சுட்ட கதை சுடாத நீதி

எழுபது வயதைத் தாண்டிய பிறகும், இரண்டு மூன்று வேலைகளைப் பார்த்தபடி பிஸியாக இருந்தார் அந்த முதியவர். மனசு சுறுசுறுப்பாக இருந்தாலும், உடல் ஒத்துழைக்க வேண்டுமே! அடிக்கடி உடம்பு படுத்த, குடும்ப டாக்டரிடம் போனார். ‘வீட்டில் சும்மா இருங்கள்’ என்று சொன்னால் முதியவர் கேட்க மாட்டார்.

அதனால், ‘நகரத்துச் சூழல் உங்கள் உடம்புக்கு இனி தாங்காது’ என்று பயமுறுத்திய டாக்டர், குற்றாலம் பக்கத்தில் இருக்கும் ஒரு கிராமத்தில் செட்டில் ஆகுமாறு அட்வைஸ் செய்தார். அவரே வீடும் பார்த்து வாங்கிக் கொடுத்தார். அங்கு அதிகாலை வாக்கிங், சுத்தமான காற்றின் சுவாசம், கொஞ்சம் கொஞ்சம் தோட்ட வேலை, நிம்மதியான ஓய்வு, சிம்பிளான சாப்பாடு என நாட்கள் நகர்ந்தன. ‘டாக்டரிடம் போகவோ, போன் செய்து ஆலோசனை கேட்கவோகூட தேவை ஏற்படவில்லை’ என்பதை உணர்ந்தபோது அவர் இன்னும் ஆச்சரியமானார்.

‘இந்த கிராமத்துச்சூழலில் ஏதோ மருத்துவ குணம் இருக்கிறது’ என நினைத்தவர், அதை ஆராய்ந்து கண்டுபிடிக்க முடிவெடுத்தார். பக்கத்து வீட்டில் இருக்கும் ஓய்வுபெற்ற ஆசிரியரிடம் பேச்சுக் கொடுத்தார்.

தன் உடல் பிரச்னைகள் சில நாட்களில் தீர்ந்ததை இவர் சொல்லி, ‘‘இந்த ஊர்ல ஏதோ மகத்துவம் இருக்கு’’ என்றார். ஆசிரியரும் சும்மா இல்லை. ‘‘நான் இந்த ஊருக்கு வந்தப்ப, என்னால சுத்தமா பேச முடியாது; இருக்கற இடத்தை விட்டு நகர முடியாது; யாராவது தூக்கிக்கிட்டுதான் போவாங்க; சுயமா குளிக்க முடியாது; சாப்பிட முடியாது...’’ என்று அடுக்கினார். நகரத்து முதியவருக்கு ஆச்சரியம். ‘‘அப்படி இருந்த நீங்க, இப்ப இவ்ளோ நல்லா இருக்கீங்களே? எத்தனை வருஷமா இந்த ஊர்ல இருக்கீங்க?’’ என்றார். ‘‘எழுபது வருஷமா! ஆமா... நான் குழந்தையா பிறந்தப்போ இருந்த நிலைமையைச் சொன்னேன். உடம்பை ஊர் தீர்மானிக்கறதில்லை. நீங்க நடந்துக்கற விதம்தான் தீர்மானிக்குது’’ என்றார் ஆசிரியர். நல்ல விஷயங்களை ஆராயக் கூடாது!