30ல் ஒருவர் இந்த இந்தியர்!



ஒவ்வொரு வருடத்தின் இறுதியிலும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் 30 வயதுக்குட்பட்ட, 30 ஆளுமைகளைப் பட்டியலிடுவது, ‘ஃபோர்ப்ஸ்’ பத்திரிகையின் வழக்கம். 

இதில் அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா என்று தனித்தனிப் பட்டியல்கள் இருக்கின்றன. 
அமெரிக்கப் பட்டியலில் நிதித்துறை சார்ந்து சிறந்து விளங்கும் 30 வயதுக்குட்பட்ட 30 ஆளுமைகளில் ஒருவராக இடம்பிடித்துள்ளார், கல்யாணி ராமதுர்கம். இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட அமெரிக்க தொழிலதிபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. 
நியூயார்க்கில் இயங்கிவரும் நிதித்துறை சார்ந்த தொழில்நுட்ப நிறுவனமான ‘கோபால்ட் லேப்ஸி’ன் தலைமைச் செயல் அதிகாரியும் இவரே. 

வங்கி, நிதி நிறுவனங்களுக்கு உண்டான ஏஐ திறன் கொண்ட மென்பொருட்களைக் கட்டமைத்துத் தருவது இந்நிறுவனத்தின் பணி. அதாவது, அமெரிக்காவில் உள்ள பல நிறுவனங்களின் நிதி சார்ந்த செயல்பாடுகள் பாதுகாப்பாக இருப்பதற்கு ‘கோ பால்ட் லேப்ஸு’ம் ஒரு காரணம். இந்த நிறுவனத்தை ஆரம்பிப்பதற்கு முன்பு ‘ஆப்பிள்’ நிறுவனத்தில் மிகவும் அழுத்தம் தரக்கூடிய ஒரு வேலையைச் செய்து வந்தார், கல்யாணி. 

ஆம்; தீவிரவாதத் தொடர்புடையவர்கள் யாராவது ‘ஆப்பிள் பே’யைத் தவறான பணப் பரிவர்த்தனைகளுக்காகப் பயன்படுத்துகிறார்களா என்பதைக் கண்காணிக்கும் பொறுப்பில் இருந்தார் கல்யாணி. ‘கூகுள் பே’யைப் போல மொபைல் மூலம் நிதிப் பரிவர்த்தனைக்குப் பயன்படுத்தும் ஒரு ஆப்தான் ‘ஆப்பிள் பே’. 

பெரும்பாலும் தீவிரவாத அமைப்புகள் மொபைல் ஆப்கள் வழியாகத்தான் பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்கின்றன. இதைக் கண்காணித்து, தடுப்பதற்காக ஒவ்வொரு பணப்பரிவர்த்தனை ஆப் நிறுவனமும் திறமையான ஆட்களை வேலைக்கு நியமித்திருப்பார்கள். அப்படியான ஒரு திறமைசாலிதான், கல்யாணி. 

தனது பணியைச் சிறப்பாகச் செய்து பல தீவிரவாதச் செயல்களைத் தடுத்திருக்கிறார் கல்யாணி. இதுதான் அவர் 30 வயதுக்குட்பட்ட 30 ஆளுமைகளில் இடம்பிடிக்க முக்கிய காரணம். 
உலகப்புகழ் பெற்ற பல்கலைக்கழகமான ஸ்டான்போர்டில் கம்ப்யூட்டர் சயின்ஸ் துறையில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டம் பெற்றவர், கல்யாணி. 

ஏஐ துறையில்தான் கல்யாணிக்கு ஆர்வம் அதிகம். அவரது படிப்பு ஆட்டோமேஷன், மென்பொருள் ரீதியான அடிப்படைத் தொழில்நுட்ப அறிவை அவருக்குக் கொடுத்தது. ஆனால், கல்வியைவிட, ‘ஆப்பிள்’ நிறுவனத்தில் பணிபுரிந்த போதுதான்  நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டதாகச் சொல்கிறார் கல்யாணி. 

‘ஆப்பிள்’ நிறுவனத்தில் பணிபுரியும்போது முக்கியமான ஒரு விஷயத்தைக் கவனித்தார் கல்யாணி. ‘ஆப்பிள்’ மாதிரியான பெரும் தொழில்நுட்ப நிறுவனத்திலேயே நிதித்துறை சார்ந்த பாதுகாப்பு விஷயங்களில் தொய்வாக இருந்தது கல்யாணியை ஆச்சர்யப்படுத்தியது. 

மட்டுமல்ல, ‘ஆப்பிளி’ல் மெதுவாக செயல்படும் காலாவதியான செயல்முறைகளைப் பயன்படுத்தியதும், ஏதாவது பிரச்னைகள் என்றால் ஆயிரம் பக்கங்களைக் கொண்ட கையேடுகளைப் படித்துத்தான் தீர்வுகளைக் காண முடியும் என்ற சூழலும் அவரைத் திக்கு முக்காட வைத்தது.

 இந்த அனுபவங்கள்தான் கல்யாணியைச் சொந்தமாக நிறுவனம் தொடங்க தூண்டியது. 
அதே நேரத்தில் நிதி சார்ந்த பல பிரச்னைகளை ஏஐ மூலம் வேகமாக தீர்க்க முடியும் என்பதையும் கண்டறிந்தார் கல்யாணி. 

அதனால் ‘ஆப்பிள்’ நிறுவனத்திலிருந்து விலகி, ஆசி அகர்வால் என்ற மென்பொருள் பொறியாளருடன் இணைந்து, 2023ம் வருடம் ‘கோபால்ட் லேப்ஸை’ உருவாக்கினார் கல்யாணி. 
நவீன முறையில், ஏஐயைப் பயன்படுத்தி பணப்பரிவர்த்தனையைப் பாதுகாப்புடன், எளிமையாக்குவதுதான் இந்நிறுவனத்தின் முக்கியமான நோக்கம்.

 ‘கோபால்ட் லேப்ஸ்’ வடிவமைத்திருக்கும் நவீன டூல்கள், வங்கி மற்றும் நிதி நிறுவனங்களுக்குப் பேருதவியாக இருக்கிறது. வங்கிகள் வாரக்கணக்கில் செய்கின்ற பல வேலைகளை இந்த டூல்கள் சில மணி நேரங்களிலேயே செய்து முடிக்கிறது. 

‘‘மனிதர்களுக்கு மாற்றாக இந்த டூல்களை உருவாக்கவில்லை; வேலையை விரைவாகவும், துல்லியமாக முடிப்பதும் இந்த டூல்களின் நோக்கம்...’’ என்கிறார் கல்யாணி.
மட்டுமல்ல; ஒவ்வொரு வருடமும் நிதித்துறையில் புதுவிதமான விதிகள் உருவாக்கப்படுகின்றன. 

அதனால் தன்னுடைய தொழில்நுட்பத்தைப் புதுப்பித்துக்கொண்டே இருக்கிறார் கல்யாணி. பெரு நிறுவனங்கள் நிதி சார்ந்த விஷயங்களில் பெரிய தவறைச் செய்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார். இதற்கான எல்லா பாதுகாப்புகளையும், வழிமுறைகளையும் தொழில்நுட்ப ரீதியாக ஏற்படுத்துவது கல்யாணியின் முக்கியப் பணியாக இருந்து வருகிறது.

த.சக்திவேல்