பெண்களுக்கு மட்டும் செல்போன் தடை...



இது பஞ்சாயத்து அட்ராசிட்டி!

கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை விதித்து சட்டம் கொண்டு வரப்பட்டது. இதனையடுத்து பல்வேறு நாடுகளும் 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை விதிப்பது குறித்து ஆலோசித்து வருகின்றன. இந்நிலையில் இதற்கெல்லாம் ஒருபடி முன்னேறிச் சென்று ஸ்மார்ட்போனையே பயன்படுத்தத் தடை விதித்து அட்ராசிட்டி செய்திருக்கிறது ராஜஸ்தானைச் சேர்ந்த கிராமப் பஞ்சாயத்து ஒன்று. 

அதுவும் இந்தத் தடை வீட்டிலுள்ள பெண்களுக்கும், புகுந்த வீடு வந்திருக்கும் மருமகளுக்கும் மட்டுமே என்பதுதான் ஹைலைட்! இந்த விஷயம் சமூக ஊடகங்களில் பரபரக்க, தற்போது அந்த தடையைத் திரும்பப் பெற்றுள்ளனர் பஞ்சாயத்துக்காரர்கள். ராஜஸ்தானின் ஜலோர் மாவட்டத்தில் இருக்கிறது காசிபூர் கிராமம். இங்கே சவுத்ரி சமூகத்தினரின் கூட்டம் அந்தச் சமூகப் பெரியவர்களால் நடத்தப்பட்டது. இதில் 14 பட்டிகளைச் சேர்ந்த சவுத்ரி சமூகத்தினரும் கிராம உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

மொத்தமாக 15 கிராமங்களைச் சேர்ந்தவர்கள் இதில் பங்கேற்றனர். தலைவர் சுஜ்னராம் சவுத்ரி தலைமையில் கூட்டம் நடந்தது. இதில்தான் பெண்களும், மருமகள்களும் ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டது. இதற்குப் பதிலாக அவர்கள் மற்றவர்களுடன் பேசுவதற்கு பழைய கீபேட் செல்போன்களைப் பயன்படுத்தலாம் என முடிவெடுக்கப்பட்டது. 

அத்துடன் பள்ளி செல்லும் பெண்கள் தங்கள் படிப்புக்கு ஸ்மார்ட்போன்கள் தேவைப்பட்டால், அவற்றை வீட்டில் மட்டுமே பயன்படுத்தலாம் என்றும், திருமணங்களிலோ, சமூக நிகழ்வுகளிலோ அல்லது பக்கத்து வீட்டுக்காரர்களின் வீட்டிற்கோ ஸ்மார்ட்போன்களை எடுத்துச் செல்லக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டது. இது ஜனவரி 26ம் தேதியிலிருந்து அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டது. 

பின்னர் பேசிய சுஜ்னராம் சவுத்ரி, ‘இளைய தலைமுறையினர் ஸ்மார்ட்போன்களை தவறாகப் பயன்படுத்துவதிலிருந்து பாதுகாப்பதன் அவசியம் குறித்து சமூகக் கூட்டத்தில் ஒருமித்த கருத்து எட்டப்பட்டதாகக் கூறினார். இந்நிலையில் இந்த விஷயம் சமூக ஊடகங்களில் வைரலாக, தற்போது ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதற்கான தடை திரும்பப் பெறப்பட்டுள்ளது.=

பி.கே