கமர்ஷியல் சினிமா எடுக்கறது கஷ்டம்!





இயக்குனர் சங்கத் தேர்தல், ஃபெப்சி தொழிலாளர் போராட்டம் என அமீர் போராளி அவதாரம் எடுக்க, இயக்குனர் அமீரைத் தேடவேண்டிய சூழ்நிலை. இப்போது ஃபெப்சி யின் தலைவர் என்ற புதிய பொறுப்பை தூக்கிச் சுமக்கவேண்டிய சூழலில், இன்னொரு பக்கம் பட வேலைகளிலும் பரபரப்பு காட்டத் தொடங்கிவிட்டார். ‘ஜெயம்’ ரவியை வைத்து ‘ஆதிபகவன்’ படத்தைத் தொடங்கிய அமீர், இரண்டு வருடங்களாக அதுபற்றிப் பேசவில்லை. க்ளைமாக்ஸ் காட்சிக்காக புறப்பட்டுக்கொண்டிருந்த வேளையிலும் நம்மிடம் உரையாடினார்.
படம் லேட்டானதுக்கு பல காரணங்கள் சொல்றாங்களே?



‘‘95 சதவீத வேலைகள் முடிந்துவிட்டது. ஒரு க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சியை இப்போது படமாக்குகிறோம். அத்துடன் படப்பிடிப்பு முடிகிறது. படத்தின் தாமதத்திற்கு நான் காரணமல்ல; யார் காரணம் என்று அவரவர்களின் மனசாட்சிக்குத் தெரியும். இயக்குனர்கள் சங்க தேர்தல், ஃபெப்சி பிரச்னைன்னு தாமதமான நேரத்தில், கதாநாயகி நீது சந்திரா வேறொரு படத்திற்குப் போய்விட்டார். ‘ஆதிபகவன்’ படத்தை முடிக்காமல் நான் வேறு படத்திற்குப் போனேனா? இது காலத்தின் கட்டாயம். இந்தப் படத்தை எப்படியாவது நிறுத்தவேண்டும் என்ற எண்ணம் சிலருக்கு இருந்தது. தயாரிப்பாளர் என் மீது வைத்திருந்த நம்பிக்கையால் அது நடக்கவில்லை. இறைவன் அருளால் சதிகள் முறியடிக்கப்பட்டு, ‘ஆதிபகவன்’ வெளிவரப் போகிறான்.

தமிழ் சினிமாவில் பலமுறை பார்த்துப் பழகிய கதைதான் என்றாலும் அதனை புதிய களத்தில் சொல்லியிருக்கிறேன். இது முழுக்க முழுக்க கமர்ஷியல் ஃபிளேவரில் ரசிகர்களுக்கான படமாக இருக்கும். யதார்த்தத்திலிருந்து விலகி நின்று ஒரு சினிமா பண்ணியிருக்கிறேன். என்னைப் பொறுத்தவரை யதார்த்த சினிமா எடுப்பது எளிது; கமர்ஷியல்தான் கஷ்டம். அதை சரியா டைம் எடுத்து செய்யணும். தாமதத்திற்கு இதுவும் ஒரு காரணம்.



படம் வந்தபிறகு, ‘என்ன அமீர்... நீங்க போயி இந்தமாதிரி படம் எடுக்கலாமா’ன்னு கேட்கக்கூடாது. இங்கே ஒவ்வொரு இயக்குனருக்கும் ஒரு முத்திரை குத்தி வச்சிருக்காங்க. அது தப்பு! ஒரு இயக்குனர் எல்லாவிதமான கதைகளையும் எடுக்க வேண்டும். நான் நல்ல சமையல்காரன். புது வகை உணவு செய்தால் அதை சாப்பிட்டுப் பார்த்து டேஸ்ட் எப்படி இருக்குன்னு சொல்லணும். அதை விட்டுட்டு, ‘எப்பவுமே செய்யற பிரியாணியை செய்துகொடுங்க’ன்னு கேட்கக்கூடாது...’’

‘ஜெயம்’ ரவிக்கு இரட்டை வேடம்னு நியூஸ் வந்திட்டிருக்கே?
‘‘இரட்டை வேடமெல்லாம் இல்லை. சி.பி.ஐ ஆபீஸர் கேரக்டரில் ஒரு ‘ஜெயம்’ ரவிதான் படத்தில். சி.பி.ஐ ஆபீஸர் என்பதால் பல கெட்டப்புகள் இருக்கிறது; அவ்வளவுதான். ஆந்திராவில் தொடங்கி, பாங்காக்கில் தொடர்ந்து, மும்பையில் மையம் கொண்டு, கோவாவில் முடிகிற கதை. ஜேம்ஸ்பாண்ட் படம் மாதிரி பிரமாண்டமா இருக்கும்னு சொல்லமுடியாது. ஆனால் ஆங்கிலப் படம் பார்க்கிற உணர்வை ஏற்படுத்தும் என்பதற்கு நான் கியாரண்டி. படத்தில் காமெடியனும் இல்லை; காமெடியும் இல்லை. காமெடி இல்லாமலும் ஜெயிக்க முடியும் என்பதற்கு பல படங்களை உதாரணமா சொல்லலாம். அந்த லிஸ்ட்டில் ‘ஆதிபகவனு’ம் இருக்கும். ‘அமீர் படத்துக்குப் போறோம்... உணர்வுள்ள கருத்துகள் நிறைந்த படமா இருக்கும்’ என்று யாரும் நம்பி வரவேண்டாம் என்பது எனது அன்பு வேண்டுகோள்.



மதுரையில் காலேஜ் படிக்கிற சமயம் 30க்கு 40 சைஸில் பிட் நோட்டீஸ் மாதிரி போட்டோவே இல்லாத சினிமா போஸ்டர்களை அடித்து ஒட்டுவார்கள். ‘படிக்காத மேதை’ன்னா குடும்பச் சித்திரம், ‘குடியிருந்த கோயில்’னா ஆடல் பாடல்கள் நிறைந்த பொழுதுபோக்குச் சித்திரம், சுருளிராஜன் படம்னா நகைச்சுவைக் காட்சிகள் நிறைந்த சித்திரம் என்று விளம்பரப்படுத்துவார்கள். அந்த வகையில் ஆடல், பாடல், அதிரடி சண்டைக் காட்சிகள் நிறைந்த சித்திரம்தான் ‘ஆதிபகவன்’. 20 வருடங்களுக்கு முன்புவரை செகண்ட் ரிலீஸ், ஷிப்டிங் என்று சினிமா திருவிழா கொண்டாட்டத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தது. அந்த மாதிரி நாட்கள் தொலைஞ்சு போச்சேன்னு ஏங்கின நேரத்தில் ‘கர்ணன்’ ரிலீசாகி சந்தோஷத்தை கொடுத்திருக்கு. புதுசா வருகிற படங்களும் செகண்ட் ரிலீஸ், ஷிப்டிங்னு கொண்டாட்டத்தை தரணும்ங்கிறதுதான் எனது ஆசை. அந்த வகை படமா ‘ஆதிபகவன்’ இருக்கும்.”

நடிகர் அமீர்?
‘‘ஹீரோயினை கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்து ஆடும் ஹீரோ வேஷம் எனக்கு வேணாம். அதை குடும்பம், உறவுகள் ஒத்துக்காது. ‘யுத்தம் செய்’ படத்தில் ஒரு பாட்டுக்கு ஆடி, அதற்காக நிறைய விமர்சனங்களை சந்தித்து விட்டேன். நடித்தால் ஆக்ஷன் கலந்த நல்ல கதையில் நடிப்பது என்று இருந்த சமயம், வி.இசட்.துரை இந்தியில் வெளியான ‘கேன்சர்’ படத்தை ரீமேக்குவதாக சொன்னார். நானும் பரத்தும் நடிப்பதாக முடிவாகி, போட்டோ ஷூட்டெல்லாம் எடுத்து அப்படியே நின்று போனது. அதன்பிறகு ‘அன்னக்கொடியும் கொடி வீரனும்’. ஃபெப்சி பிரச்னையில் பாரதிராஜா சாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அதிலிருந்தும் நீக்கப்பட்டேன்.

‘ஆதிபகவனை’ முடிச்சிட்டு ‘ஜிகாத்’ படத்தில் நடிக்க திட்டமிட்டிருந்தேன். இந்தியாவின் முக்கிய பிரச்னையாக இஸ்லாமிய தீவிரவாதம் சித்தரிக்கப்படுகிறது. இஸ்லாமியர்களை தீவிரவாதியா காட்சிப்படுத்தற போக்கு இங்க இருக்கு. அதுபற்றி நேர்மையா அலசும் படம்தான் ‘ஜிகாத்’. ‘நீங்கள் ஒரு இஸ்லாமியனாக இருந்துகொண்டு அந்தப் படத்தை எடுப்பதால் பிரச்னை வராதா?’ என்று கேட்கலாம். நான் அதுபற்றி சொல்லாமல் வேறு யார் சொல்வது? இதற்கிடையே கரு.பழனியப்பன் சொன்ன ஒரு கதை பிடித்துப்போய், அதிலும் நடிக்கிறேன். கிராமத்துப் பின்னணியில் இனிமையான ஒரு குடும்ப டிராமா. ராஜ்கிரண் சார் எனக்கு அப்பாவா நடிக்கிறார்.’’



ஃபெப்சி தலைவர் அமீர் என்ன சொல்கிறார்?
‘‘நல்ல படங்களாக கொடுத்துக்கொண்டிருந்த நீங்கள் திடீர்னு டிராக் மாறிட்டீங்களே என்று நண்பர்கள் பலரும் கேட்டார்கள். சாதாரண அமீரை பெரிய ஆளாக்கி அடையாளம் காட்டியதே இந்த சினிமாதான். அதுக்கு நான் ஏதாவது திருப்பிச் செய்ய நினைக்கிறேன். சினிமாவில் ஓய்வுபெற்ற பிறகு நான் இந்தப் பதவிக்கு வரவில்லை; பீக்ல இருக்கும்போதே வந்திருக்கிறேன். இது பணம் புழங்கும் தொழில் என்றாலும் தொழிலாளர்களின் வாழ்க்கை சராசரிக்கும் கீழேதான் இருக்கிறது. முதலாளி இல்லாமல் தொழிலாளி இல்லை. அதே நேரத்தில் சரியான ஊதியம் வழங்கவேண்டும். இந்த விஷயத்தில் தயாரிப்பாளர்களுக்கு சாதகமாகவும், தொழிலாளர்களுக்கு ஆதரவாகவும்தான் நிற்கிறேன். நாளைக்கே எல்லாப்பிரச்னைகளையும் தீர்த்துவிடுவேன் என்று சொல்லமாட்டேன். படிப்படியாக தொழிலாளர்களுக்கு நல்லது செய்ய வேண்டும்
என்பதுதான் என் ஆசை!’’
- அமலன்