நட்சத்திரங்கள் பாதி... பூர்ணிமா ராமசாமி காஸ்டியூம்ஸ் மீதி!
ஆடை வடிவமைப்பாளர் பூர்ணிமா ராமசாமிக்கு எந்த அறிமுகமும் தேவையில்லை. முதல் படத்திலேயே தேசிய விருது பெற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர்.நாயுடு ஹால் வீட்டுப்பெண் என்ற அடையாளம் அவருக்கு இருந்தாலும்கூட சினிமா ஆடை வடிவமைப்பே அவரைத் தனித்துவமாக்கி இருக்கிறது. ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘36 வயதினிலே’, ‘ராட்சசி’, ‘இறுதிச்சுற்று’, ‘நேர்கொண்ட பார்வை’ முதல் ‘டியூட்’ வரை பல வெற்றிப் படங்களுக்கு ஆடை வடிவமைப்பு செய்தவர். இதோ, இப்போது சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள, ‘பராசக்தி’ படத்தின் ஆடை வடிவமைப்பில் தனி முத்திரை பதித்திருக்கிறார். ‘பராசக்தி’?
ரொம்ப சிறப்பாக வந்திருக்கு. இந்தப் படத்தின் காஸ்டியூம் நான் எதிர்பார்க்காத அளவில் இன்டரஸ்டிங்காக இருந்தது. நான் சினிமாவுல கரியர் ஆரம்பிச்ச முதலா எனக்கு சுதா கொங்கரா பழக்கம். ஏன்னா, பாலா சாருடைய ‘பரதேசி’ படத்துல அவங்க இணை இயக்குநராக இருந்தாங்க. அப்போ பாலா சார் அவங்களை அறிமுகப்படுத்தி, ‘உங்களுக்கு காஸ்டியூம்ல ஏதாவது சந்தேகம் இருந்தா இவங்க கைடு பண்ணுவாங்க’னு சுதாவை அறிமுகப்படுத்தி வச்சார். அப்போதிலிருந்து நாங்க ஃப்ரெண்ட்ஸ்.
 பிறகு அவங்ககூட சேர்ந்து, ‘இறுதிச்சுற்று’, ‘சூரரைப் போற்று’ படங்கள் பண்ணினேன். அந்த நட்பு ‘பராசக்தி’ வரை அப்படியே தொடருது. இந்தப் படத்தின் கதை 1965ல் நடப்பது போன்றது. இதுக்காக நிறைய ரிசர்ச் வொர்க் பண்ணினேன். அந்த டைமில் வாழ்ந்த நிறைய பேரைச் சந்திச்சேன். இன்னைக்கு தாத்தா, பாட்டியாக இருக்கிற பலர் அந்தக் காலக்கட்டத்தைச் சேர்ந்தவங்கதானே!
 அவங்ககிட்ட நேரடியாகப் போய் அப்போ என்ன மாதிரியான ஆடைகள் உடுத்தினீங்க, எந்த மாதிரியான நகைகள் போட்டீங்க, அப்போதைய ட்ரெண்ட் என்னவாக இருந்ததுனு பல தகவல்களைக் கேட்டு சேகரிச்சேன். அது நல்ல அனுபவமாக இருந்தது. அந்தக் காஸ்டியூமை அப்படியே படத்தில் கொடுத்திருக்கோம். இது மக்கள்கிட்ட நல்லா ரீச்சாகும்னு நம்பிக்கை இருக்கு. 1965 கால காஸ்டியூம்... நடிகர், நடிகைகள் என்ன சொன்னாங்க?
அவங்க எல்லோருமே டைரக்டரின் கதைக்கு என்ன தேவைப்படுதோ அதைச் சிறப்பாக செய்யணும்னு நினைக்கிறவங்க. அதனால், எல்லோருமே ரொம்ப ஒத்துழைப்பு தந்தாங்க. காஸ்டியூம் டிரஸ் போட்டு லுக் டெஸ்ட் ஆபீஸ்ல ஓகே ஆனபிறகுதான் ஷூட்டிங்கே போனோம்.
சுதா கொங்கராவும் ரொம்ப கிளியராக இருப்பாங்க. நானும் என்னுடைய கருத்துகளைச் சொல்லி இப்படி இருந்தால் நல்லாயிருக்கும்னு சொல்வேன். அவங்களும் கருத்துகளை முன்வைப்பாங்க. ஏற்கனவே ரெண்டு பேரும் சேர்ந்து படங்கள் பண்ணியிருக்கிறதால் ஒரு புரிதல் இருந்தது.
எப்படி ஆடை வடிவமைப்பாளராக ஆனீங்க?
நான் சினிமாவில் யாரிடமும் வேலை செய்யல. சினிமா ஆடை வடிவமைப்பில் அனுபவமும் கிடையாது. என்னை இயக்குநர் பாலா சார்தான் ‘பரதேசி’ படம் மூலம் அறிமுகப்படுத்தினார். நடிகர் சூர்யாவின் தங்கை பிருந்தா மூலமாக எனக்கு பாலா சார் பழக்கமானார். நானும் பிருந்தாவும் ஸ்கூல் ஃப்ரெண்ட்ஸ்.நான் சென்னை நாயுடு ஹால் பொண்ணு என்பதால் டெக்ஸ்டைல்ஸ் வியாபாரம் பத்தி மட்டுமே எனக்குத் தெரியும். பாலா சாரின் பழக்கம் கிடைச்சபிறகு ஒருநாள் அவர் மகளுக்குத் தீபாவளி பண்டிகையை ஒட்டி நானே டிரஸ் ஒண்ணை டிசைன் பண்ணி அனுப்பி வைச்சேன்.
பிறகு, என்னை ‘பரதேசி’ படம் ஆரம்பிக்கும்போது கூப்பிட்டு அனுப்பினார். ‘இது ஒரு பீரியடு மூவி. இதுக்கு காஸ்டியூம் பண்ணணும்’னு எனக்கு நம்பிக்கையாக வாய்ப்பு தந்தார். நிறைய ரிசர்ச் பண்ணி அதுக்கான காஸ்டியூமை சாக்குத் துணியில் ரெடி பண்ணினோம். கலர் எல்லாம் காய்கறிகள் டைனு சொல்லுவாங்க, அதைப் பயன்படுத்தி பண்ணியிருந்தோம். ஆனா, அதுக்கு தேசிய விருது கிடைக்கும்னு நான் கொஞ்சமும் எதிர்பார்க்கல. பாலா சார் ‘உனக்குக் கிடைச்சிருக்கு’னு சொன்னப்ப ரொம்ப சந்தோஷமா இருந்தது.
அங்கிருந்து சினிமாவின் என் ஆடை வடிவமைப்பாளர் பணி தொடங்குச்சு. தொடர்ந்து ஜோதிகா மேடம், ‘36 வயதினிலே’ படத்திற்குக் கூப்பிட்டு வாய்ப்பு கொடுத்தாங்க. அவங்ககூட, ‘நாச்சியார்’, ‘காற்றின் மொழி’, ‘ஜாக்பாட்’, ‘ராட்சசி’னு அடுத்தடுத்து படங்கள் பண்ணினேன். அப்புறம் வினோத் சாருடன், ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘நேர்கொண்ட பார்வை’ல வேலை செய்தேன். பிறகு ‘ஜெய்பீம்’, ‘ரகு தாத்தா’, ‘வா வாத்தியார்’, ‘பராசக்தி’னு இதுவரை சுமார் 30 படங்களுக்கும் மேல் காஸ்டியூம் டிசைனரா வேலை செய்திருக்கேன்.
காஸ்டியூமிற்கு உங்கள் ஜவுளிக்கடையின் அனுபவம் எந்த அளவுக்கு உதவுகிறது?
கடையின் அனுபவம் என்பதைவிட அப்பாவிடம் நான் கத்துக்கிட்ட விஷயங்கள் நிறைய. 1940ல் தாத்தாவிற்கு உடல்நிலையில் பிரச்னை வந்ததால் என் அப்பா ராமசாமி தன்னுடைய பள்ளிப் படிப்பை நிறுத்திட்டு பத்தாம் வகுப்பிலேயே டெய்லரிங் கத்துக்க ஆரம்பிச்சார். தாத்தாவுக்கு ஹார்ட்ல பிரச்னை வந்ததும் கடையை முழுசாக அப்பா கவனிக்கத் தொடங்கினார். அப்பா எப்பவும் எதிர்காலத்தை யோசிச்சு நிறைய பண்ணக் கூடியவர். அப்படியாக ஒரு தையல் கடையை மக்கள் போற்றும் நாயுடு ஹாலாக மாற்றினார்.
அவர் ரொம்ப தைரியமானவர். பையன், பொண்ணுனு வேறுபாடே இல்லாமல் எங்களை வளர்த்தார். அவரின் டைனமிக் விஷன், கஸ்டமருக்கு பெஸ்ட்டாக கொடுக்கணும் என்கிற எண்ணம், நம்பிக்கைனு பல விஷயங்களை அவரிடம் நான் பார்த்திருக்கேன்.
கடையில் என்ன குவாலிட்டியில் பொருட்கள் தயாரிக்கணும், பொருட்களை எங்க வாங்கணும், எந்தத் துணியில் டிசைன் பண்ணினால் துணி அழகா இருக்கும், எப்படி வேலைகளை ஹேண்டில் பண்ணணும்னு பல விஷயங்களைப் பள்ளி நாட்களிலேயே சொல்லிக் கொடுத்திட்டார்.
பத்தாம் வகுப்பு படிக்கும்போதே பள்ளி முடிஞ்சதும் நேராக கடைக்குத்தான் போவேன். அதெல்லாம் எனக்கு இப்ப பல இடங்களில் உதவியாக இருக்குது. முதல் படம் பண்ணும்போதே எனக்கு அது முதல் படம் மாதிரி இல்ல. எளிதாக பண்ணலாம்னுதான் தோணுச்சு. அதுக்கு அப்பா கத்துக்கொடுத்த அனுபவம் முக்கியமானது. இதன்பிறகு நான் கதைக்கேற்ப காஸ்டியூம் பண்ண ஆரம்பிச்சிட்டேன்.
இப்ப கிராமத்துக் கதைனா அதற்கேற்ப காஸ்டியூம் செய்வேன். கோர்ட் சம்பந்தமான படம்னா நேரடியாக கோர்ட்டுக்குப் போய் அப்சர்வ் பண்ணி ஆடைகளை வடிவமைப்பேன். ‘வா வாத்தியார்’ படத்திற்காக கார்த்தி சாருக்கு விதவிதமாக ஆடைகள் வடிவமைச்சேன். அது சிறப்பாக வந்திருக்கு. இப்படி எதையும் கொஞ்சம் ஆய்வு பண்ணி உழைச்சால் சிறப்பாகவே அமையும். இன்றைய தலைமுறையினர் காஸ்டியூம்ல ஆர்வம் காட்டுறாங்களா?
நிறைய காட்டுறாங்க. நியூ ஃபேஷன் டெக்னாலஜியில் புதுசு புதுசா ஆடைகள் வந்திட்டே இருக்கு. ஆனா, இடத்துக்குத் தகுந்த மாதிரி ஆடைகள் அணிவது அவசியம். இப்போ கோயிலுக்குப் போகும்போது கிழிஞ்ச ஜீன்ஸ் அணிவது சரியல்ல. இடம், பொருள், ஏவல்னு சொல்வாங்க இல்லையா... அதன்படி நமக்கு வசதியான ஆடைகளை அந்த இடத்திற்குத் தகுந்தவாறு அணிவது நல்லது. அதுவே ஒருவரை அழகாகக் காட்டும்.
ஆர்.சந்திரசேகர்
|