போஸ்ட் வுமன்!
பனி, மழையிலும் தினமும் 15 கிமீ நடந்தே தபால்களை பட்டுவாடா செய்யும்
உலகிலேயே அதிகமான அஞ்சலகங்கள் உள்ள நாடு, இந்தியாதான். நாடு முழுவதும் 1,64,999 அஞ்சலகங்கள் உள்ளன. இதில் 1,49,385 அஞ்சலகங்கள் கிராமப்புறங்களிலும், 15,614 அஞ்சலகங்கள் நகர்ப்புறங்களிலும் அமைந்துள்ளன. இ-மெயில், வாட்ஸ்அப், மெஸஞ்சர் காலத்திலும் கூட கடிதப் போக்குவரத்து நிலைத்திருக்க இந்த அஞ்சலகங்கள்தான் காரணம். இவ்வளவு அஞ்சலகங்கள் இருந்தாலும் ஹிர்போரா கிராமத்திலிருக்கும் அஞ்சலகத்துக்குத் தனி மவுசு. காரணம், அங்கே போஸ்ட்வுமனாக இருக்கும் உல்ஃபடா பனோ என்றால் அது மிகையாகாது. யார் இந்த உல்ஃபடா பனோ?
காஷ்மீரின் ஷோபியன் மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஒரு கிராமம், ஹிர்போரா. ஸ்ரீநகரிலிருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது இந்தக் கிராமம். இங்கே வசிப்பவர்கள் ஒவ்வொரு குளிர்காலத்தின்போதும் மிகப்பெரிய வாழ்க்கைப் போராட்டத்தைச் சந்திக்கின்றனர். குறிப்பாக நவம்பர் முதல் மார்ச் மாதம் வரையில் இக்கிராமத்தின் வெப்பநிலை -15 டிகிரி செல்சியஸுக்குச் சென்றுவிடும். நிலத்தின் மீது ஐந்து முதல் ஆறு அடி உயரத்துக்கு பனிக்கட்டிகள் சூழ்ந்திருக்கும். வீட்டிலிருந்து வெளியே செல்வதற்கான அனைத்துப் பாதைகளும் பனிக்கட்டிகளால் தடை செய்யப்பட்டிருக்கும். அதனால் பெரும்பாலான மக்கள் வீட்டைவிட்டுக் கூட வெளியில் வர மாட்டார்கள்.
தவிர, ஹிர்போரா மக்களின் வாழ்வாதாரம் விவசாயத்தையும், தினசரி கூலி வேலைகளையும் நம்பித்தான் இருக்கிறது. கடுமையான குளிர்காலம் ஹிர்போரா மக்களின் வாழ்வாதாரத்தையும் வெகுவாகப் பாதிக்கிறது. மட்டுமல்ல, தண்ணீர் குழாய்களில் பனிக்கட்டிகள் சேர்ந்து, தண்ணீர் பாய்வதை தடுத்துவிடுவதால், தண்ணீர்ப் பற்றாக்குறையும் ஏற்படுகிறது.
மக்கள் பெரும்பாலும் பனிக்கட்டிகளை எடுத்து வந்து, அதை உருக்கித்தான் தண்ணீராகப் பயன்படுத்துகின்றனர். நவம்பர் முதல் மார்ச் வரையிலான நான்கு மாதங்களும் இதே நிலைதான் ஹிர்போராவில் தொடர்கிறது.
இப்படியான இக்கட்டான சூழலிலும் கூட தனது கடமையைத் தவறாமல் செய்து வருகிறார், உல்ஃபடா பனோ. இத்தனைக்கும் அவரது வயது 55.ஹிர்போராவின் கடும் குளிரிலும், பனிக்கட்டிகள் சூழ்ந்த பாதைகளுக்கு நடுவில் நடந்து சென்றே கடிதங்களையும், பார்சல்களையும் கொண்டு சேர்க்கிறார் உல்ஃபடா. இவரது சேவைக்கு ஹிர்போரா மக்கள் மத்தியில் தனி மரியாதை. குளிர்காலங்களில் எங்களுக்கும், வெளியுலகுக்கும் இடையிலான தொடர்புப் பாலமாக இருக்கிறார் உல்ஃபடா என்கின்றனர் ஹிர்போரா மக்கள்.
கடும் குளிரைத் தாங்குவதற்கான பிரத்யேகமான உல்லன் ஆடையை அணிந்துகொண்டு, பனிக்கட்டிகளின் மீது ஏறிச் சென்று, கடிதங்களைக் கொண்டு சேர்க்கும் உல்ஃபடாவின் பயணம் ஒரு திரைப்படமாக வேண்டிய கதை. ‘‘கடந்த 30 வருடங்களாக போஸ்ட்வுமன் வேலையைச் செய்து வருகிறேன். கடுமையான குளிர்காலத்தில் கூட நான் என் வேலையை நிறுத்துவதில்லை.
எல்லா இடங்களிலும் பனிக்கட்டிகள் நிரம்பியிருப்பதால் வீடுகளைக் கண்டுபிடிப்பதே சிரமமாக இருக்கும். சில நேரங்களில் மழை பெய்யும். அப்போது இன்னமும் சிரமமாகிவிடும். இருந்தாலும் கொண்டு போன கடிதங்களையும், பார்சல்களையும் டெலிவரி செய்யாமல் வீடு திரும்பியதில்லை...’’ என்கிற உல்ஃபடா, நடந்து சென்றே கடிதங்களையும், பார்சல்களையும் டெலிவரி செய்கிறார்.
தினமும் ஹிர்போராவில் மட்டுமே 20 முதல் 25 கடிதங்கள் மற்றும் பார்சல்களை டெலிவரி செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சில நாட்கள் உல்ஃபடாவுக்கு உதவியாக அவரது மகனும் உடன் வருகிறார். இத்தனைக்கும் ஹிர்போரா அஞ்சலகத்தில் போஸ்ட்வுமனாக வேலை செய்யும் உல்ஃபடாவின் மாத வருமானம், 22 ஆயிரம் ரூபாய் மட்டுமே. இவருடன் வேலை செய்யும் ஆண்கள் மாவட்ட அஞ்சலகத்துக்குச் சென்று கடிதங்களைச் சேகரித்து வருவார்கள். அதை உள்ளூருக்குள் உல்ஃபடாதான் டெலிவரி செய்ய வேண்டும்.
இப்படி இந்தியாவில் மிக சிரமப்பட்டு கடிதங்களை டெலிவரி செய்யும்போஸ்ட்வுமன் உல்ஃபடாவாகத்தான் இருக்க முடியும். உல்ஃபடாவுக்கு வாகனம் ஓட்டத் தெரியாது என்பதால் நடந்து சென்றே கடிதங்களை டெலிவரி செய்கிறார். தினமும் குறைந்தபட்சம் 10 முதல் 15 கிலோ மீட்டர் தூரம் நடக்கிறார். ‘‘என் மனைவியின் வேலை மிகவும் கடினமானது. குறிப்பாக குளிர்காலத்தில் பனிக்கட்டியின் மீது நான்கைந்து மீட்டர் தூரம் நடப்பதற்கே மக்கள் கஷ்டப்படுவார்கள். ஆனால், உல்ஃபடா சில கிலோமீட்டர்கள் தூரம் நடக்கிறார்.
சில நாட்களில் கடுமையான பனிப்பொழிவுடன் மழையும் பெய்யும். அப்போது வேலைக்குச் செல்ல வேண்டாம் என்று சொல்வேன். ஆனால், மழைக்காலங்களில் கூட விடுமுறை எடுக்காமல் கடிதங்களை டெலிவரி செய்திருக்கிறார். அவரை நினைத்தால் எனக்குப் பெருமையாக இருக்கிறது...’’ என்கிறார் உல்ஃபடாவின் கணவரான முகமது ஷஃபி ஷா. இவரும் போஸ்ட்மேனாக வேலை செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மட்டுமல்ல; குளிர்காலத்தில் ஹிர்போரா கிராமத்தில் வனவிலங்குகளின் நடமாட்டமும் அதிகம். குளிர்காலத்தில் மலைப்பகுதிகளில் வனவிலங்குகளுக்கான உணவு கிடைப்பது சிரமம். அதனால் உணவைத் தேடி சிறுத்தைகளும், கரடிகளும் கிராமத்துக்குள் வந்துவிடும். வன விலங்குகளின் அபாயத்தையும் தாண்டிதான் கடிதங்களைக் கொண்டு சேர்க்கிறார் உல்ஃபடா.
‘‘உல்ஃபடாவின் சேவை விலை மதிப்பற்றது. இந்தக் குளிர்காலத்தில் எனக்கு வேண்டிய புத்தகங்களை எல்லாம் அவர் மூலமாகத்தான் பெற்றேன்...’’ என்கிறார் ஐஏஎஸ் தேர்வுக்காக தயாராகி வரும் ஷாகித் அகமது. ‘‘இவ்வளவு கடினங்களுக்கு நடுவிலும் என்னுடைய பணி மாணவர்களின் படிப்புக்கு உதவியாக இருக்கிறது என்பதில் என்னுடைய கடினங்கள் காணாமல் போகிறது. இதுவே என்னைத் தொடர்ந்து இயங்க வைக்கிறது...’’ என்கிற உல்ஃபடாவின் பணி இன்றும் தொடர்கிறது.
த.சக்திவேல்
|