தாம்பரம் அல்ல... வளையல் புரம்..!



குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைத்துப் பெண்களும் விரும்பி அணியும் அணிகலன்களில் ஒன்று வளையல். வீட்டில் பெண் குழந்தை பிறந்துவிட்டால் முதலில் அவர்களின் பிஞ்சுக் கரங்களில் அழகான வளையல் அணிந்து அழகு பார்க்க ஒவ்வொரு பெற்றோரும் விருப்பப்படுவார்கள். 
ஆம். வளையல்களை விரும்பாத வளைக்கரங்களே கிடையாது என்றுதான் சொல்ல வேண்டும். தங்கம், வெள்ளி மட்டுமில்லாமல் கண்ணாடி, மெட்டல், ஐம்பொன், டிசைனர்... என வளையல்களில் பல ரகங்கள் உள்ளன. அதில் எந்தவித சுப நிகழ்வுகளுக்கும் அனைத்துப் பெண்களும் தேர்வு செய்வது கண்ணாடி வளையல்களைத்தான். 

திருமணம் முதல் வளைகாப்பு மட்டுமில்லாமல், வீட்டில் கொண்டாடப்படும் வரலட்சுமி பூஜை, விளக்கு பூஜை போன்ற சுபநிகழ்வுகளுக்கும் பெண்களுக்கு கண்ணாடி வளையல்களைக் கொடுப்பது இன்று வரை வழக்கமாக உள்ளது. மேலும் ஒவ்வொரு ஆடி மாதமும் அம்மனை முழுக்க முழுக்க கண்ணாடி வளையல் கொண்டு அலங்கரிப்பது வழக்கம். தங்க வளையல்கள் இருந்தாலும் அதற்கிடையே உடைக்கு ஏற்ப கண்ணாடி வளையல்களை அணியத்தான் பெண்கள் விரும்புகிறார்கள். 
அப்படி அனைவரும் விரும்பும் கண்ணாடி வளையல்களை இன்றைய மாடர்ன் பெண்கள் விரும்பும் வகையில் பல டிசைன்களில் விற்பனை செய்து வருகிறார் சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த ராஜராஜேஸ்வரி. 

இவரின் ‘ஸ்ரீசம்பிரதாய ஸ்டோர்’ கடையில் ஒரு தளம் முழுக்க முழுக்க பல வண்ணங்கள் மற்றும் டிசைன்களில் கண்ணாடி வளையல்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. ‘வளையோசை அம்மாச்சி’ என்று செல்லமாக அழைக்கப்படும் ராஜராஜேஸ்வரி தன் பயணம் குறித்து உற்சாகத்துடன் பேசத் தொடங்கினார்.

‘‘இந்த வளையல்கள்தான் என் குலதெய்வம். இந்தத் தொழிலை நான் மட்டுமில்லை, என் கணவர், இரண்டு மகள்கள் மற்றும் மகன்கள் என குடும்பமாகச் செய்து வருகிறோம். எங்க ஆறு பேரின் கடின உழைப்புதான் எங்களின் வெற்றியின் ரகசியம். நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் சென்னை தாம்பரத்தில்தான். 

அப்பா பெயின்ட் அடிக்கும் தொழில் செய்து வந்தார். எங்க அம்மா இல்லத்தரசி. என்னையும் சேர்த்து என் கூடப் பிறந்தவங்க ஆறு பேர். என் அப்பா பிழைப்புக்காக ஊரு விட்டு ஊரு வந்தவர். அப்படி வந்த போது என் அம்மாவின் அம்மாதான் அவருக்கு அடைக்கலம் கொடுத்தாங்க. பாட்டி வீட்டில் தங்கித்தான் அப்பா வேலை பார்த்து இருக்கார். அதனால் என் பாட்டி என் அம்மாவை அவருக்கு கல்யாணம் செய்து வச்சாங்க. 

எனக்கு ஓர் அண்ணன். அவரும் அப்பாவைப் போல் பெயின்டிங் வேலை பார்க்கிறார். அக்கா இல்லத்தரசி. மூணாவதுதான் நான். எனக்குப் பிறகு மூன்று தங்கைகள். ஒருவர் நர்ஸ் வேலையில் இருக்கார். கடைசி இரண்டு தங்கைகளும் இல்லத்தரசிகள். 

எங்க குடும்பம் ரொம்ப சாதாரணமான குடும்பம்தான். அப்பாவின் சம்பாத்தியத்தில்தான் எங்க எல்லாரையும் அம்மா வளர்த்தாங்க. திருமண வயசு வந்ததும் முதலில் என் அண்ணன் மற்றும் அக்காவிற்கு திருமணம் முடிச்சாங்க. அடுத்து எனக்கு வரன் பார்த்தாங்க. 

என் கணவர் அப்போது எங்க வீட்டு பக்கத்தில் சோடா கம்பெனி ஒன்றை நடத்தி வந்தார். அப்ப இவருக்குத் தெரிந்தவர் ஒருவர் இவரிடம் என்னை திருமணம் செய்ய விருப்பம் என்றும், அதுகுறித்து என் அம்மாவிடம் இவரைப் பேசச்சொல்லி இருக்கார். 

இவரும் அதுகுறித்து என் சித்தியிடம் கூறினார். உடனே என் சித்தி, ‘நீ உனக்கு தெரிந்தவர்ன்னு யாருக்கோ பெண் கேட்கிற. அவர் யார் என்று எங்களுக்குத் தெரியாது. அவருக்கு பதில் நல்லா தெரிந்த உனக்கே நான் என் பொண்ணை கல்யாணம் செய்து கொடுப்பேனே’ என்றிருக்கிறார். 

சித்தி சொன்ன அந்த வார்த்தைதான் இவரை சிந்திக்க வச்சிருக்கு. இவரும் அம்மாவிடம் என்னை மணக்க விருப்பம்ன்னு சொல்ல அப்படித்தான் எங்களுக்கு கல்யாணமாச்சு. 
கல்யாணமான போது எனக்கு 20 வயசு. கல்யாணமான நாலு வருஷத்தில் அடுத்து அடுத்து நாலு பசங்க பிறந்தாங்க. இவருக்கு இந்த சோடா கடைதான். அதிலும் பெரிய அளவில் வருமானம் இல்லை. பசங்கள படிக்க வைக்கணும். அவங்களுக்கு சாப்பாடு கொடுக்கணும். 

ஒரு வேளை சத்துணவு சாப்பாடு கிடைக்கும்ன்னு, அரசு பள்ளியில் படிக்க வச்சேன். சில சமயம் இரவு நேரம் சாப்பிட சாப்பாடு இருக்காது. பட்டினியா படுக்க வச்சிருக்கேன் பசங்கள. ரொம்பவே கஷ்டப்பட்டோம். என் அம்மா இங்க மார்க்கெட்டில் கண்ணாடி வளையல் வியாபாரம் செய்திட்டு இருந்தாங்க. நான் அம்மாவிடம் கேட்டு நானும் மார்க்கெட்டில் சின்னதா கடை போடுறேன்னு சொன்னேன். அதில் மஞ்சள், குங்குமம், பூ, எலுமிச்சம் பழம் எல்லாம் விற்பனை செய்தேன். 

மார்க்கெட் பகுதி என்பதால் எல்லா ஊரில் இருந்தும் வருவாங்க. அதனால் காலை ஐந்து மணிக்கு எழுந்து பூக்கட்டி கடைக்கு போயிடுவேன். அதில் வந்த வருமானத்தைக் கொண்டு சிறிய அளவில் சீட்டு போட்டேன். 

ஓரளவு குடும்பத்தை சமாளிக்க முடிந்தது. அந்த சமயத்தில்தான் என் தங்கச்சிக்கு கல்யாணம் பேசி முடிச்சாங்க. ஆனா, கல்யாணம் செய்ய அம்மாவிடம் போதுமான பணம் இல்லை. அவங்க வளையல் கடைய வேற யாருக்காவது வித்திடலாம்ன்னு நினைச்சாங்க. 

அப்பத்தான் எனக்கு யோசனை தோணுச்சு. நம்ம கடையை வேற யாரோ ஒருத்தருக்கு கொடுப்பதற்கு பதில் நானே வாங்க முடிவு செய்தேன். வளையல் விற்பது எங்க குடும்பத் தொழில். பாட்டியைத் தொடர்ந்து அம்மா செய்து வந்தாங்க. 

இப்ப அதை நான் செய்ய விரும்பினேன். சீட்டு போட்டிருந்த பணத்தை அம்மாவிடம் கொடுத்து அந்தக் கடையை நானே வாங்கிக் கொண்டேன். மஞ்சள், குங்குமம், பூவுடன் சேர்த்து நாலு தட்டில் கண்ணாடி வளையல்களும் வைத்து என் வியாபாரத்தைத் துவங்கினேன்...’’ என்றவர் அதன்பிறகு கணவருடன் சேர்ந்து கடுமையாக உழைத்துள்ளார்.

‘‘கடை நம்முடையது என்று ஆனதும், நானும் என் கணவரும் எங்களின் முழு உழைப்பையும் போட ஆரம்பித்தோம். அப்ப எனக்கு 25 வயசு என்பதால், மார்க்கெட்டில் தனி ஆளாக நான் கடையைப் பார்த்துக்கொள்ள சிரமமாக இருக்கும் என்பதால் என் கணவர் சோடா கம்பெனியை மூடிவிட்டு முழுக்க முழுக்க எனக்காக இந்த தொழிலில் இறங்கினார். அன்று முதல் இன்று வரை அவர்தான் எனக்கு பக்கபலமா இருந்து வருகிறார். 

காலையில் எழுந்து நான் வீட்டு வேலை எல்லாம் முடித்து கடைக்கு போயிடுவேன். இவர் பசங்கள கிளப்பி பள்ளிக்கூடம் அனுப்பிவிட்டு கடைக்கு எனக்கு உதவிக்காக வந்திடுவார். பிறகு பாரிசுக்குச் சென்று கடைக்கு வேண்டிய வளையல்களை வாங்கி வருவார்.பசங்களும் ஸ்கூல் முடிஞ்சதும் கடைக்கு வந்திடுவாங்க. 

அங்கு அவர்களால் முடிந்த சின்னச் சின்ன வேலைகளைச் செய்வாங்க. என்னதான் வளையல் கடையில் வருமானம் வந்தாலும், அது வீட்டுச் செலவுக்கே சரியா இருக்கும். பசங்க படிப்பிற்கு ரொம்பவே கஷ்டப்பட்டேன். 

இவங்க கல்லூரிக்கான புத்தகம் வாங்க காசு இருக்காது. மூர்மார்க்கெட்டில் செகண்ட் சேல்சில் புத்தகங்களை பிளாட்ஃபார்மில் போட்டு விற்பனை செய்வாங்க. அதில்தான் இவங்க பாடப் புத்தகங்களை வாங்கிக் கொடுப்பேன். 

என் இரண்டு பெண்களுமே முதுகலைப் பட்டதாரிகள். முதல் பெண் ஊடகத்துறையில் வேலை பார்த்தாங்க. இப்ப கடைக்கான கணக்கு எல்லாம் அவங்கதான் பார்க்கிறாங்க. இரண்டாவது பெண் கல்லூரி பேராசிரியரா இருக்காங்க. 

ஐஏஎஸ் கோச்சிங்கும் போறாங்க. மகன்கள் இருவரும் படிப்பு முடிச்சிட்டு கடையை கவனிச்சுக்கிறாங்க. இப்படித்தான் நாங்க குடும்பமா இந்தக் கடையில் உழைச்சோம்; இன்றும் உழைச்சிட்டு இருக்கோம். எங்க ஆறு பேரின் உழைப்புதான் கொஞ்சம் கொஞ்சமாக தொழில் வளரவும் காரணமா அமைந்தது. 

என் குடும்பம் இல்லைன்னா இந்த கடை இவ்வளவு பெரிய அளவில் வளர்ந்திருக்காது...’’ என்றவர் கண்ணாடி வளையல்களுக்காக தனிப்பட்ட கடை ஆரம்பித்தது பற்றிக் கூறினார்.
‘‘நான் முதலில் கடை போட்டபோது கையில் எந்த முதலும் இல்லாமல்தான் ஆரம்பிச்சேன். அதன் பிறகு சிறுகச் சிறுக சேமிக்கத் துவங்கினோம். அந்த சேமிப்பில் இன்னொரு கடை ஒன்றை ஆரம்பிக்க நினைச்சோம். அப்ப இந்தக் கடை வாடகைக்கு இருப்பதாகக் கேள்விப்பட்டோம். 

கையில் இருந்த ஒன்பதாயிரம் சேமிப்போடு இந்த கடையின் ஓனரை நானும் என் கணவரும் சேர்ந்து பார்க்கப் போனோம். ஏற்கனவே மார்க்கெட்டில் கடை இருப்பதாகவும், அதை விரிவுபடுத்த இருப்பதாகவும் அவரிடம் சொன்னேன். 

அவர் என்னைப் பற்றி விசாரித்த போது என் அப்பா பெயின்டர் லட்சுமணன்னு சொன்னேன். அதன் பிறகு அவர் எந்த மறுப்பும் இல்லாமல் ‘இந்தக்கடை உனக்குதான்’னு சொல்லிட்டார். காரணம், என் அப்பாவின் நேர்மைதான் எனக்கு ஒரு வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கு. அதே நேர்மையுடன் நானும் தொழில் செய்து வருகிறேன். 

முதலில் தரைத்தளக் கடையைத்தான் வாடகைக்கு கொடுத்தார். கடையில் நாங்க குடும்பமா உழைப்பதைப் பார்த்து முதல் மற்றும் இரண்டாவது தளத்தையும் எங்களுக்கு கொடுத்
திட்டார். இப்ப முதல் தளத்தை முழுக்க முழுக்க கண்ணாடி வளையல்களுக்காக அமைச்சிருக்கோம். 

கீழ்த் தளத்தில் மஞ்சள் குங்குமம் என பூஜைப் பொருட்கள், மெட்டல் வளையல்கள், ஆர்ட்டிஃபிஷியல் கவரிங் நகைகள்னு வச்சிருக்கோம். இரண்டாவது தளத்தில் குந்தன் நகைகளுக்காக அமைக்க இருக்கிறோம்...’’ என்றவர் கண்ணாடி வளையல்கள் என்றால் ‘வளையோசை அம்மாச்சி’ என்று மக்கள் மனதில் இடம் பெற்ற காரணத்தை விவரித்தார்.

‘‘இப்ப எனக்கு 50 வயசாகிறது. இருபத்தைந்து வருஷங்களா பல கஷ்டங்களை சந்தித்துதான் நான் இப்ப இந்த நிலைக்கு வந்திருக்கிறேன். பலருக்கு என்னையும் என் வளையல்களையும் தெரியும். 

பொதுவாக பெண்கள் திருமணத்திற்கு புடவை அல்லது நகை வாங்கும்போது அவர்களுக்கு கைராசியுள்ள ஸ்தாபனங்களைப் பார்ப்பார்கள். அதேபோல் பிரசவத்திற்கும் கைராசியான மருத்துவரிடம் செல்ல விரும்புவார்கள். வளையல்கள் சுபநிகழ்வின் அடையாளம் என்பதால் அதற்கும் கைராசி கடைகளைத் தேடிப்போய்தான் வாங்குவார்கள். 

அப்படித்தான் எங்க கடையைத் தேடி மக்கள் வரத் துவங்கினார்கள். அதற்கு என் கைராசி என்று அவர்கள் சொன்னாலும், நாங்க தொழிலுக்கு தரும் மதிப்பு மற்றும் கடுமையான உழைப்புதான் எங்களை உயர்த்தியுள்ளது. வளையல் எங்களின் குலதெய்வம். என் கணவர் பல வேலைகள் செய்தார். அதிகபட்சமாக ரியல் எஸ்டேட் தொழிலும் செய்தார்.

ஆனால், எங்களுக்கான அடையாளம் மற்றும் மதிப்பு கொடுத்தது இந்த வளையல்கள்தான். அதனால்தான் நாங்க இதனை குலதெய்வமாகப் பார்க்கிறோம். மேலும் கடைக்கு வரும் பெண்கள் எல்லாரும் என்னை அம்மா போல்தான் பார்க்கிறார்கள். அவர்கள் எனக்கு வச்ச பெயர்தான் அம்மாச்சி...’’ என்ற ராஜராஜேஸ்வரியைத் தொடர்ந்தார் அவரின் கணவர் நாகராஜ்.

‘‘என் சொந்த ஊர் சிதம்பரம். பிழைப்புக்காக 17 வயசில் சென்னை வந்தேன். முதலில் சோடா கம்பெனி நடத்தினேன். அதில் பெரிய முன்னேற்றத்தைப் பார்க்கல. இதற்கிடையில் திருமணம், குழந்தைகள், வறுமைன்னு அனைத்தும் சந்தித்தேன். இவங்க மார்க்கெட்டில் கடை போட்ட போது, பலர் ‘வீட்டம்மாவை மார்க்கெட்டில் உட்கார வச்சிருக்க’ன்னு கேட்டாங்க.

ஆனால், குடும்ப சூழல் அப்ப எங்களுக்கு வேற வழி தெரியல. ஆனா, எப்ப இவங்க வளையல் தொழிலை ஆரம்பிச்சாங்களோ அப்ப முடிவு செய்தேன், இவங்களுக்கு பக்கபலமா நான் இருக்கணும்ன்னு. 

இப்ப எங்கள நம்பி 20 குடும்பங்கள் இருக்கு. அவங்களுக்கு மூன்று வேளை சாப்பாடு எங்க வீட்டில் இருந்துதான் வரும்.  

கடையைப் பொறுத்தவரை விற்பனை எல்லாம் அவங்கதான் பார்த்துப்பாங்க. அதற்கான பொருட்கள் தரமா எங்கு கிடைக்கும்ன்னு பார்த்துப் பார்த்து வாங்கி வருவது 
என்னோட வேலை. வளையல்களில் நாட்டு வளையல், ரெயின் டிராப், ஹாஃப் மூன் போன்ற டிசைன்களைத்தான் விரும்பி வாங்கறாங்க. 

ஆரம்பத்தில் பாரிசில் இருந்துதான் வளையல்களை வாங்கி வந்தோம். அதன் பிறகு உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், ஜெய்ப்பூர், ஹைதராபாத் என பல இடங்களுக்கும் சென்று அதில் எங்கு தரமான வளையல்கள் உள்ளதோ அதை தேர்வு செய்தேன். 

உத்தரப்பிரதேசத்தில்தான் கண்ணாடி வளையல்களுக்கான அடிப்பாகம் தயாராகும். அதன்பிறகு அதற்கு மேல் டிசைன்கள் எல்லாம் ராஜஸ்தான், ஜெய்ப்பூர், தில்லி போன்ற இடங்
களில் அப்போதுள்ள டிரெண்டிற்கு ஏற்ப வடிவமைப்பார்கள். பொதுவாக எங்களுக்கு வேண்டிய டிசைன்களை நாங்க சொல்வோம். 

அதனை எங்களுக்காக பிரத்யேகமாக வடிவமைத்துத் தருவாங்க. அதில் ரெயின் டிராப் மற்றும் ஹாஃப் மூன் டிசைன்கள் தில்லியிலும்; கற்கள் பொறிக்கப்பட்ட வளையல்கள் ராஜஸ்தான், குஜராத் போன்ற இடங்களிலும் கிடைக்கும். அதில் தங்கம் மற்றும் வெள்ளி முலாம்கள் வளையல்கள் மேல் பூசப்பட்டு வருபவைதான் நாட்டு வளையல்கள்.

பொதுவாக பெண்களுக்கு ஒரே மாதிரியான டிசைன்கள் பிடிக்காது. அதனால் நாங்களும் எங்களுக்கு வேண்டிய டிசைன்களை அவ்வப்போது மாற்றி அமைத்துத்தரச் சொல்வோம். 
வளையல்கள் உற்பத்தி செய்யப்படும் இடங்களில் நேரடியாகச் சென்று வாங்குவதால், எங்களுக்கு வேண்டிய டிசைன்களை அவர்களிடம் சொல்லிவிடுவோம். அதற்கு ஏற்ப அவர்களும் வடிவமைத்துத் தருவார்கள். 

எனக்கு வளையல் குறித்து அனைத்து விவரங்களும் சொன்னது என் மனைவிதான். அவங்க எதிர்பார்க்கும் தரத்தில் எங்கு வளையல்கள் உள்ளதோ அதை தேடிப்பிடித்து வாங்கித் தருவது என் வேலை...’’ என நாகராஜ் நிறுத்த, தொடர்ந்தார் ராஜராஜேஸ்வரி.‘‘இங்கு அனைத்து டிசைன்கள் மற்றும் வண்ணங்களில் வளையல்கள் கிடைக்கும். உங்க புடவையைக் கொண்டு வந்தால் அதன் நிறத்திற்கு ஏற்ப நாங்க வளையல்களை அழகாக செட் செய்தும் தருவோம். 

பெரும்பாலானவர்கள் திருமணம் மற்றும் வளைகாப்பு போன்ற நிகழ்வுகளுக்காகத்தான் இங்கு வளையல் வாங்க வர்றாங்க. என்னிடம் வரும் வாடிக்கையாளர்கள் இல்லை என்று திரும்பிப் போகக்கூடாதுன்னு நினைப்பேன். வெளிநாட்டில் இருந்து வரும் வாடிக்கையாளர்கள் எங்க கடையினை அங்கு பிரான்சைசி கொடுக்கச் சொல்லி கேட்கிறாங்க. ஆனால், எனக்கு அதில் விருப்பமில்ல. 

எனக்கு ஒரு வளையலுக்கு ரூ.20 லாபம் கிடைச்சா போதும். 100 ரூபாய் லாபத்தை ஒரு வளையலில் பார்ப்பதற்கு அதையே ஐந்து பேரிடம் விற்று லாபம் பார்க்கணும். அதுதான் 
என்னுடைய விருப்பம். அப்படி விற்பனை செய்யும் போது, மக்களும் நிறைய வாங்க வருவாங்க. ஸ்டாக்கும் தீரும். புது ஆர்டர்கள் மற்றும் டிசைன்களும் கொண்டு வரலாம்...’’ என்கிறார் 
ராஜராஜேஸ்வரி.

செய்தி: ப்ரியா

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்