ஹாலிவுட்டுக்கு சவால்!





பாஸ்போர்ட், விசா பிரச்னை ஏதுமின்றி துபாய் தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது வழங்கும் விழாவுக்கு எங்களை அழைத்துச் சென்று விட்டீர்களே... கலர்ஃபுல் போட்டோகளுக்கும், கட்டுரைக்கும் பாராட்டுகள்!
- ஜி.கோகுலகிருஷ்ணன், திருவாரூர்.

தனி ஒரு மனிதனுக்கு இங்கே வசிக்க ஒரு குடிசை கிடையாது. மக்கள் சேவைக்கு வந்த ஜனாதிபதிக்கு 335 ஏக்கரில் இரண்டு லட்சம் சதுர அடியில் வீடா? அதனாலத்தான் அதுக்கு இம்புட்டுப் போட்டியா?
- வி.ஜி.சத்தியநாராயணன், சென்னை-61.

‘மிதிபடுதே இந்த மிடில்கிளாஸ்’ - நடுத்தர வர்க்கத்தின் இன்றைய நிலையை அப்படியே படம்பிடித்தது. மத்தளத்திற்கு இரண்டு பக்கம் அடி என்பதுபோல் மத்திய-மாநில அரசுகள் நடுத்தர மக்களின் வாழ்க்கையை வதைக்கிறார்கள். என்றைக்குத்தான் நமக்கெல்லாம் விடிவு காலமோ?
- எம்.செய்யது சஃபி, சென்னை-91.

வார்த்தை விளையாட்டு கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் ஒரு வார்த்தைக்குள் இன்னொரு வார்த்தையை ஒளித்து வைத்து விளையாடும் இளைஞர் கௌதமின் திறமை போற்றத்தக்கது!
- ந.பேச்சியம்மாள், புதுப்பாளையம்.

காகிதம் எனும் நிலத்தில் பேனாவால் உழுது இலக்கியத்தை அறுவடை செய்யும் சி.எம்.முத்து பிரமிக்க வைத்தார். ‘ரெண்டு வேலி நிலம் இருக்கு... அதை இழந்தாலும் எழுதுறதை நிறுத்த மாட்டேன்!’ என்கிற அவரின் வைராக்கியம் வரவேற்கத்தக்கது.
- வி.நிர்மலா, சென்னை-109.

செத்த பூனையை பதப்படுத்தி ஹெலிகாப்டர் போல பறக்க வைத்துள்ள ஹாலந்து நாட்டுக்காரர்தான் கொஞ்சம் ‘ஒரு மாதிரி’ என்று நினைத்தேன். ‘இதுவும் ஒருவகை சித்ர
வதைதான்’ என்று பிராணிகள் நல அமைப்புகள் சொல்லியிருப்பதைப் படித்ததும், அந்த ஊரே இப்படித்தான் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்.
- எம்.ஆர்.அனுஷா, பெங்களூரு.

‘ஸ்பைடர்மேன்’, ‘சூப்பர்மேன்’ போல் உருவாகும் மிஷ்கினின் ‘முகமூடி’, ஹாலிவுட்டுக்கு சவாலாக அமைய இருக்கிற தமிழ்ப்படம் என்பதை யாராலும் மறுக்க முடியாது!
- சத்தியநாராயணன், சென்னை.

எந்த நதிநீரையும் தமிழகத்துக்குத் தரக்கூடாது என்று ரவுண்டு கட்டி நிற்கிறார்கள் அண்டை மாநிலங்கள். அந்தக் கொடுமையைக் கோடிட்டுக் காட்டியது ‘அணைகளால் ஒரு வேலி!’ கட்டுரை. இதற்கான தீர்வு
எப்போது
கிடைக்கும்
என்பது அந்த
ஈசனுக்கே வெளிச்சம்!
- இரா.வளையாபதி, கரூர்.

‘வலியுள்ளவர்களுக்கு ஆறுதலாய் இருக்க வேண்டும்’ என்று பறைசாற்றிய இந்த வார ‘சுட்ட கதை’ நெகிழ வைத்தது!
- கண்ணதாசன்,
திருவண்ணாமலை.