65% இந்திய சொத்து 10% பேரிடம் மட்டுமே இருக்கிறது!



உலக மக்கள்தொகை இன்றைய தேதியில் எவ்வளவு தெரியுமா? சுமார் 800 கோடி. ஆனால், இதில் பாதி மக்கள்தொகையான 400 கோடி மக்களிடம் இருக்கும் சொத்தை விட மூன்று மடங்கு அதிகமான சொத்தை வெறும் 60 ஆயிரம் பேர்தான் வைத்திருக்கிறார்கள் என்ற அணுகுண்டுடன் ஓர் ஆய்வு கடந்தவாரம் வெளியிடப்பட்டது. இதை வெளியிட்ட நிறுவனமும் லேசுப்பட்ட நிறுவனமல்ல. நம்பத்தகுந்தது.

ஃபிரான்ஸ் தேசத்தை அடிப்படையாக வைத்து இயங்கும் நிறுவனம் ‘வேர்ல்ட் இன்னீக்குவாலிட்டி லேப்’ எனும் உலக சமத்துவமின்மைக்கான கூடம். 

இதை நிர்வகிப்பவர்களில் பலர் உலகப் புகழ்பெற்ற பொருளாதார நிபுணர்கள். 
உதாரணமாக அண்மையில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு பெருவாரியான வாசகர்களைப் பெற்ற ‘சமத்துவம் நோக்கிய இயக்கம்’ என்ற புத்தகத்தின் ஆசிரியரான தோமஸ் பிக்கட்டியும் இந்த நிறுவனத்தின் முக்கியமான ஒரு பொருளாதார மேதைதான். இவரது பல்வேறு பொருளாதார புத்தகங்களை பல நாடுகளும் உன்னிப்பாக கவனித்து தங்கள் குறைகளைத் தீர்த்துக்கொண்டு வருகின்றன. 

இப்படிப்பட்டவர்கள் இயங்கும் இந்த நிறுவனம்தான் கடந்தவாரம் ‘உலக சமத்துவமின்மைக்கான அறிக்கை-2025’ என்ற ஆய்வை வெளியிட்டு பல நாடுகளின் தூக்கத்தைக் கெடுத்திருக்கிறது. 

இந்நிறுவனம் சில வருட இடைவெளியில் இப்படிப்பட்ட அறிக்கைகள் பலவற்றை ஏற்கனவே வெளியிட்டு உலகப் புகழ்பெற்றிருக்கிறது. சரி... 2025 அறிக்கையில் உலக நாடுகள், அதிலும் குறிப்பாக இந்தியா பற்றி என்ன சொல்கிறது? 

உலகளவில் சமத்துவமின்மை

‘உலக மக்கள்தொகையில் 90 சதவீதத்தினர் சம்பாதிக்கும் வருமானத்தைவிட டாப் பத்து சதவீதமாக இருக்கும் மக்கள்தொகை அதிகமாக சம்பாதிக்கின்றனர். இது அவர்கள் வைத்திருக்கும் சொத்திலிருந்தே தெரிகிறது. 

உதாரணமாக உலகின் 800 கோடி மக்கள்தொகையில் பாதிப்பேர் - அதாவது 400 கோடிப் பேரிடம் இருக்கும் சொத்தைவிட சுமார் 3 மடங்கு சொத்து 60 ஆயிரம் பேரிடம்தான் குவிந்திருக்கிறது’ எனச் சொல்லும் அறிக்கை, ‘இந்தியாதான் உலகிலேயே மிகவும் மோசமான சமத்துவமின்மை நாடாகத் திகழ்கிறது’ எனவும் சான்றிதழ் கொடுக்கிறது. 

இந்தியாவின் சமத்துவமின்மை

‘இந்திய நாட்டின் தேசிய வருமானத்தில் இந்திய மக்கள்தொகையில் 10 சதவீதமாக இருக்கும் மக்கள் சுமார் 58 சதவீதமான வருமானத்தைப் பெற்று விடுகிறார்கள். வருமானத்தில் கீழே இருக்கும் சுமார் 50 சதவீதத்தினர் இந்த தேசிய வருமானத்தில் வெறும் 15 சதவீதத்தை மட்டுமே சம்பாதிக்கிறார்கள்’ எனச் சொல்லும் அறிக்கை இந்த வருமான ஏற்றத்தாழ்வு இந்தியர்களின் சொத்து மதிப்பிலும் பிரதிபலிப்பதாக டேட்டா கொடுக்கிறது.

‘இந்தியாவின் சொத்து மதிப்பில் சுமார் 10 சதவீத மக்கள் மட்டுமே 65 சதவீத சொத்தை வைத்திருக்கிறார்கள். அதிலும் இந்த 10 சதவீத மக்களிலும் சுமார் ஒரு சதவீதம் பேர் அந்த 65 சதவீத சொத்திலும் சுமார் 40 சதவீத சொத்தை வைத்திருக்கிறார்கள்’ எனச் சொல்லும் அறிக்கை மேலும் உலகத்தைப் பற்றி சொல்லும் செய்திகள் அதிர்ச்சிகரமாக இருக்கின்றன.

‘உலகில் கீழ் அடுக்கில் இருக்கும் சுமார் 50 சதவீத மக்கள் உலக வருமானத்தில் வெறும் 8 சதவீதத்தைத்தான் சம்பாதிக்கிறார்கள். அதிலும் சொத்து மதிப்பைப் பொறுத்தளவில் வெறும் 2 சதவீத சொத்துக்குத்தான் அதிபதிகளாக இருக்கிறார்கள்’ எனச் சொல்லும் அறிக்கை இந்தியா பற்றி முத்தாய்ப்பாக இன்னொன்றையும் சொல்கிறது.

‘இந்தியாவில் வருமான சமத்துவமின்மையைவிட சொத்து சமத்துவமின்மை மற்ற நாடுகளைவிட உச்சமாக இருக்கிறது. இது இந்தியாவை மற்ற நாடுகளைவிட மிகவும் மோசமான சமத்துவமற்ற நாடாக வைத்திருக்கிறது’ என்கிறார்கள். 

சரி. தீர்வாக என்ன சொல்கிறார்கள்?

‘அரசு எடுக்கும் கொள்கை முடிவுகள்தான் ஒரு நாட்டின் பொருளாதாரத்தை தீர்மானிக்கிறது. சமத்துவமான சமூகம் உருவாக ‘புரட்சிகரமான வரிகள் (பணக்காரர்களின் மேல் அதிக வரி), வருமானம், சொத்தை எல்லோருக்கும் பகிர்ந்தளிப்பது என்பது நடக்கவேண்டும். இது இல்லாதவரை உலகில் ஏற்றத்தாழ்வான சமூகங்கள்தான் உருவாகும்’ என்கிறது
அந்த அறிக்கை.

டி.ரஞ்சித்