உறைமெழுகும் பேனாவும்

உமிக்கருக்கின் தவிட்டு மணமும், சிரட்டைக் கரியின் துருவேறிய வாசமும், வெங்காரத் துருசின் கந்தக நாற்றமுமாய் கிடக்கும் அக்கச்சாலை தெருக்கள்தான் தாணு.பிச்சையாவின் கவிதைக்களம். மரபார்ந்த ஒரு பொற்கொல்லர் குடும்பத்தில் பிறந்த பிச்சையா, ஒரு பக்குவப்பட்ட தொழிலாளியாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முடியாத சோகத்தை பொற்கொல்லனின் மொழியில் கவிதையாக்குகிறார்.

ஒரேயொரு கவிதைத் தொகுதி ‘உறைமெழுகின் மஞ்சாடிப் பொன்’ அரவமே இல்லாமல் வந்து அத்தனை இலக்கிய விழிகளையும் விரிய வைத்திருக்கிறது. ‘அக்கச்சாலை’, ‘தாய்ப்பொன்’ என நாவல், சிறுகதைத் தளங்களுக்குள்ளும் பிச்சையாவின் எழுத்தாணி நர்த்தனமாடுகிறது. ‘ராஜமார்த்தாண்டன் விருது’, ‘கவிதை உறவு விருது’, தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் விருதுகளைக் குவித்து தனித்தன்மை வாய்ந்த படைப்பாளியாக நடையிடுகிறார் பிச்சையா.

சாரலும் தூறலுமாக ரசனையான தட்பவெப்பம் கொண்ட நாகர்கோவிலின் வடசேரி பகுதியில், பொற்கொல்ல உபகரணங்களும், புத்தகக்குவியலும் நிறைந்த பட்டறையின் உள்ளே உமி ஓடு ஊதிச் சிவந்த விழிகளோடு நம்மை வரவேற்கிறார் தாணு.

பிச்சையா.
‘‘அம்மாவழித் தாத்தா திருவிதாங்கூர் சமஸ்தானத்துல பொற்கொல்லரா இருந்தவர். அப்பாவும் பாரம்பரியமான பொற்கொல்லர். கோயில், பரத நாட்டிய நகைகள் செய்யறதுல புகழ்பெற்றவர். எங்க சமூகத்தில யாரையும் பெரிய படிப்பு படிக்க வைக்க மாட்டாங்க. கையெழுத்து போடவும், காசு பணம் எண்ணவும், கைப்பிடி அளவு கத்துக்கவும் மட்டும்தான் படிப்பு. நான் ஆறாவது படிக்கும்போது அப்பா காலமாகிட்டார். குடும்பத்தை வறுமை சூழ்ந்துக்குச்சு. படிப்பை நிறுத்திட்டு தொழில் கத்துக்க திருவனந்தபுரத்தில தாத்தா வீட்டுக்கு அனுப்பிட்டாங்க. பதினோரு வயசுலேயே பட்டறையில உக்காந்துட்டேன்.

ஓரளவுக்கு தொழிலோட அடிப்படை விஷயங்களை கத்துக்கிட்டு நாகர்கோவில் வந்து மீனாட்சிபுரத்தில ஒரு பட்டறையில வேலைக்குச் சேந்தேன். நம்ம குணத்துக்கு யார்கிட்டயும் ஒத்துப்போக முடியாது. சுடுசொல் பொறுக்க மாட்டேன். வேலையை முழுசா கத்துக்கிறதுக்குள்ள 20 பட்டறைகள் மாறிட்டேன். ஒருவழியா தட்டுத்தடுமாறி ஒரு பட்டறை ஆரம்பிச்சேன். புதுசா நகைப் பட்டறை திறக்கும்போது, தொழில் கத்துக்கொடுத்த குருநாதர் கொஞ்சம் பொன்னைக் கொண்டு வந்து உருக்கி, பட்டறைக் கட்டையில வச்சுத் தட்டி, தொழிலை ஆரம்பிச்சுத் தருவார். அதுக்கு ‘தாய்ப்பொன்’னுன்னு பேரு. யாருகிட்டயும் ஒழுங்கா தங்கி முறைப்படி வேலை கத்துக்காததால எனக்கு தாய்ப்பொன்னு தரக்கூட ஆளில்லை...’’ - முகப்பூச்சில்லாத வார்த்தைகளில் சற்றே கவலை இழையோடுகிறது.

‘‘எங்க அம்மா செல்வச்செழிப்பா வாழ்ந்தவங்க. நல்ல படிப்பாளி. சித்திகளும் நிறைய வாசிப்பாங்க. சாண்டில்யன், ஜெயகாந்தன் நாவல்கள் எல்லாம் சின்ன வயசுலயே வாசிக்கப் பழகிட்டேன். ஆனா நிலையில்லாம அலைஞ்சு திரிஞ்சதால வாசிப்பு அடியோட விட்டுப்போயிருந்துச்சு. தனியா பட்டறை போட்டபிறகு வாசிப்பு வேட்கையா மாறிடுச்சு. பட்டறைக்குப் போற வழியிலதான் கவிமணி தேசிய நூலகம். அதுக்குள்ள நுழைஞ்சா பட்டறையை மறந்துடுவேன். வைரமுத்து, வாலி கவிதைகள்ல பெரிய ஈர்ப்பு. அந்த ஈர்ப்பு என்னையும் எழுதத் தூண்டுச்சு.எப்படி ஒரு ஆபரணத்தைப் பாத்த மாத்திரத்தில அதேமாதிரி செய்ய முடியாதோ, அதேமாதிரி ஒரு கவிதையை படிச்ச மாத்திரத்தில அதேமாதிரி எழுதமுடியாது. அதுக்குன்னு தனி தொழில்நுட்பம் இருக்கு. அதெல்லாம் அப்போ எனக்குப் புரியல. மொழியைக் கையாள்ற திறமைகூட வசப்படலே.. ஆனா, தமிழகத்தோட தேசியகவிங்கிற எண்ணம் தலைக்கேறிடுச்சு. இந்த தேடல்ல பட்டறையை விட்டுட்டேன். சொன்ன தேதிக்கு வேலையை முடிச்சுக் கொடுக்காததால நாணயம் கெட்டுப் போச்சு.

இதைப்பத்தி எல்லாம் எனக்குக் கவலை இல்லை. ‘நமக்காக சென்னையில இயக்குனர்கள் காத்துக்கிட்டிருப்பாங்க... போனவுடனே நாலு பாட்டு எழுதிக் கொடுத்துட்டு வந்திருவோம்’னு நினைச்சுக்கிட்டு நண்பன்கிட்ட கடையை ஒப்படைச்சுட்டு சென்னைக்கு பஸ் ஏறிட்டேன். நண்பர்கள் எதார்த்தத்தைப் புரிய வச்சு ஒரு டீக்கடையில வேலைக்குச் சேத்துவிட்டாங்க. ‘குந்தம் (சொக்கத்தங்கம்) புடிச்ச கையி... அதுல எச்சி கிளாஸ் கழுவுறதா’ன்னு ரோஷம் பொங்குச்சு. நாகர்கோவிலுக்கு திரும்பிட்டேன்.

நாணயம் கெட்டுப்போனதால தொடர்ந்து பட்டறையை நடத்த முடியல. வேறெங்கயும் வேலைக்குச் சேரவும் முடியல. வறுமையில குடும்பமே என்னை வெறுக்கிறதா நினைச்சேன். இந்த பிரச்னைக்கு எல்லாம் ஒரே வழி, துறவியா மாறுவதுதான்னு முடிவு பண்ணிட்டேன். ரெண்டு காவி வேட்டி வாங்குனேன். நேரா திருச்செந்தூர் போயி மொட்டையப் போட்டேன். கடல்ல குளிச்சிட்டு, போட்டிருந்த உடைகளை கழட்டி வீசிட்டு ஒரு காவி வேட்டியைக் கட்டினேன். வசந்தமண்டபம் பக்கத்துல வரிசையா துறவிகள் உக்காந்திருந்தாங்க. அவங்ககூட போய் உக்காந்திட்டேன். அப்போ எனக்கு 18 வயசு.

கோயிலுக்கு வந்துபோறவங்க கட்டுச்சோறு, காசெல்லாம் குடுத்தாங்க.. இரவு அங்கேயே படுத்துத் தூங்குனேன். மறுநாள் அங்கிருந்த சிலபேர், ‘புது ஆட்களுக்கு இங்கே இடமில்லை’ன்னு அடிச்சு துரத்திட்டாங்க. நேரா சுசீந்திரம் காசி மடத்துக்கு வந்தேன். சாப்பாடு போட்டாங்க. பக்கத்துல இருந்த சுடுகாட்டுல படுத்துட்டேன். அடுத்து என்ன செய்யிறதுன்னு தெரியலே. வைராக்கியம் குறைஞ்சிடுச்சு. வீட்டுக்குக் கிளம்பிட்டேன். சுடச்சுட மீன் குழம்பு வச்சிருந்தாங்க. நல்லா சாப்பிட்டுட்டு படுத்துட்டேன்...’’ - சிரிக்கிறார் பிச்சையா.

‘‘இனிமே நாகர்கோவில் வேண்டாம்னு முடிவு பண்ணி, சென்னையில இருந்த தாய்மாமா வீட்டுக்குக் குடும்பத்தோட கிளம்பிட்டோம். அவர் கோயில் நகைகள் செய்யிறார். 5 வருஷம் அவர்கூட இருந்து தொழிலைக் கத்துக்கிட்டேன். வாசிக்கவும் எழுதவும் நிறைய நேரம் கிடைச்சுச்சு. வாசிக்க வாசிக்க... எழுத்தோட தன்மையும் உள்ளடக்கமும் மாறுச்சு.

வேலை கத்துக்கிட்டதும் வடசேரிக்கே வந்து பட்டறை ஆரம்பிச்சேன். ஓரளவுக்கு சுதந்திரமாவும் நிம்மதியாவும் வாழ்க்கை நகரத் தொடங்கின பிறகு எழுத்தும் அது தொடர்பான தேடலும்
விரிஞ்சுச்சு. கலை இலக்கியப் பெருமன்றத்தோட தொடர்பு கிடைச்ச பிறகு, எழுத்துல சமூக முக்கியத்துவத்தோட அவசியம் புரிஞ்சுச்சு.

சரித்திரத்திலும், இலக்கியத்திலும் மிகப்பெரும் அவமானத்துக்கும், குற்றச்சாட்டுக்கும் உள்ளான என் சமூகத்தோட நியாயத்தை, அரசியல், மொழி, மகிழ்ச்சி, துக்கம், வறுமை, வாழ்க்கையை எனக்குப் பழக்கமான மொழியில் எழுதத் தொடங்குனேன். பயணம் தொடருது. நிறைய எழுத வேண்டியிருக்கு. தங்க விலை, வெள்ளி விலை ஏறிடுச்சு. முதலாளிகளும், வியாபாரிகளும் நல்லாயிருக்காங்க. தொழிலாளி வாழ்க்கை மட்டும் மாறவேயில்லை. 10 வயசுல பட்டறைக்குள்ள நுழையிற வாழ்க்கை அப்படியே முடிஞ்சி போயிடுது. வெளியில் வராத அந்த வேதனையை எழுதியாகணும்.

இப்போ திருமணமாயிடுச்சு. ஒரு குழந்தை, சுவேதாபாரதி. பெரிசா எந்த லட்சியமும் இல்லை. பொண்டாட்டி, பிள்ளைக்குச் சோறு போடணும்... எனக்கு ஒரு நாளைக்கு 6 டீ, 8 சிகரெட்... அதுபோதும்!”

- கழைக்கூத்தாடி கயிற்றில் நடக்கும் லாவகத்துடன் பொன்னை உருக்கி கம்பியாக இழைத்தபடி விடைகொடுக்கிறார் தாணு.பிச்சையா.
- வெ.நீலகண்டன்
படங்கள்: புதூர் சரவணன்