பொதுமக்களின் பார்வைக்கு... விக்டோரியா பப்ளிக் ஹால்!
சென்னையின் வரலாற்றுச்` சிறப்புமிக்க கட்டடங்களில் ஒன்று விக்டோரியா பப்ளிக் ஹால். பெருநகர சென்னை மாநகராட்சியின் ரிப்பன் பில்டிங்கிற்கும், சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கும் இடையிலுள்ள இந்த அரங்கம் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டு பொதுமக்களின் பார்வைக்காக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது. கடந்த 1883ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு 1887ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட கட்டடம் இது. 1837ம் ஆண்டு ஒருங்கிணைந்த பிரிட்டிஷ் மகாராணியாக விக்டோரியா பதவியேற்று 50வது ஆண்டு பொன்விழாவை நினைவுகூரும் வகையில் இந்தக் கட்டடத்திற்கு அவர் பெயர் சூட்டப்பட்டது.  தொடர்ந்து நாடகங்கள், இசை மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகள், விருந்துகள், சொற்பொழிவு நிகழ்வுகள், கண்காட்சிகள் எனப் பரபரப்பாக இருந்தது இந்த அரங்கம். பின்னர் 20ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் காலநிலை மாற்றங்கள், நீண்டகால பராமரிப்பு குறைபாடு ஆகியவற்றால் சிதைவைச் சந்தித்தது. குறிப்பாக சுவர்களில் பிளவு, கூரைகளில் நீர்க்கசிவு, மரக் கட்டமைப்புகளில் குறைபாடு எனப் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டன.
 இந்நிலையில் 1967ம் ஆண்டு புனரைமப்பு செய்யப்பட்டு தமிழ்நாடு முதல்வர் அண்ணாவால் திறந்து வைக்கப்பட்டது. தற்போது கட்டடத்தின் வரலாற்றினைக் காக்கும் விதமாகவும், அதை மீண்டும் பொதுமக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டுவரவும் தமிழக அரசும், பெருநகர சென்னை மாநகராட்சியும் இணைந்து ஒரு சிறப்பான மறுசீரமைப்பு முயற்சியைத் தொடங்கின. அப்படியாக கடந்த 2023ம் ஆண்டு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மறுசீரமைப்புப் பணிகளைத் தொடங்கி வைத்தார். பிறகு, ரூ.32.62 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு இப்போது மீண்டும் திறப்புவிழாவைக் கண்டுள்ளது.
இந்நிலையில் விக்டோரியா பொது அரங்கத்திற்கு ஒரு விசிட் அடித்தோம். பழைய சிவப்பு வண்ண அசல் கட்டடம் உள்ளபடியே மறுசீரமைப்பு செய்யப்பட்டு பொலிவுடன் மினு மினுத்தது. இரண்டு தளங்கள் கொண்ட இந்த அரங்கத்தின் கீழ்த்தளம் முழுவதும் அரங்கத்தைப் பற்றிப் பேசும் கண்காட்சியாக மாற்றப்பட்டுள்ளது. 1890களில் இந்த கீழ்த்தளமும், மேல்தளமும் பெரிய அரங்கங்களாக இருந்தவை.
அப்போது கீழ்த்தளத்தில் 600 பேரும், மேல்தளத்தில் 600 பேரும், மேல்தளத்தில் உள்ள கேலரியில் 200 பேரும் அமர்ந்து நிகழ்வுகளை ரசிக்க முடியும். இதற்கு தனித்தனியாகக் கட்டணங்களும் வசூலிக்கப்பட்டன. அதாவது மேல்தளத்தில் புரொஃபஷனல் நாடகக் குழுவிற்கு ஒரு நாள் இரவுக்கு 50 ரூபாய் கட்டணமும், அமெச்சூர் நாடகக் குழுவிற்கு அதில் பாதியும் வசூலித்துள்ளனர். தனியார் என்டர்டெயின்மென்ட் நிகழ்வுகளுக்கு 80 ரூபாய் போடப்பட்டுள்ளது. இதுவே தொண்டு நிறுவன அறக்கட்டளை நிகழ்வுகளுக்கு 20 ரூபாயே வசூலித்துள்ளனர்.
சொற்பொழிவுகள் உள்ளிட்ட மக்கள் இலவசமாக காணவரும் கூட்டங்களுக்கு 15 ரூபாய் என விதித்துள்ளனர். இது சம்பந்தமான பழைய குறிப்புகளும் புதுப்பிக்கப்பட்டுள்ள அரங்கத்தில் காட்சியாக வைக்கப்பட்டுள்ளன. அத்துடன் கீழ்த்தளத்தின் ஒருபக்க அறையில் கட்டடத்தின் வரலாற்றை வைத்துள்ளனர்.
இதில் விக்டோரியா பொது அரங்கம் கட்டுவதற்கு நிதியளித்த விஜயநகர மன்னர் சர் மூன்றாம் ஸ்ரீ பூசபதி ஆனந்த கஜபதி ராஜு முதல் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்ற முதல் இந்தியரான சர்.டி.முத்துசாமி ஐயர் வரையிலான புரவலர்களின் புகைப்படங்களும், குறிப்புகளும் இடம்பெற்றுள்ளன.
அப்போது இந்தக் கட்டடம் ஒரு லட்சத்து 79 ஆயிரம் ரூபாயில் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு இந்தப் புரவலர்கள் தவிர்த்து பொதுமக்களும் தங்கள் பங்களிப்பைச் செய்துள்ளனர். அதுமட்டுமின்றி இந்த அரங்கம் அமைந்த இடம் அப்போது பீப்பிள்ஸ் பார்க் எனப்படும் மக்கள் பூங்காவாக இருந்தது.
அதில் ஒரு இடத்தை தேர்வு செய்து இந்த அரங்கம் கட்டப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, இந்த மக்கள் பூங்காதான் 1878ம் ஆண்டு முதல் பொதுமக்களின் கொண்டாட்டங்களுக்கான தளமாக இருந்து வந்தது. அதாவது இங்கே இசை நிகழ்ச்சிகள், வாண வேடிக்கைகள், விளையாட்டுப் போட்டிகள் ஆகியவை குடிமக்களை ஒன்றிணைத்து வருடாந்திர நிகழ்வுகளாக நடத்தப்பட்டுள்ளன.
1886ம் ஆண்டு விக்டோரியா மகாராணியின் பொன்விழாவையொட்டி நடைபெற்ற கண்காட்சியே அடுத்த ஆண்டு விக்டோரியா பொது அரங்கத்தின் திறப்புவிழாவிற்கு வித்திட்டது. இதுகுறித்தான படமும் குறிப்பும் உள்ளது.
கூடவே, இந்தக் கட்டடத்தை இந்தோ சாராசெனிக் முறையில் வடிவமைத்த ராபர்ட் சிஸ்ஹோல்ம் மற்றும் அப்போது முன்னணி கான்டிராக்டராக இருந்த, இந்தக் கட்டடத்தைக் கட்டிய நம்பெருமாள் செட்டி ஆகியோரின் படங்களையும், குறிப்புகளையும் இங்கே காணமுடிகிறது. இதன்பிறகு மெயின் அரங்கத்தில் அன்றைய காலத்தில் இங்கு நடந்த இசைக் கச்சேரிகள், நாடகங்கள், சொற்பொழிவுகள் உள்ளிட்டவற்றைப் பற்றிய காட்சிகள் வைக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக மூன்று விஷயங்கள் நம் கவனத்தை ஈர்ப்பவை. ஒன்று- 1896ம் ஆண்டு நடந்த சென்னையின் முதல் சினிமாட்டோகிராஃப் காட்சி பற்றிய புகைப்படம்.
இந்த நிகழ்வுதான் முதன்முதலில் நகரும் படங்களை அறிமுகம் செய்தது. உள்ளூர் பொழுதுபோக்கை மாற்றியமைத்து சினிமாயுகத்திற்கு வழிவகுத்துள்ளது. அதாவது இன்றைய சினிமாவிற்கான விதையைத் தூவிய இடம் விக்டோரியா பொது அரங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது- 1891ல் நவீன தமிழ் நாடகத் தந்தை என அழைக்கப்படும் பம்மல் சம்பந்த முதலியார் சுகுண விலாச சபையை ஆரம்பித்து இந்த அரங்கத்தில்தான் பல்வேறு நாடகங்கள், விவாதங்கள், சமூக நிகழ்வுகளை நடத்தியுள்ளார். அதைப் பற்றி புகைப்படங்களும், குறிப்புகளும் நம்மை ஆச்சரியப்படுத்துகின்றன.
மூன்றாவது-சுவாமி விவேகானந்தர் 1897ல் மெட்ராஸ் வந்தபோது இந்த விக்டோரியா அரங்கில் உரையாற்றியுள்ளார். அதுமட்டுமில்லாமல் மகாத்மா காந்தி, மகாகவி பாரதியார் ஆகியோரும் இந்த அரங்கில் உரையாற்றி உள்ளனர். தவிர, நீதிக்கட்சியினரின் அரசியல் நிகழ்வுகளும் நடந்துள்ளன. அதனால் நீதிக்கட்சியின் தோற்றம் மற்றும் அதன் தலைவர்கள் குறித்த போர்டும் இதில் வைக்கப்பட்டுள்ளன.
இதன்பிறகு விக்டோரியா அரங்கத்தில் நடந்த பில்லியர்ட்ஸ், கேரம் போன்ற விளையாட்டு நிகழ்வுகள் பற்றிய புகைப்படங்களுடன் கூடிய குறிப்புகளும், சான்றாக பில்லியர்ட்ஸ் போர்டும் வைக்கப்பட்டுள்ளது ரசிக்க வைக்கிறது.
கூடவே அன்றைய சென்னைக்குப் பெருமை சேர்த்த பல்வேறு விளையாட்டு வீரர்களின் புகைப்படங்களும் இங்கு மாட்டி வைக்கப்பட்டுள்ளன.
இதன்பிறகு அரங்கின் நடுவில் விக்டோரியா பொது அரங்கம் எப்படி புனரமைப்பு செய்யப்பட்டது, அதன் தொழில்நுட்பம் என்ன என்பது உள்ளிட்ட வரலாற்றை புகைப்படங்களாக காட்சிப்படுத்தி வைத்துள்ளனர். இதுவும் பார்வையாளர்களை ரொம்பவே ஈர்ப்பவை.
இதனையடுத்து கீழ்த்தள அரங்கின் நிறைவில் ஒலி, ஒளி காட்சி ஒன்று 20 பேர்கள் அமர்ந்து பார்க்கும் வண்ணம் அமைத்துள்ளனர். இந்த இடத்தைச் சுற்றிலும் ஜொலிக்கும் அன்றைய சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள் கண்கொள்ளாக்காட்சி எனலாம். இதன்பிறகு மேல்தளம். இதில் 250 பேர் அமரும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்தும் அரங்கமாக வைக்கப்பட்டுள்ளது. அங்குள்ள பழமையான சேர்களில் உட்காரும்போது நம்மை அந்தக் காலத்திற்கு அழைத்துச் செல்கிறது விக்டோரியா அரங்கம்.
பின்னர் அரங்கிலிருந்து வெளியேறும் வழியின் இடதுபுறத்தில் சென்னையின் பழமையை பறைசாற்றும் விஷயங்களைக் காட்சிப்படுத்தி உள்ளனர். இதில் டிராம், பக்கிங்ஹாம் கால்வாயில் நடந்த படகு போக்குவரத்தை விளக்கும்விதமாக படகு ஒன்று, கை ரிக்ஷா, ஸ்கூட்டர் என அன்றைய சென்னையின் போக்குவரத்து வரலாறு இருக்கிறது.
இத்துடன் பல்லாவரம் முதல் கீழடி வரை என தமிழகத்தின் பெருமையை உணர்த்தும் அகழாய்வு கண்காட்சி வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே சிறிய திறந்தவௌி அரங்கம் ஒன்றும் ஏற்படுத்தியுள்ளனர்.அன்றைய சென்னையின் பாரம்பரியம், கலாச்சாரம், பண்பாடு, விளையாட்டு, சினிமா, நாடகம், இசை உள்ளிட்ட பொழுதுபோக்கு நிகழ்வுகள் எனப் பல விஷயங்களை இந்தக் கட்டடத்தின் மூலம் நாம் அறிந்துகொள்ளலாம்.
என்ன செய்ய வேண்டும்?
விக்டோரியா பொது அரங்கத்தைப் பார்வையிட வேண்டுமென்றால் பொதுமக்கள் பெருநகர சென்னை மாநகராட்சியின் இணையதளத்திற்குச் சென்று முன்பதிவு செய்ய வேண்டும். பொதுமக்களுக்கு 25 ரூபாயும், மாணவர்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு 10 ரூபாயும், வெளிநாட்டினருக்கு 50 ரூபாயும் கட்டணம் வைக்கப்பட்டுள்ளது. இதில் பத்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது.
இதேபோல பள்ளி மூலம் முன்பதிவு செய்யும் அரசு மற்றும் மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கும் கட்டணம் கிடையாது. இந்த அரங்கம் காலை 8.30 மணியிலிருந்து மாலை 6.30 மணி வரை திறந்திருக்கும். செவ்வாய்க்கிழமை தோறும் பராமரிப்பிற்காக விடுமுறை விடப்படுகிறது.
செய்தி: பேராச்சி கண்ணன்
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்
|