எஞ்சினியரிங் அட்மிஷன்... கவுன்சிலிங்கில் கலக்க சூப்பர் டிப்ஸ்!

பொறியியல் படிப்புக்கான பொது கவுன்சிலிங் 13ம் தேதி தொடங்குகிறது. வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் தீர்மானம் செய்யும் கவுன்சிலிங் இது! தமிழகம் முழுக்க இருந்து 1.75 லட்சம் மாணவர்கள் கவுன்சிலிங்கில் பங்கேற்று கல்லூரியையும், படிப்பையும் தேர்வு செய்யவிருக்கிறார்கள். இதற்காக அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கவுன்சிலிங்கில் பங்கேற்பதற்கு முன் செய்யவேண்டிய முன்னேற்பாடுகள், கவுன்சிலிங் நடைமுறை பற்றி கல்வியாளர்கள் தரும் டிப்ஸ்...


‘‘கவுன்சிலிங் தினத்துக்கு முன்பாகவே படிப்பையும், கல்லூரியையும் தேர்வு செய்துவிட வேண்டும்...’’ என்கிறார் கல்வியாளர் வசுதா பிரகாஷ். ‘‘எந்தப் பாடத்தில் அதிக மதிப்பெண் கிடைத்துள்ளது என்று முதலில் பார்க்க வேண்டும். அடுத்து, மாணவனின் ஆர்வம். பெற்றோரும் மாணவரும் திறந்த மனதோடு விவாதித்து, விருப்பத்துக்குரிய படிப்புகளை வரிசைப்படுத்தி எழுதிக்கொள்ள வேண்டும். அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் (http://www.annauniv.edu) கடந்த ஆண்டு குறிப்பிட்ட கட் ஆஃப் மதிப்பெண்களுக்கு என்னென்ன படிப்புகள், எந்தெந்த கல்லூரிகளில் கிடைத்தன என்ற விபரத்தை வெளியிட்டுள்ளார்கள். அதைப் பார்த்தும் முடிவெடுக்கலாம். திறமை, குணம் சார்ந்தும் பரிசீலிக்க வேண்டும். சில படிப்புகளுக்கு கடின உழைப்பு தேவைப்படும். மென்மையான மாணவர்கள் அதுமாதிரியான படிப்புகளைத் தவிர்க்கலாம். எதுவாக இருந்தாலும் சுயமாக முடிவெடுப்பதே நல்லது. மற்றவர்கள் வாரி வழங்கும் இலவச ஆலோசனைகளைப் புறக்கணித்து விடுங்கள்.அடுத்தது, பொருளாதார நிலை. குடும்பச்சூழலை மனதில் கொண்டே படிப்பையும் கல்லூரியையும் தேர்வு செய்யவேண்டும். இப்படிச் சொல்வது சிலரை சங்கடப்படுத்தலாம். ஆனால் யதார்த்தம் அதுதான். ஒரு பிள்ளையை தகுதிக்கு மீறி செலவு செய்து படிக்க வைத்து விட்டு அடுத்த பிள்ளையைப் படிக்க வைக்க முடியாமல் தவித்த பல பெற்றோர்களை நான் பார்த்திருக்கிறேன். லோன் வாங்கியே படித்தாலும் கூட அதையும் திருப்பிக் கட்டத்தான் வேண்டும். இதையெல்லாம் யோசித்து 5 படிப்புகளை வரிசைப்படுத்திக் கொள்ள வேண்டும். 180க்கு மேல் கட் ஆஃப் எடுத்தவர்கள் கல்லூரிக்கு முக்கியத்துவம் கொடுத்து படிப்பைத் தேர்வு செய்யலாம். அதற்குக் கீழ் என்றால் படிப்புக்கே முக்கியத்துவம் தரவேண்டும்’’

என்கிறார் வசுதா.
தமிழகத்தில் 500க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதில் தரமான கல்லூரிகளைத் தேர்வு செய்வது உண்மையிலேயே சவாலான வேலைதான். சில ஆண்டுகளுக்கு முன் கல்லூரிகளின் தரப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டது. இப்போது அதுவுமில்லை. பிறகு எப்படி நல்ல கல்லூரியைத் தேர்வு செய்வது..?

‘‘நல்ல உள்கட்டமைப்பு, தகுதி வாய்ந்த ஆசிரியர்கள்... இவைதான் நல்ல கல்லூரிக்கான அடிப்படைத் தகுதிகள். இவை திருப்தியாக இருக்கும்பட்சத்தில் மற்றவற்றை சமரசம் செய்யலாம். விரிவான ஆய்வுக்கூடங்கள், திறமையான முதல்வர் இருந்தால் தாராளமாக அக்கல்லூரியைத் தேர்வு செய்யலாம்’’ என்கிறார் வசுதா.‘‘ஆண்டுக்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பொறியாளர்கள் கல்லூரிகளிலிருந்து வெளியே வருகிறார்கள். எல்லோருக்கும் தகுதியான வேலை கிடைப்பதில்லை. எனவே, வளாகத்தேர்வு நடக்கும் கல்லூரிகளாகப் பார்த்து தேர்வு செய்ய வேண்டும். வளாகத் தேர்வுக்கு பெரிய நிறுவனங்கள் வருகின்றனவா என்பதுதான் முக்கியம். எவ்வளவு பேருக்கு வேலை பெற்றுத் தருகிறார்கள், என்னென்ன கம்பெனிகளில் வேலை கிடைக்கிறது என்பதையும் ஆராயவேண்டும். கல்லூரி எப்போது தொடங்கப்பட்டது, அதன் நிறுவனரின் பின்புலம் என்ன என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும்.

இப்படி 10 கல்லூரிகளை, அவற்றின் வரிசை எண்ணோடு எழுதிக் கொள்ளவேண்டும். வெளிநாடுகளில் வகுப்பறையில் போய் உட்கார்ந்து பாடம் நடத்துவதைப் பார்த்து கல்லூரிகளைத் தேர்வு செய்யலாம். இங்கு சில கல்லூரிகளில் காம்பவுண்டைத் தாண்டி உள்ளேகூட அனுமதிக்க மறுக்கிறார்கள். ஏற்கனவே அங்கு படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களிடம் விசாரிக்கலாம். கட்டணங்கள், உள்கட்டமைப்பு, ஆசிரியர்களின் தகுதிகள், பிளேஸ்மென்ட் பற்றி தீர விசாரிக்க வேண்டும். சில கல்லூரிகளில் வாசலிலேயே தங்கள் ஏஜென்ட்டுகளை நிறுத்தி வைத்திருப்பார்கள். அவர்களிடம் சிக்கி விடக்
கூடாது. இணையம், ஃபேஸ்புக்கிலும் மாணவர்கள் தங்கள் கல்லூரியின் நிறைகுறைகளை எழுதுகிறார்கள். அவற்றையும் பார்க்கலாம்’’ என்கிறார் வசுதா.

கவுன்சிலிங் நடைமுறைகள் என்னென்ன... அதற்கு என்ன முன்னேற்பாடுகள் தேவை..?
விளக்குகிறார் அண்ணா பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை செயலாளர் ரேமண்ட் உத்தரியராஜ். ‘‘விண்ணப்பித்த அனைவருக்கும் கால் லெட்டர் அனுப்பப்பட்டுள்ளது. அதைக் காட்டினால் மாணவருக்கும், அவருடன் வருபவருக்கும் பேருந்தில் கட்டணச்சலுகை கிடைக்கும். கால் லெட்டர் கிடைக்கவில்லை என்றால் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் அப்ளிகேஷன் நம்பர், பிறந்த தேதியைத் தந்து தங்களுக்கான கவுன்சிலிங் நேரத்தைத் தெரிந்து கொள்ளலாம். அரங்கிற்கு வந்து டூப்ளிகேட் கால் லெட்டர் பெறலாம். 

ஒதுக்கப்பட்ட நேரத்திற்கு 2 மணி நேரம் முன்பாகவே வந்துவிட வேண்டும். வந்ததும் பெயர் பதிவு செய்ய வேண்டும். அடுத்து டெபாசிட் கட்ட வேண்டும். கவுன்சிலிங் அரங்கத்துக்கு அருகில் 8 வங்கி கவுன்ட்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. பொதுப்பிரிவினர் 5000 ரூபாயும், எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் 1000 ரூபாயும் கட்டி கவுன்சிலிங் படிவத்தைப் பெறவேண்டும். ஒவ்வொரு பிரிவு கவுன்சிலிங் முடிந்ததும் இணையத்தில் காலியிட விபரங்கள் அறிவிக்கப்படும். இதுதவிர, ஒரு ‘டிஸ்பிளே ஹால்’ அமைக்கப்பட்டுள்ளது. அங்குள்ள பெரிய திரைகளில் காலியிட விபரங்கள் ‘லைவ்’வாக அப்டேட் செய்யப்படும்.

கவுன்சிலிங் மிகச்சரியான நேரத்தில் தொடங்கும். ஒலிபெருக்கி மூலம் மாணவர்கள் அழைக்கப்படுவார்கள். காலதாமதமாக வருபவர்கள் அடுத்த பிரிவில் பங்கேற்கலாம். ஆனால் தங்கள் ரேங்க்கை கிளெய்ம் செய்ய முடியாது. மாணவருடன் ஒருவர் மட்டும் வரலாம். முதலில் அனைவரும் ஒரு அறையில் அமர வைக்கப்படுவார்கள். அங்குள்ள திரையில் கவுன்சிலிங் நடைமுறைகள் விளக்கப்படும். இதையடுத்து சான்றிதழ் சரிபார்ப்பு அறைக்குச் செல்லவேண்டும். பரிசோதனை முடிந்ததும் அனைத்து சான்றிதழ்களையும் பெற்றுக்கொள்ள வேண்டும். ஒருவேளை மேனேஜ்மென்ட் கோட்டா மூலம் கல்லூரிகளில் சேர்ந்து, சான்றிதழ்கள் கையில் இல்லாதபட்சத்தில், அக்கல்லூரி நிர்வாகத்திடம் ஒரு கடிதம் வாங்கி வந்தால் போதுமானது.

அடுத்து, கவுன்சிலிங் ரூம். 50 கம்ப்யூட்டர்கள் இருக்கும். ஒவ்வொரு கம்ப்யூட்டரிலும் ஒரு உதவியாளர் இருப்பார். கல்லூரியையும், படிப்பையும் தேர்வுசெய்ய அவர் உதவுவார். ஒருமுறை தேர்வுசெய்துவிட்டால் பின்னர் மாற்றமுடியாது என்பதால் நிதானமாக செயல்பட வேண்டும். தேர்வு செய்ததும், மேல்தளத்துக்குச் சென்று சேர்க்கை கடிதத்தைப் பெற வேண்டும். அருகில் உள்ள அரங்கில் மருத்துவப் பரிசோதனை செய்து சான்றிதழ் பெற்றுக்கொள்ள வேண்டும். இதற்கு தனிக்கட்டணம் உண்டு. இதோடு நடைமுறைகள் முடிந்தது’’ என்கிறார் ரேமண்ட் உத்தரியராஜ்.

கவுன்சிலிங்குக்கு வந்தபிறகு முன்பின் தெரியாதவர்களிடம் பேசக்கூடாது. ஓரிரு வார்த்தைகளில் உங்கள் முடிவை மாற்றிக் குழப்பி விடுவார்கள். தரகர்களும் சுற்றிக் கொண்டிருப்பார்கள். அவர்களிடமும் எச்சரிக்கையாக இருங்கள்.  பயம், பதற்றம் தேவையில்லை மாணவர்களே..! கான்ஃபிடன்ஸ் இருந்தால் கவுன்சிலிங்கில் மட்டுமல்ல, கல்லூரியிலும் கலக்கலாம்.. வாழ்த்துகள்! 
- வெ.நீலகண்டன்
படங்கள்: ஏ.டி.தமிழ்வாணன்