கண்டார்கள் கடவுளை

கடைசியில் கடவுளைக் கண்டறிந்து விட்டார்கள். எல்லோரும் நம்புவதுபோலவே அவர், சாதாரணர் கண்களுக்குத் தெரிய மாட்டார். தூணிலும் இருக்கிறார்; துரும்பிலும் இருக்கிறார். அந்தத் துரும்பினைக் காட்டிலும் மிக மிக நுண்ணிய துகள்தான் அவர். ஆம், ஆலயத்தில் அல்ல... ஆராய்ச்சிக் கூடத்தில் கண்டறிந்திருக்கிறார்கள் அவரை!

2012 ஜூலை 4ம் தேதியை உலகெங்கும் அறிவியல் ஆர்வலர்கள் மறக்க மாட்டார்கள். கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டறிந்தது போன்ற, பரிணாமக் கொள்கையை டார்வின் கண்டறிந்தது போன்ற மகத்தான கண்டுபிடிப்பு நிகழ்ந்த தினம் இது! ‘கடவுளின் அணுத் துகள்’ எனப்படும் ‘ஹிக்ஸ் போசான்’ துகள் இருப்பதை நிரூபித்திருக்கிறார்கள். இதன் மகத்துவம் புரிய 1370 கோடி ஆண்டுகள் பின்னோக்கிப் போக வேண்டும்.

பெருவெடிப்பு எனப்படும் ‘பிக் பேங்’ மோதலில் இந்தப் பிரபஞ்சம் உருவானது என்கிறது அறிவியல். எல்லாம் மோதிச் சிதறி, தீக்கோளமாகி, அது குளிர்ந்து வாயுக்கள் ஆகி, அவை வடிவம் பெற்று, திரண்டு நட்சத்திரங்களாகவும் கிரகங்களாகவும் வடிவம் எடுத்ததாக சொல்கிறது பிக் பேங் தியரி. இப்படி பிரபஞ்சத்தில் எல்லாமே வடிவம் எடுக்கக் காரணமாக அமைந்தவை 12 வகை அணுத்துகள்கள். இவற்றில் பதினொன்றைக் கண்டுபிடித்து பெயரும் சூட்டியாயிற்று! கடைசி அயிட்டம்தான் விஞ்ஞானிகளுக்கு தண்ணி காட்டிக் கொண்டிருந்தது. கிட்டத்தட்ட 50 ஆண்டு முயற்சியில் இப்போது அதைப் பார்த்துவிட்டார்கள்.

அது என்ன கடவுள் துகள்?


தியேட்டரில் படம் பார்க்கிறீர்கள். ஆபரேட்டர் அறையிலிருந்து ஒரு ஒளிக்கற்றை திரைக்குச் செல்கிறது. அது பளீரென தெரிகிறது. ஆனால் அதை உங்கள் கைகளால் பிடிக்க முடியாது; புவி ஈர்ப்பு விசையால் ஈர்க்கப்பட்டு கீழேயும் விழாது. காரணம், அதற்கு நிறை இல்லை. வாயுக்களும் அப்படித்தான். வாசனையை உணர முடியும்; அதற்கு வடிவமோ, நிறையோ கிடையாது. ஆனால், ஒரு குட்டியூண்டு கூழாங்கல்லைத் தூக்கி அந்தரத்தில் நிறுத்தி வைக்க முடியாது. தூக்கும் உங்கள் முயற்சிக்கு, அது தன் எடையால் எதிர்ப்பு தெரிவிக்கும். விட்டால் கீழே விழுந்து விடும்.

இப்படி இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் எத்தனையோ விஷயங்களில் சில மட்டும் உருவமற்றும் நிறையற்றும் இருப்பது எப்படி; பல பொருட்கள் வடிவம் பெற்று நிறையும் பெற்றது எப்படி? யோசித்தார்கள் விஞ்ஞானிகள். அணுக்களின் சேர்க்கைதான் இந்தப் பிரபஞ்சம். நம் பூமி,

இந்த புத்தகம், டேபிள், டேபிளில் இருக்கும் கம்ப்யூட்டர்... எல்லாமே அணுக்களால் ஆனவைதான்! அணுக்கள்தான் பிரபஞ்சத்தை உருவாக்கின. அணுக்கள்தான் பூமியில் உயிர் வாழ்க்கையை சாத்தியமாக்கின. இப்படி ‘அணுதான் அடிப்படையான கட்டுப்பொருள்’ என்ற அளவில்தான் விஞ்ஞானம் ஒரு காலத்தில் இருந்தது.அணுவைத் துளைத்தபோதுதான் அணுக்கருவில் புரோட்டான், நியூட்ரான் என இரண்டு பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. அவற்றையும் துளைத்து ‘குவார்க் என்ற பொருளால் ஆனவை இவை’ எனக் கண்டறிந்தார்கள். இதன்பின் ‘எல்லாப் பொருட்களும் குவார்க் மற்றும் எலெக்ட்ரான்களால் ஆனவை’ என அறிவித்தார்கள். விஞ்ஞானம் வளர வளர... இதுவும் சுருங்கியது. ‘எலெக்ட்ரானே லெப்டான் எனப்படும் நுண்ணிய பொருளால் ஆனது’ என்பது புரிந்தது. குவார்க்கும் லெப்டானும் காதலர்கள் போல ஒட்டிக் கொள்ளவும் செய்யும்; பங்காளிகள் போல முறைத்துக் கொண்டு விலகவும் செய்யும். இந்த ஜாலத்தை ஏதோ ஒரு மாயப்பொருள் செய்கிறது என்பது மட்டும் புரிந்தது.

கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் நீங்கள் இறங்கி நடக்கிறீர்கள். உங்களை போட்டோ எடுக்கவோ, ஆட்டோகிராப் வாங்கவோ யாரும் வருவதில்லை. சூப்பர்ஸ்டார் ரஜினி வந்தால் கூட்டமே சூழ்ந்துகொள்கிறது. கூட்டம் அவர் மீது வசீகரத்தில் போய் விழுவதற்குக் காரணம், அவரது ஸ்டார் பவர்; வசீகர சக்தி. அதுதான் எல்லோரையும் அவர்மீது ஓடிப் போய் ஒட்டிக் கொள்ளச் செய்கிறது. இப்படி பொருட்களின்மீது நிறையை ஒட்டவைக்கிற கோந்து போன்ற பொருளைத்தான் ‘போசான்’ என்கிறார்கள்.1964ம் ஆண்டில் பீட்டர் ஹிக்ஸ் என்ற பிரிட்டிஷ் இயற்பியலாளர் இதற்குப் பெயர் வைத்தார். ஐன்ஸ்டீனோடு சேர்ந்து ஆராய்ச்சி செய்து, குவாண்டம் இயக்கவியலுக்கு அரிய பங்களிப்பைச் செய்த இந்திய விஞ்ஞானி சத்யேந்திரநாத் போஸ் நினைவாக ‘போசான்’ என்று பெயர் சூட்டினர்.

இது எப்படி கடவுள் துகள் ஆனது?
‘எங்கும் நிறைந்திருக்கிறது; எல்லாவற்றுக்கும் அடிப்படை ஆதாரமாக இருக்கிறது; ஆனால் அதைப் பார்க்க முடியவில்லை; உணரவும் முடியவில்லை. தியரியாகவே அதைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம்.’ இப்படி ஹிக்ஸ் போசான் பற்றி நினைத்த விஞ்ஞானிகள், இதற்கும் கடவுளுக்கும் அநேக ஒற்றுமைகள் இருப்பதை உணர்ந்தார்கள். மேலே சொன்ன அனைத்தும் கடவுளுக்கும் பொருந்தும். அதோடு, ‘பிரபஞ்சத்தைப் படைத்தது கடவுள்’ என்பது ஆன்மிகவாதிகளின் நம்பிக்கை. ‘ஹிக்ஸ் போசான் இல்லையென்றால் பிரபஞ்சம் உருவாகி இருக்காது’ என்பது விஞ்ஞானிகளின் தியரி. லியோன் லெடர்மேன் என்ற விஞ்ஞானி இந்தத் துகள் பற்றி ஒரு புத்தகம் எழுதினார். ‘கடவுளை பழிக்கும் துகள் - இந்த பிரபஞ்சம்தான் பதில் என்றால், கேள்வி என்ன?’ என்ற அந்தப் புத்தகத்தின் தலைப்பு பிரச்னையாகிவிடுமோ என பயந்த பதிப்பாளர் ‘கடவுள் துகள்’ என மாற்றினார்.

54 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், சுவிட்சர்லாந்தில் பூமிக்கடியில் 574 அடி ஆழத்தில் 27 கிலோமீட்டர் நீளத்தில் சுரங்க ஆய்வகம் அமைத்து, 6 ஆயிரம் விஞ்ஞானிகள் ராத்திரி பகலாக உழைத்து, 40 லட்சம் கோடி புரோட்டான்களை அதிவேகத்தில் மோத விட்டு, பெரு வெடிப்பை செயற்கையாக நிகழ்த்தினர். மோதலின்போது கடவுள் துகள் பிரிந்து வெளிப்பட்டது. உலகமும் பொருட்களும் உயிர்களும் உருவாகி வடிவம் பெற்ற கதை இப்போது புரிந்திருக்கிறது. பிரபஞ்சத்தின் இருண்ட பகுதிகளை இனி ஆராய்ச்சி செய்து, மகத்தான கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவது சாத்தியம்.
கடைசியில், ‘சிருஷ்டி என்பது கடவுளின் செயல் இல்லை; அது ஒரு துகளின் வேலை’ என்பதை நிரூபிக்கத்தான் இத்தனை சோதனையும்!
- அகஸ்டஸ்