ஏமன் நாட்டுக்கு இட்லி பொடி... மலேசியாவுக்கு சிறுதானியம்... பிசினஸ் செய்யும் மதுரை அடித்தட்டு பெண்கள்!



இது தமிழ்நாட்டின் சாதனை

‘‘எப்ப ஒரு பெண் தன்னம்பிக்கையாக வீட்டில் இருக்க முடியும்னா அது சம்பாதிக்கும்போதுதான். அதனால், பெண்களுக்கு தொழில் பயிற்சி அளிச்சு அவங்கள ஒரு சிறந்த தொழில்முனைவோராக உருவாக்கிட்டு இருக்கோம்...’’ நம்பிக்கை ததும்ப பேசும் இளமதி, மதுரையிலுள்ள கிரீன் ஃபெம் உற்பத்தியாளர்கள் நிறுவனத்தின் இயக்குனர். 
இந்த கிரீன் ஃபெம் என்பது பெண்களுக்கான தொழில்முனைவோர் கூட்டமைப்பு. அதுவும் குறிப்பாக அடித்தட்டு பெண்களுக்காகத் தமிழகத்தில் முதல்முறையாக உருவாக்கப்பட்டுள்ள ஒரு கூட்டமைப்பு இது.

இதன்வழியே இன்று பல அடித்தட்டு பெண்கள் சிறு, குறு தொழில்கள் மூலமாக சிறந்த தொழில் முனைவோராக வந்திருப்பதுதான் ஹைலைட். இவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கிறார் இளமதி. ‘‘இந்தக் கூட்டமைப்பை அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி ஆரம்பிச்சோம். இப்ப சிறப்பாக போயிட்டு இருக்கு. எனக்கு சொந்த ஊர் திருச்சி. திருமணமாகி மதுரையில் செட்டிலாகிட்டேன். நான் மாஸ்டர் ஆஃப் சோசியல் வொர்க் படிச்சிருக்கேன். 

அப்புறம் ஃபோர்டு பவுண்டேஷன் ஃபெல்லோஷிப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டு லண்டன் போய் ஜெண்டர் அண்ட் டெவலப்மென்ட் பத்தி படிச்சேன். என்னுடைய படிப்பே பெண்களும், அவங்க பொருளாதார வாழ்க்கையும் பத்தினதுதான். குறிப்பா, பெண்களுக்கு நிதி சார்ந்து ஒரு சுதந்திரம் இருந்துச்சுனா அவங்களுக்கு உண்மையான எம்பவர்மென்ட் நடக்கும் என்கிற நம்பிக்கை எனக்குண்டு. 
படிப்பு முடிச்சதும் பல நிறுவனங்கள்ல வேலை செய்திட்டு 2015ம் ஆண்டு மதுரை வாப்ஸ் (VAPS) அமைப்புல சேர்ந்தேன். இதன் பெயர் ‘வாலண்டரி அசோசியேஷன் ஃபார் பீப்பிள் சர்வீஸ்’. இதுதான் எங்களுடைய தாய் நிறுவனம். 

இந்த அமைப்பு வழியாக பெண்களுக்கு நிறைய தொழில் திறன் பயிற்சிகள் கொடுத்துட்டு வர்றோம். இப்பவும் ராமநாதபுரம், விருதுநகர், திருச்சி, தேனி, தஞ்சாவூர் இங்கெல்லாம் திறன் வளர்ப்பு பயிற்சிகள் போயிட்டு இருக்கு. சணல் பைகள், இயற்கை சோப்புகள், இயற்கை அழகுசாதனப் பொருட்கள், சிறுதானிய ஹெல்த் மிக்ஸ், சிறுதானிய பொங்கல் மிக்ஸ் மாதிரி இயற்கை சார் பொருட்கள் தயாரிப்பில் பயிற்சிகள் கொடுப்போம்.  

ஒருகட்டத்துல பல கேள்விகள் எழுந்துச்சு. இந்தப் பயிற்சி வழியாக தொழில் தொடங்குபவர்கள் உண்மையாகவே சந்தையில் இடம் பிடிக்கிறாங்களா, வெளியில் போறாங்களா, தன்னம்பிக்கை வந்திருக்கா, நல்லா சம்பாதிக்கிறாங்களானு பல கேள்விகள். இதனால் சின்னதாக ஓர் ஆய்வு செய்தோம். 

அப்பதான் ஒரு விஷயம் தெரிஞ்சது. ஆண் ஈசியா பிசினஸ் பண்ணிடறார். பெண்ணால் முடியலை. காரணம், ஆண்களுக்கு லோன் எங்க கிடைக்குதுனு தெரியுது. அதுக்கான ரா மெட்டீரியல்ஸ் எங்க இருக்குனு விசாரிச்சுப் போறாங்க. சரியாக புரொமோட் செய்றாங்க. 

பெண்கள் அப்படியில்ல. குறிப்பா, நாங்க தொழில் திறன் பயிற்சி கொடுக்கிற பெண்கள் எல்லோருமே அடித்தட்டு பெண்கள். ரொம்ப கஷ்டத்துல உள்ளவங்க, வீட்டுல அனுமதி கிடைக்காதவங்க, பொருளாதாரத்தில் நலிவடைஞ்சவங்க, கணவரைப் பிரிஞ்சவங்கனு இருக்கிற பெண்கள். அதனால் பயிற்சி எடுத்த பெண்களால் உடனே ஒரு தொழில்முனைவோராக ஆக முடியல.

அவங்களுக்கு உற்பத்தி பொருள்களுடைய விவரங்கள், சந்தையில் என்ன டிமாண்ட் இருக்குனு எல்லாம் தெரியணும். நல்லா பேசத் தெரியணும். தொடர்ச்சியா ஒரு வியாபாரத்தை ஒழுங்காகப் பண்ணத் தெரியணும்.அதனால் நம் வாடிக்கையாளர் யார், மதுரையில் மட்டும் தொழில் செய்யப் போறோமா அல்லது வெளியிலும் செய்யப் போறோமா, எப்படி ஒரு பேக்கேஜிங் பண்றது, எப்படி லேபிளிங் பண்றது இப்படி பல விஷயங்களை அவங்களுக்குச் சொல்ல வேண்டியிருந்தது. 

அப்ப எங்களை மாதிரியே நிறைய நிறுவனங்கள் இப்படி பயிற்சி மட்டுமே கொடுத்திட்டு இருக்கோம்னு தெரிஞ்சது. ஆனா, தொழில்முனைவோரா மாறும் பெண்கள் ரொம்ப குறைவு. அரசு நிறைய லோன் கொடுக்குது. அதெல்லாம் இந்தப் பெண்களுக்குத் தெரியலை. அப்பதான் பெண்களுக்கான ஒரு தொழில்முறை கூட்டமைப்பை உருவாக்கணும்னு முடிவெடுத்து இந்த கிரீன் ஃபெம் உற்பத்தியாளர்கள் அமைப்பை ஆரம்பிச்சோம். இதில் இப்ப 400 பெண்கள் வரை இருக்காங்க. 

இதில் பல பெண்கள் எட்டாவது, பத்தாவது, 12ம் வகுப்பு வரை படிச்சவங்கதான்...’’ என்கிற இளமதி, கூட்டமைப்பின் வழியே செய்த பணிகளைக் குறிப்பிட்டார்.‘‘முதல்ல டிஜிட்டல் மார்க்கெட்டிங்கை கத்துக்கொடுத்தோம். எப்படி யூடியூப்ல போடுறது, போட்டோவை எப்படி எடுக்கிறதுனு எல்லாமே கத்துக் கொடுத்தோம்.

உதாரணத்திற்கு ஹெல்த் மிக்ஸ் தயாரிக்கிறாங்க. எப்படி அதை சரியாக போட்டோ எடுத்து அப்லோடு பண்றது, யூடியூப்ல எப்படி தன் பொருளைப் பத்தி பேசுறது, ஒரு ஆப்பை எப்படி பயன்படுத்துறது, எப்படி எடிட் பண்றது, ஃபேஸ்புக் அக்கவுண்ட் எப்படி ஆரம்பிக்கிறது உள்ளிட்ட பல விஷயங்களைச்  சொல்லிக் கொடுத்தோம். 

இன்னைக்கு நிறைய பேர் யூடியூப் சேனல்ஸ் வச்சிருக்காங்க. கூடவே நிறைய சப்ஸ்கிரைபர்ஸும் அவங்களுக்குக் கிடைச்சிருக்காங்க.  அதுதவிர, தனியார் நடத்துற நிறைய கண்காட்சிக்கு அழைச்சிட்டுப் போய் அவங்களை வெளிக்கொண்டு வந்தோம். அப்படியாக பலர் மாநிலம் விட்டு மாநிலம் போய் தங்கள் பொருட்களைக் காட்சிப்படுத்துறாங்க. இப்ப அரசின் மகளிர் திட்டத்துலகூட எங்க பெண்களுக்கு மட்டுமே 25 ஸ்டால் கொடுத்தாங்க. 

இதன்மூலம் சாதாரண பெண்களைத் தொழில்முனைவோராக ஆக்கியிருக்கோம். இப்ப எங்க பெண்கள் சணல் மற்றும் துணிப் பையில் மட்டுமே 180 வெரைட்டி பண்றாங்க. மொத்தமாக உற்பத்தி செய்து நிறுவனங்கள் வழியாக சப்ளை செய்றாங்க.அடுத்து சாம்பிராணி உள்ளிட்ட பூஜைப் பொருட்களை மாட்டுச்சாணத்தில் இருந்து தயாரிக்கிறாங்க. அடுத்து குளியல் மஞ்சள், லிப் கிளாஸ் எல்லாம் இயற்கை முறையில் பண்றாங்க. 

அப்புறம் சிறு, குறு தானிய மதிப்பு கூட்டல் பொருட்கள் பண்றாங்க. இதில் கேழ்வரகு கஞ்சி மிக்ஸ், பூங்கார் அரிசி கஞ்சி மிக்ஸ், மாப்பிளை சம்பா இடியாப்ப மிக்ஸ், நூடுல்ஸ்னு வெரைட்டியாக செய்றாங்க. பாரம்பரிய அரிசிகள், ஆர்கானிக் காய்கறிகளை நேரடியாக விவசாயிகளிடம் இருந்து வாங்கி விற்பனை செய்றாங்க. அடுத்து சாம்பார் பொடி, சிக்கன் மசாலா, மட்டன் மசாலா எல்லாம் பண்றாங்க. 

சமீபமாக இதைக் காட்சிப்படுத்த ஆரோக்கிய சந்தைனு மதுரை காந்தி மியூசியத்துல 45 ஸ்டால்கள் போடுறோம். ஒவ்வொரு மாதமும் முதல் சனிக்கிழமை இந்தச் சந்தை நடக்கும். 
எங்க கூட்டமைப்பினால் இன்னைக்கு நிறைய பெண்கள் பயனடைந்துள்ளனர். நிறைய பேர் நல்லா சம்பாதிக்க ஆரம்பிச்சிருக்காங்க. முதல்ல தயங்கி நின்ற பலர் இப்போ வெளியில் வர ஆரம்பிச்சிருக்காங்க. அவங்களுக்கு வாழ்க்கையிலும், வியாபாரத்திலும் ஒரு தெளிவு கிடைச்சிருக்கு.

உதாரணத்திற்கு ‘மதுரை மாடசாமி இட்லி பொடி’னு ஒரு பெண் செய்றாங்க. அவங்க 15 வகையான இட்லி பொடிகளைத் தயாரிச்சு அதனை ஒரு கான்டிராக்டர் மூலமாக ஏமன் நாட்டிற்கு அனுப்பறாங்க. அப்புறம் ‘மகிழ்’ என்ற பெயர்ல ஒரு பெண் சிறுதானியங்களை மலேசியாவுக்கு சப்ளை பண்றாங்க. இன்னொரு பெண் பெருங்காயம் மட்டுமே சந்தைப்படுத்துறாங்க. மதுமிதா பொட்டிக், ஹெச்எம் பேஷன்ஸ்னு சிலர் மார்க்கெட் பண்றாங்க. இப்படி ஒவ்வொருவரும் ஒரு பிராண்டுடன் சிறப்பாக செயல்படுறாங்க. 

இதில் இன்னொரு முக்கிய விஷயம், ஆறு ஆண்டுகளுக்கு முன்னாடி வங்கிகள் லோன் கொடுக்கக்கூட தயங்கினாங்க. இப்ப நாங்க ஒரு கூட்டமைப்பாக இருக்கிறதால அதன் கீழ் நிறைய வங்கிகள் லோன் கொடுக்க முன்வர்றாங்க.  அதனால் அடுத்ததாக நாங்க மதுரை மட்டுமில்லாமல் எங்க கூட்டமைப்பின் கிளையை ராமநாதபுரம், தேனி, தஞ்சாவூர் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்கள்ல ஆரம்பிக்கலாம்னு இறங்கியிருக்கோம். 

அப்படியாக இப்போ ராமநாதபுரம் மாவட்டத்துல பனையோலை செய்கிற பெண்களுடன் வேலை செய்றோம். கிட்டத்தட்ட 2000 பெண்களுக்கு பனையோலைப் பயிற்சிகளைச் சொல்லிக் கொடுத்து எந்த ஒரு மிடில்மேன் ஆக்கிரமிப்பும் இல்லாமல் விற்பனை செய்ய கத்துக்கொடுத்திட்டு இருக்கோம். இந்தக் கூட்டமைப்பின் வழியே நிறைய பெண்களுக்கு உதவணும் என்பதே எங்க நோக்கம். பெண்கள் பொருளாதாரத் தன்னிறைவுடன் சமத்துவமாக வாழணும். அதுவே எங்க குறிக்கோள்...’’ என அழுத்தமாகச் சொல்கிறார் இளமதி.

பேராச்சி கண்ணன்