சிறுகதை-இலவசப் புத்தகம்
‘வீட்டைக் கட்டிப்பார்’ என்று சொன்னவன் எவனாவது ‘வீட்டை மாற்றிப் பார்’ என்று சொல்லியிருக்கிறானா?
 பத்தாவது முறையா அல்லது பதினொன்றாவது முறையா என்று சரியாக நினைவில் இல்லை - வீடு மாற்றுகிறேன். இந்த வீட்டுக்காரனுக்கு வீடு வேண்டுமாம். மாடு கன்று போட்டது, பெண் டிரான்ஸ்பரில் வருகிறாள், மாடி கட்டப்போகிறேன் என ஏதோ ஒரு காரணம்.
நாம் அதைப்பற்றி கவலைப்படுவது விவேகமற்றது! ஒவ்வொரு முறை வீடு மாற்றும்போதும் ஒவ்வொரு கள்ளிப்பெட்டி நிறையப் புத்தகங்கள் அதிகமாகிக்கொண்டே வருகின்றன. புத்தகங்கள் வாசிப்பது என்பது என் உடன் பிறந்த குணம். நல்ல புத்தகங்கள் எங்கிருந்தாலும் வாங்கி அடுக்கி விடுவது என் வழக்கம்! புத்தகங்களை எங்கே அடுக்கி வைப்பது என்பதும், மீண்டும் வரிசைப்படியோ, மனதிற்குப் பிடித்தபடியோ மாற்றி அடுக்கி வைப்பது என்பதும் ஒரு பெரிய வேலை. ஆனாலும் சுவாரஸ்யமான வேலை! ‘அட, இந்தப் புத்தகம் இங்கே இருக்கிறதா’ என நினைவிலிருந்து மறைந்த சில புத்தகங்களை மறு கண்டுபிடிப்பு செய்து மகிழ்வது, கோடையில் ஆலங்கட்டி மழையில் நனைவதற்கு ஒப்பானது!
ஆனாலும், வாங்கியிருக்கும் அத்தனை புத்தகங்களையும் இந்த ஜென்மத்தில் வாசித்துவிட முடியாது என்பதும் உண்மையே. ‘பின் எதற்காக இவ்வளவு புத்தகங்கள்?’ என்பது விடையில்லாத வினா!
அடுக்கி வைக்கிறேன் பேர்வழி என்று, நின்றவாக்கிலோ, தரையில் அமர்ந்த வாக்கிலோ கையில் கிடைத்த புத்தகத்தில் பத்து பக்கமாவது வாசிப்பது ஒருவகை சுகம் என்றாலும், மனைவியின் பெருமூச்சுக்கும், கோபத்திற்கும் ஆளாகும் தருணம் அது என்பது அனுபவம்!
என் புத்தக அலமாரியைப் பார்த்து ‘இவ்வளவு புத்தகமா?’ என்று வியப்பவர்களிடம் எனக்கு ஒருவித பயம் இருக்கிறது. அடுத்த முறை அவர்கள் வரும்போது, ஓரிரண்டு புத்தகங்களை இரவல் கேட்டுவிடும் அபாயம் அதில் தொக்கியிருக்கிறது. இரவல் கொடுத்த புத்தகங்கள் திரும்பி வந்ததாகச் சரித்திரமே இல்லை.
கொடுத்த எனக்குதான் மறதி என்றால், புத்தகத்தை வாங்கிச் சென்றவருக்குமா மறதி? சில சமயங்களில், திரும்பி வராத புத்தகத்தின் - அது நான் விரும்பிப் படித்த புத்தகமாக இருந்தால் - புதிய காப்பி ஒன்றை வாங்கி வைத்துவிடுவேன். அது ஒரு ‘புத்தக மேனியா’ என்று வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளுங்கள், எனக்குக் கவலையில்லை. வீடு நிறையப் புத்தகங்கள்! வாசிக்காத புத்தகங்களே அதிகமாக அலமாரியில் தூங்குகின்றன. “எத்தனை புத்தகங்கள்? படித்தவற்றையாவது லைப்ரரிக்கோ, நண்பர்களுக்கோ கொடுத்து விடலாம்தானே?” என்னும் வழக்கமான மனைவியின் சலிப்பை என் புத்தகக் காதல் புறந்தள்ளிவிடும்!புதிதாக மாறும் வீடு, இரண்டு பெட் ரூம் ஃப்ளாட் என்றாலும், புத்தக அலமாரியென்று ஒன்று தனியாக இல்லை - இருக்கும் அலமாரிகளில் துணிகள் போக, மீதியிடத்தில் குண்டு குண்டாக நான்கைந்து புத்தகங்களை அடுக்கமுடியும், அவ்வளவுதான்.
அறுநூறு எழுநூறு பக்கங்களுக்கு நாவல் எழுதும் எழுத்தாளர்கள் எப்போதும் என்னை பயமுறுத்துவார்கள். நாவல் சுவாரஸ்யமாகத்தான் இருக்கும். ஆனாலும் குண்டுப் புத்தகத்தைக் கையில் வைத்துப் படிப்பதும், அலமாரியில் இருக்கும் இடத்தில் அடுக்கி வைப்பதும் ஆயாசம் தரும் பயிற்சிகள்!புது வீட்டிற்கு எல்லாவற்றையும் மாற்றிவிட்ட பிறகும், இரண்டு மர நாற்காலிகள், ஒரு கால் உடைந்த டீபாய், இரண்டு பெரிய கள்ளிப்பெட்டிகள் நிறைய வாசித்த, வாசிக்காத புத்தகங்கள் எல்லாம் புது வீட்டில் இடமின்றித் தரையில் கிடந்தன.
புத்தகங்களை விற்றுவிடலாமா? விற்க மனமில்லை; வாங்க ஆளில்லை என்பது வேறு விஷயம். இது என்ன டிவியா, உடனே விலை போவதற்கு? நல்ல புத்தகங்களைக்கூட எடைக்குத் தான் எடுத்துக்கொள்கிறார்கள்! புத்தகங்களை எடைக்குப் போடுவது, ஏழு ஜென்மத்திற்கும் தொடரும் பாவம் என்று எனக்குத் தோன்றும். இப்போதெல்லாம் புதுப் புத்தகங்களைக் கூட எடை அளவில் விற்பதாக எங்கோ படித்த ஞாபகம்.
இலவசமாகக் கொடுத்தாலும், நூலகங்களில் புத்தகங்களை வாங்குவதில்லை. இடப் பற்றாக்குறை என நான் நினைக்க, நூலகரோ, ‘‘இதையெல்லாம் யார் சார் இப்போ படிக்கிறாங்க?” என்று என் ரசனையைக் கேலி செய்வதுபோல் சொல்கிறார்! வாடகை நூலகங்களிலோ, “இதெல்லாம் சர்குலேஷன் ஆவாது சார். ஆங்கில நாவல்கள், சில வார, மாதப் பத்திரிகைகள், சினிமா மற்றும் பொழுதுபோக்குப் புத்தகங்களுக்கு மட்டும்தான் இப்போ டிமாண்டு...” என்று சொல்பவர், சுறுசுறுப்பாகக் கைபேசியில் ரீல்ஸ் பார்க்கத்தொடங்கி விடுவார்!
இதையெல்லாம் யாரிடம் சொல்லி அழ?
ஒரு நடிகர் செய்தது போல, ஒரு நாள் எல்லாப் புத்தகங்களையும் வீட்டுக்கு வெளியே அடுக்கி வைத்து, ‘வேண்டியவர்கள் வந்து எடுத்துச் செல்லலாம்’ என்று அழைப்பு விடலாமா? புத்தகங்களைப் பார்க்க வந்த கூட்டத்தைவிட, நடிகரைத் தரிசிக்க வந்த ரசிகக் கூட்டமே அதிகமாக இருந்ததாக, அக்கம்பக்கத்தில் பேசிக்கொண்டார்கள்! என் முகத்தைப் பார்க்க யார் வருவார்கள்?
ஒரு முடிவுக்கு வந்தேன்.தினமும் நான் நடைப்பயிற்சிக்குப் போகும் அந்தப் பூங்காவில், காலையும் மாலையும் நடைப்பயிற்சிக்கு, உடற்பயிற்சிக்கு, காற்று வாங்க, கடலை போட எனக் கூட்டம் இருக்கும். ஊர் வம்பு பேசியபடி நடக்கும் நடைப்பயிற்சி. அங்கு ஒருநாள் எல்லாப் புத்தகங்களையும் அழகாக அடுக்கி வைத்து, “வேண்டியதை எடுத்துக்கொள்ளுங்கள் - இலவசம்” என்று போர்டு ஒன்றை எழுதி வைத்தேன். நம்ம ஊரில் இலவசங்களுக்கு இருக்கும் மகிமையை நன்கு அறிந்தவன் நான்!
இலவச ஈர்ப்பில், சிலர் நின்றபடி புத்தகங்களை வேடிக்கை பார்த்தனர். சில பெரிசுகள் கண்ணாடியைத் துடைத்துப் போட்டுக்கொண்டு, எல்லாத் தலைப்புகளையும் வாசித்துவிட்டு, தலையை ஆட்டியபடி சென்றன. செல்போனில் பேசியபடி சென்றவர்கள், ஓரக்கண்ணால் புத்தகங்களை அளந்து சென்றனர். ஓரிருவர், தனக்குப் பிடித்த எழுத்தாளர்களின் புத்தகங்களை, நன்றியுடன் எடுத்துச் சென்றனர்.
பூங்காவின் வாசலில் மிளகாய் பஜ்ஜி, சூடான பட்டாணி சுண்டல், கடலை, சோளக் கதிர், ஐஸ்கிரீம் விற்பவர்கள் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தனர். நல்ல கூட்டம்!
காத்திருந்தேன். நல்ல புத்தகங்களை இலவசமாகக் கொடுத்தாலும் வாசிக்கத் தயாரில்லாத சமூகம் எப்படி இருக்கும்? மனதுக்குள் குமைந்தேன்.
அப்போது என்னை நோக்கி ஓடிவந்த சிறுவனுக்குப் பத்து வயதிருக்கலாம். எதிரில் நின்றவன் முக மலர்ச்சியுடன் எல்லாப் புத்தகங்களையும் பார்த்தான். சில குண்டுப் புத்தகங்களைத் தடவிப் பார்த்தான். அவன் முகத்தில் இருந்த எதிர்பார்ப்பு எனக்கு மகிழ்ச்சியளித்தது.
“எந்தப் புத்தகத்தை எடுத்தாலும் இலவசமா?” என்றான். அவனது புத்தக ஆர்வம் என்னைக் கவர்ந்தது.“ஆமாம், எல்லாமே...” என்றேன்.அளவில் சிறிது பெரிதான இரண்டு புத்தகங்களை எடுத்துக்கொண்டு, “தேங்க்ஸ்...” என்றபடி ஓடிவிட்டான்.
நான் மிகவும் ரசித்து வாசித்த புத்தகங்கள் அவை! ‘கடை விரித்தேன், கொள்வாரில்லை’ என, மீதிப் புத்தகங்களுடன் வீட்டுக்கு வந்துவிட்டேன். அந்தச் சிறுவனின் முகமே என் மனதில் திரும்பத் திரும்ப வந்தது. ‘புத்தகங்களுக்கு அழிவில்லை’ என நினைத்துக்கொண்டேன்.மறுநாள் காலை, வழக்கம்போலப் பூங்காவிற்கு நடைப்பயிற்சிக்குப் போனேன். காலை இள வெயிலில் புல்வெளி இரவுப் பனியால் பளிச்சென்றிருந்தது.நான் ரசித்து வாசித்த புத்தகத்தின் முதல் பக்கம் கிழிக்கப்பட்டு, புல்வெளியில் படபடத்துக்கொண்டிருந்தது! அதில் என் கையொப்பமுடன், வாங்கிய தேதியும் பளபளவென எண்ணெய்க் கறையுடன் என்னைப் பார்த்துச் சிரித்தன.
ஜெ.பாஸ்கரன்
|