அவதார் வெற்றிக்கு இந்த இந்தியப் பெண்களும் காரணம்!
கடந்த வாரம் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகி, வசூலில் சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கிறது, ‘அவதார்: ஃபயர் அண்ட் ஏஷ்’. இதற்கு முன்பு வெளியான ‘அவதாரி’ன் இரண்டு பாகங்களும் வசூலில் சாதனை படைத்தவைதான். இந்த பிரமாண்ட வெற்றிக்குப் பின்னணியில் இருப்பது படத்தின் விஷுவல் எஃபெக்ட்ஸும், அதன் கலை இயக்கமும்தான்.
 ஆம்; ‘அவதாரி’ன் விஷுவல் எஃபெக்ட்ஸும், அரங்க அமைப்புகளும் பண்டோரா என்ற உலகத்துக்குப் பார்வையாளர்களை அழைத்துச் சென்று, அங்கே வாழ்ந்த அனுபவத்தைக் கொடுத்தது. அத்துடன் அந்த உலகம் மிகுந்த நம்பகத்தன்மையைக் கொண்டதாக இருந்தது. பார்வையாளர்களும் தங்களது கவலைகள், பிரச்னைகளை மறந்து அந்த உலகத்தில் சஞ்சரித்து வந்தனர். இந்தப் பண்டோரா உலகத்தை இயக்குனர் ஜேம்ஸ் கேமரோனுடன் சேர்ந்து தலைசிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் நிபுணர்களும், கலை இயக்குனர்களும் உருவாக்கியிருக்கின்றனர். இதில் குறிப்பிடத்தக்கவர்கள் பவானி ராவ் போடபட்டி மற்றும் ஆஷ்ரிதா காமத். இருவரும் இந்தியர்கள் என்பதுதான் இதில் ஹைலைட்.
 பவானி ராவ் (விஷுவல் எஃபெக்ட் இயக்குனர்)
‘அவதாரி’ன் மூன்று பாகங்களின் விஷுவல் எஃபெக்ட்ஸுக்குப் பின்னணியில் இருக்கும் முக்கியமான நபர்களில், பவானியும் ஒருவர். புது தில்லியைச் சேர்ந்த பவானி ராவ், ‘வீட்டா எஃப்எக்ஸ்’ எனும் நிறுவனத்தில் விஷுவல் எஃபெக்ட்ஸ் சீக்வென்ஸ் சூப்பர்வைசராகப் பணிபுரிந்து வருகிறார். ‘அவதார்’, ‘த லார்டு ஆஃப் த ரிங்ஸி’ன் மூன்று பாகங்கள், ‘கிங் காங்’, ‘அவதார்: த வே ஆஃப் வாட்டர்’, ‘ த ஜங்கிள் புக்’ உட்பட புகழ்பெற்ற பல ஹாலிவுட் படங்களுக்கு விஷுவல் எஃபெக்ட்ஸ் செய்துகொடுத்தது இந்த ‘வீட்டா எஃப்எக்ஸ்’ தான்.
 ‘அவதாரி’ன் மூன்றாவது பாகத்துக்கும் இந்த நிறுவனம்தான் விஷுவல் எஃபெக்ட்ஸை கவனித்திருக்கிறது. இப்படியான ஒரு நிறுவனத்தில்தான் முக்கியப் பொறுப்பில் இருக்கிறார் பவானி. ‘‘‘அவதாரை’த் தியேட்டரில் பார்த்துக்கொண்டிருக்கும்போது, டைட்டில் கார்டில் வீட்டாவின் விஷுவல் எஃபெக்ட்ஸ் குழுவினரின் பெயர்கள் வரும்போது மக்கள் எல்லோருமே எழுந்து நின்று கைதட்டினார்கள்.
அதைப் பார்த்த போது புல்லரித்தது. அதை என்னால் எப்போதுமே மறக்க முடியாது...’’ என்கிற பவானி, புது தில்லியில் உள்ள ‘த ஸ்கூல் ஆஃப் பிளானிங் அண்ட் ஆர்க்கிடெக்சரி’ல் பி.ஆர்க் படித்துவிட்டு, சான் ஃபிரான்சிஸ்கோவில் உள்ள ‘த அகாடமி ஆஃப் ஆர்ட் யுனிவர்சிட்டி’யில் அனிமேஷன் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் பாடத்தில் பட்டம் பெற்றிருக்கிறார். தற்போது நியூசிலாந்தில் உள்ள வெலிங்டனில் வசித்து வருகிறார்.
2005ம் வருடம் வெளியான ‘த கிரானிக்கல்ஸ் ஆஃப் நார்னியா: த லயன், த விச் அண்ட் த வார்ட்ரோப்’ படத்தில் லைட்டிங் டெக்னிக்கல் இயக்குனராகத் தனது திரைப்பயணத்தை ஆரம்பித்தார் பவானி. இதனைத் தொடர்ந்து ‘அவதாரி’ன் முதல் பாகத்தில் லைட்டிங் டெக்னிக்கல் இயக்குனராகப் பணிபுரிய பவானிக்கு வாய்ப்பு கிடைத்தது. இதில் தனது திறமையை அவர் காட்ட, கேமரோனின் நன்மதிப்பைப் பெற்றார்.
கடந்த 2009ல் ‘அவதாரி’ன் இரண்டாம் பாகத்துக்கான பணியை நியூசிலாந்தில் செய்ய ஆரம்பித்தார் கேமரோன். குறிப்பாக நீருக்கடியிலான உலகத்தை நியூசிலாந்தில்தான் மேம்படுத்தினார். கேமரோனுடன் பவானியும் இணைந்து பண்டோராவின் நீருக்கடியிலான உலகத்தை விஷுவல் ரீதியாக கட்டமைக்க பங்களிப்பு செய்தார்.
அன்றிலிருந்து பதினைந்து வருடங்களாக கேமரோனின் அவதார் யுனிவர்ஸில் ஒரு பகுதியாக இருந்து வருகிறார் பவானி. ‘அவதார் : த வே ஆஃப் வாட்டரி’ல் 3000 விஷுவல் எஃபெக்ட்ஸ் ஷாட்கள் வருகின்றன. இதில் பெரும்பாலானவை நீருக்கடியில் படமாக்கப்பட்டவை. அதை எல்லாம் மேற்பார்வையிட்டு, அற்புதமாக காட்சிகளாக மாறுவதற்கு காரணமாக இருந்தவர் பவானிதான்.
ஓர் இயக்குனர் நினைக்கும் விஷுவலை எப்படி உருவாக்குவது, அதற்கு என்ன மாதிரியான தொழில்நுட்பம் தேவைப்படும், எவ்வளவு செலவாகும் போன்றவற்றைக் கணிப்பதும் பவானியின் முக்கியப்பணி.
இதனை தனியாளாக இல்லாமல் ஒரு குழுவுடன் சேர்ந்து செய்கிறார். ‘‘விருதுகளை வென்ற விஷுவல் எஃபெக்ட்ஸ்கள் எல்லாமே குழுவால் உருவானதுதான். அது ஒன்றும் தனிநபர் முயற்சி அல்ல...’’ என்கிற பவானி, ‘அவதார் : ஃபயர் அண்ட் ஏஷ்’ஷிலும் பணியாற்றியிருக்கிறார். இதன் விஷுவல் எஃபெக்ட்ஸும் பிரமிக்க வைக்கிறது. ‘த இன்கிரிடிபிள் ஹல்க்’, ‘ரைஸ் ஆஃப் த பிளானட் ஆஃப் த ஏப்ஸ்’, ‘ த அட்வென்ச்சர்ஸ் ஆஃப் டின்டின்’, ‘த ஹாபிட்’ உட்பட பல புகழ்பெற்ற படங்களில் பணியாற்றியிருக்கிறார் பவானி.
ஆஷ்ரிதா காமத் (கலை இயக்குனர்)
‘அவதாரி’ன் இரண்டு மற்றும் மூன்றாம் பாகத்தின் பண்டோராவைக் கட்டமைத்த கலை இயக்குனர்களில் ஆஷ்ரிதா காமத்தும் ஒருவர். கொல்கத்தாவில் பிறந்து, சென்னையில் வளர்ந்தவர் ஆஷ்ரிதா. பள்ளியில் படிக்கும்போதே சினிமாவின் மீது காதல் கொண்டு விட்டார். மும்பையில் உள்ள செயின்ட் சேவியர்ஸ் கல்லூரியில் சோஷியாலஜி படித்த போது, அவருக்கு கலைத்துறையின் மீதும் ஈடுபாடு ஏற்பட, பாலிவுட்டில் உள்ள கலைத்துறையில் பணியாற்றத் தொடங்கினார்.
ஆரம்பத்தில் சில விளம்பரப் படங்களின் கலைத்துறையில் வேலை செய்தார். பிறகு 2010ல் வெளியான ‘வெஸ்ட் இஸ் வெஸ்ட்’ எனும் படத்தின் கலைத்துறையில் உதவியாளராகத் தனது திரை வாழ்க்கையை ஆரம்பித்தார். இது பிரபலமான பிரிட்டிஷ் படமான ‘ஈஸ்ட் இஸ் ஈஸ்ட்’டின் இரண்டாம் பாகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்குப் பிறகு சில குறும் படங்களில் கலை இயக்குனராகப் பணிபுரிந்த, ஆஷ்ரிதா, ‘அவதார்: த வே ஆஃப் வாட்டர்’ மற்றும் ‘அவதார்: ஃபயர் அண்ட் ஏஷ்’ஷில் சூப்பர்வைசிங் கலை இயக்குனராகப் பணிபுரிந்திருக்கிறார். இந்த இரண்டு படங்களின் அரங்க அமைப்பிலும் ஆஷ்ரிதாவின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.
த.சக்திவேல்
|