை அப்பப்ப  சிலரை கொண்டு வந்து சேர்க்குது. சில பாடங்களைச் சொல்லித் தருது. அவங்க விலகிப் போனாக் கூட கத்துகிட்ட விஷயம் நம்ம கூடத்தான் இருக்கு. அவங்களுக்கும் அதேபோலத்தான்...’’வித்யாவும் மீனுவும் என்னையே வெறித்தார்கள்.

“எதிர் வீடு எப்பவும் காலியாக் கெடக்கப் போவுதா என்ன? இன்னொரு குடும்பம் வரும். பழகப் போறோம். ஒருத்தருக்கொருத்தர் எதையாவது சொல்லிக் கொடுத்து கத்துகிட்டு அடுத்த லெவலை நோக்கி பயணம். நம்ம வீடோ எதிர் வீடோ ஒரு கூடு மாதிரி அடைச்சு போகாது. புரிஞ்சுதா..?”எதிர் வீட்டு வாசலில் ஒரு டெம்போ வந்து நின்ற சத்தம் கேட்டது.

- ரிஷபன்