ரயில்... வேகம் 700 கிமீ!
சீனாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ‘மேக்னடிக் லெவிடேஷன்’ எனும் ‘மேக்லெவ்’ தொழில்நுட்பத்தில் புதிய சாதனையைப் படைத்திருக்கின்றனர். காந்த சக்தியில் இயங்கும் தொழில்நுட்பம் இது. சமீபத்தில் மேக்லெவ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு ரயிலை வடிவமைத்திருக்கின்றனர். சக்கரங்கள் இல்லாமல் காந்த சக்தியில் அதிவேகமாக இயங்குகிறது இந்த ரயில்.
 இந்த மேக்லெவ் ரயிலைச் சோதனை செய்வதற்காக 400 மீட்டர் நீளத்தில் ஒரு ஓடுபாதையை நிறுவியிருந்தனர். வெறும் 2 நொடிகளில் 400 மீட்டரைக் கடந்து எல்லோரையும் ஆச்சர்யப்படுத்தியிருக்கிறது மேக்லெவ் ரயில். இந்த வேகத்தில் சென்றால் மணிக்கு 700 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லலாம்.
இதுவரை இவ்வளவு வேகத்தில் எந்த ரயிலும் சென்றதே இல்லை. இதற்கு முன்பு கடந்த வருடம் ஜனவரியில் இதே ஓடு பாதையில் வேறு ஒரு மேக்லெவ் ரயிலை வைத்து சோதனை செய்துபார்த்தனர்.
அந்த ரயில் மணிக்கு 648 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றது. அதில் சில மாற்றங்களைச் செய்து, 700 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் மேக்லெவ் ரயிலை வடிவமைத்திருக்கின்றனர்.
உலகின் அதிவேக ரயில் என்ற சிறப்பையும் தன்வசப்படுத்தியிருக்கிறது இந்த மேக்லெவ் ரயில். கடந்த வாரம் மேக்லெவ் ரயிலின் சோதனையோட்ட வீடியோ ஒன்று, இன்ஸ்டாகிராமில் வெளியாகி, லைக்குகளையும், வியப்பையும் அள்ளி வருகிறது.
தவிர, உலகிலேயே அதிவேகமாகச் செல்லும் கம்ர்ஷியல் மேக்லெவ் ரயில் என்ற சிறப்பைத் தன்வசம் வைத்திருக்கிறது, ஷாங்காய் மேக்லெவ் ரயில். இந்த ரயில் மணிக்கு 431 கிலோ மீட்டர் வேகத்தில் செல்கிறது.
பொருட்களைக் கொண்டு செல்ல இந்த ரயிலைப் பயன்படுத்துகின்றனர். பத்து வருடங்களுக்கு முன்பு ஜப்பானில் எல் ஓ என்ற மேக்லெவ் ரயிலைச் சோதனை செய்து பார்த்தனர். அப்போதே அந்த ரயில் மணிக்கு 603 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று அசத்தியது.
அடுத்து 1000 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய மேக்லெவ் ரயில் அல்லது வேறு புது தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடிய ரயிலைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியிருக்கின்றனர் சீன விஞ்ஞானிகள்.
சில்லென்ற கோவையன்
|