என்ர மனைவி சொக்கத் தங்கமாக்கும்!



மச்சான் கல்யாணத்தை முன்னிட்டு கல்யாணத் துணிகள் பர்ச்சேசிற்காக மாமியார் சென்னை வந்திருந்தார். மாமியார், ஊருக்கு கிளம்புவதற்கு முன்பாக என்னிடம் பைசா கொடுத்து, ‘‘தம்பி, உங்களுக்கும் ஆதித்துக்கும் ட்ரெஸ் எடுத்துக்க வச்சிக்கங்க...’’ என்றார்.
‘‘இல்ல பரவாயில்ல வச்சிக்கங்க. வேற செலவுக்கு ஆகும்...’’ என்று அவர்களின் சிரமம் புரிந்தவனாக சொன்னேன். உடனே என்ர வீட்டம்மணி, ‘‘ஏங்க, வாங்கிக்குங்க. எதுக்கு உங்க மாப்ள முறுக்க விட்டுக் கொடுக்குறீங்க...’’ என்றார்.

சின்ன ஃப்ளாஷ்பேக். தம்பியின் திருமணத்தை ஒட்டி, வீட்டம்மா என்னிடம் பட்டுப்புடவை எடுத்துக் கொடுக்கச் சொல்லிக் கேட்டிருந்தார். அதற்கு நான், ‘உன் தம்பிக்கு கல்யாணம்னா உங்க அம்மா வீட்லதானே நமக்கு டிரஸ் எடுத்துக் கொடுக்கணும்’ என்று கேட்டிருந்தேன். அதை அம்மணி அவங்க அம்மாவிடம் போனில் சொல்லிக் கொண்டிருந்ததை நான் ஒட்டுக் கேட்டேன். ஆக்சுவலி, அதுவா காதுல விழுந்துச்சு.

‘யம்மா, அவருக்கு டிரஸ் எடுத்துக் கொடுத்திருங்க. நீங்க பாட்டுக்கும் ‘தம்பி அதெல்லாம் எதிர்பாக்காது’ன்னு நெனச்சிட்டு இருந்துறாதிய... அவர் எதிர்பாக்க மாட்டாருதான்... ஆனா, எதுக்கு நமக்கு சொல்கடன்..?’ என்று ஊதிக் கொண்டிருந்ததன் நீட்சிதான், இப்போ இந்த ‘மாப்பிள்ளை முறுக்க விட்டுக் கொடுக்காதிய’ டயலாக்.

‘‘வாங்கிக்கங்க தம்பி...’’ என மாமியார் ரொம்ப மல்லுக்கட்டவும் வாங்கிக் கொண்டேன். வாங்கி பாக்கெட்டில் வைக்கப் போன நொடியில், ‘‘ஏங்க, வீடு குடிபோறதுக்கு நாமளும் அம்மா வீட்ல எல்லாருக்கும் டிரஸ் எடுத்துக் கொடுக்கணும்... வெளக்கு வாங்கி வைக்கணும்... நம்மளால கடை கடையா அலைய முடியாது. காசா கொடுத்திருவோம்...’’ என்று ‘கிழக்குச் சீமையிலே’ ராதிகா கணக்கா, ‘அப்படியே எங்க அண்ணனுக்கு ஒரு தாக்கல் விட்டு...’ டைப்பில் ஆரம்பிச்சார். 

அதாவது , மாமியார் வீட்டில், மச்சினன் கண்ணாலத்துக்கு மொத வாரம் புதுமனை புகு விழாவும் வைத்திருக்கிறார்கள். அதற்காக மகள் செய்யும் முறையாம். ரிமம்பர் தட் ‘பருத்தி மூட்டை’ மொமண்ட். பொறவு என்ன... இப்படி வாங்கின பணத்தோட மேக்கொண்டு பணம் போட்டு, அப்படீக்கா மாமியார்கிட்டயே ரிட்டன் பண்ணப் போனேன். 
ஆனா, அங்கதான் என் பொண்டாட்டிய மெச்சிக்கணும்.

‘‘அம்மா கொடுத்த பணத்தையே திருப்பிக் கொடுக்காதீங்க...’’ என்றார். ‘‘அவங்க கையால வாங்குன பணத்த, அப்படியே திருப்பிக் கொடுத்தா நல்லாவா இருக்கும்?’’ என்றார்.
நானும் தலையாட்டி, ஏடிஎம் சென்று வேறு பணம் எடுத்து வந்து கொடுத்தேன். சீரியல் கன்டென்ட் எப்படி அனாமத்தா எங்கூட்ல கொட்டிக் கெடக்குது பாத்தியளா..!

அ.பாரி