மழை லேட்டாக சீனா காரணமா?

ஜூன் முதல் தேதி தெற்கு கேரளாவில் மேகம் திரண்டு மெல்லிய காற்றோடு சாரல் ஆரம்பிக்கும். ‘தென்மேற்குப் பருவ மழை தொடங்கிவிட்டது’ என ஃபிளாஷ் நியூஸ் போடுவார்கள். அப்படியே அடுத்த பத்து நாட்களில் காபி, டீ, ரப்பர் தோட்டங்களுக்கு மழை பரவும். எண்ணெய் வித்துகளை உற்பத்தி செய்யும் மத்திய இந்திய மாநிலங்களில் ஜூன் மூன்றாவது வாரம் மழை பெய்ய ஆரம்பிக்கும். ஜூலையில் மேற்கு மாநிலங்கள் அத்தனையும் மழையில் நனைய, மாத இறுதியில் இந்தியாவே உற்சாகத்தில் நனையும். இது பருவமழையின் இயல்பு!

ஜூலை முதல் செப்டம்பர் வரையான நான்கு மாதங்களில்தான் இந்தியா முக்கால்வாசி மழையைப் பெறுகிறது. 89 செ.மீ. மழை பெய்ய வேண்டும். ஒரு மாதம் வெறுமையில் போய்விட, பல மாநிலங்கள் வறட்சியில் தவிக்கின்றன. மழை பொய்த்ததால் காவிரியில் தண்ணீர் வருவது நின்றுவிட, குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணை திறக்கப்படவில்லை. ஒகேனக்கல்லே வற்றும் அளவுக்கு பற்றாக்குறை. சாரல்கூட குறைந்து விட்டிருக்க, இரண்டாவது கோடை போல கொளுத்துகிறது வெயில்!

பருவ மழை லேட்டாவதற்கு சீனாவைத்தான் காரணம் காட்டுகிறார்கள் வானிலை ஆராய்ச்சி மைய அதிகாரிகள். ‘‘தென் சீனக் கடலிலும் பசிபிக் பெருங்கடலிலும் வழக்கமாக ஜூன் மாதத்தில் ஒன்று அல்லது இரண்டு சூறாவளிகள் உருவாவது உண்டு. இந்த ஆண்டு நான்கு சூறாவளிகள் அடுத்தடுத்து உருவாயின. இந்தியாவில் பருவ மழையைப் பொழியவைக்கும் காற்றழுத்த மண்டலத்தை இவை இழுத்துச் சென்றுவிட்டன. இப்படி இழுத்துச் செல்லப்பட்ட சக்தியால்தான் அசாமில் வரலாறு காணாத வெள்ளம் வந்தது. அவ்வளவும் கேரளா, கர்நாடகத்தில் பெய்து தமிழகத்துக்கு வந்திருக்க வேண்டிய மழை’’ என்கிறார்கள் அவர்கள்.

நம் ஊரைவிட வட இந்திய மாநிலங்களில் அதிகம் தவிக்கிறார்கள். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல வட இந்தியா தவித்தபோது, கரும்பு விளைச்சல் தடாலடியாகக் குறைந்தது. வேறு வழியின்றி சர்க்கரையை நாம் இறக்குமதி செய்தோம். உலக மார்க்கெட்டில் சர்க்கரை விலை தறிகெட்டு உயர அது காரணமானது. இன்றைய நிலையில் கிடங்குகளில் கோதுமை தேவைக்கு அதிகமாக இருப்பதால், ஏற்றுமதி செய்துகொண்டிருக்கிறோம். கடந்த சில ஆண்டுகளாகவே அரிசி, கோதுமை நமக்குத் தேவைக்கு அதிகமாகவே விளைகிறது. அதனால் உணவுப் பஞ்சம் குறித்து கவலை வந்ததில்லை. இந்த ஆண்டு அரிசி விலையேற்றம் முதல் அபாய மணியை அடித்திருக்கிறது.

ஆனாலும், ‘‘ஜூலை மூன்றாம் வாரத்தில் மழை வந்துவிடும். இதுபோல் முன்புகூட பலமுறை நிகழ்ந்திருக்கிறது. நடவு தள்ளிப் போகலாம். கைவிடும் சூழ்நிலை வராது’’ என்றே நம்பிக்கை தந்துகொண்டிருக்கிறார்கள் ரமணன்கள். நாமும் நம்புவோம்!
- எஸ்.உமாபதி