தமிழகத்தில் அதிகரிக்கும் ஹானஸ்ட் கில்லிங்!





உலகின் மிக ஆபத்தான விஷயமாக மாறியிருக்கிறது சமூக சேவை. ஏழைகளின் பக்கம் நின்று போராடி நியாயம் பெற்றுத் தருவார் ஹீரோ. கொதித்தெழும் வில்லன், ஹீரோவை துவம்சம் பண்ண அடியாட்களை அனுப்புவார். தனியாக செல்லும் ஹீரோவை அரிவாள், கம்போடு சுற்றி வளைத்துத் தாக்குவார்கள் வில்லனின் அடியாட்கள். ஆக்ஷன் சினிமாக்களில் தவறாமல் இடம்பெறும் காட்சி இது. இப்போது இந்தக் காட்சிகள் நம் தெருக்களிலேயே நடக்கின்றன.

மணல் கடத்தலைத் தடுப்பவர்கள் லாரி ஏற்றிக் கொல்லப்படுகிறார்கள். நில ஆக்கிரமிப்பை எதிர்ப்பவர்கள் வீடு புகுந்து வெட்டப்படுகிறார்கள். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி நீதி கேட்பவர்கள் அநீதியான வழக்குகளில் சிறைப்படுகிறார்கள். பொதுப் பிரச்னைக்காக குரல் கொடுப்பவர்கள் காணாமல் போகிறார்கள்; அல்லது எங்காவது அடையாளம் தெரியாத சடலமாகக் கண்டெடுக்கப்படுகிறார்கள். லேட்டஸ்ட் உதாரணம், திருவண்ணாமலை ராஜ்மோகன். நில ஆக்கிரமிப்பு, மணல் கடத்தலுக்கு எதிராக தகவல் உரிமைச் சட்டத்தின் மூலம் போராடி நியாயம் கேட்ட ராஜ்மோகனை ரவுடிகளின் அரிவாள்கள் கொத்திக் குதறி விட்டன. அதிகாலையில் தனியாக டூவீலரில் வந்தவரை, காத்திருந்த கூலிப்படையினர் கொன்றிருக்கிறார்கள். இதுபோன்ற கொலைகளை ‘ஹானஸ்ட் கில்லிங்’ என்று வரிசைப்படுத்துகிறது போலீஸ்.

இந்த அச்சுறுத்தலும், அடாவடி நடவடிக்கைகளும், சமூகப் பிரச்னைகளுக்காக போராடுபவர்கள் மத்தியில் பெரும் பீதியைக் கிளப்பியுள்ளது. ‘‘உங்கள் குடும்பம் உண்டு; நீங்கள் உண்டு என்று இருங்கள்... பொதுப் பிரச்னைகள் பற்றிப் பேசினால் இதுதான் கதி’ என்பதே இதுபோன்ற சம்பவங்கள் மூலம் சமூக விரோதிகள் சொல்ல வரும் செய்தி’’ என்கிறார் சுற்றுச்சூழல் தொடர்பான பல்வேறு பிரச்னைகளை முன்னெடுத்துப் போராடி வரும் சமூக ஆர்வலர் நித்யானந்த் ஜெயராமன். ‘‘தகவல் உரிமைச்சட்டம்தான் பொதுப் பிரச்னைகளுக்காக குரல் கொடுக்கிற தைரியத்தை மக்களிடம் வளர்த்திருக்கிறது. மிடில் கிளாஸ் மனிதர்கள் ஏராளமானோர் கேள்விகளைத் தொடுத்து அதிகாரிகளையும், சமூக விரோதிகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார்கள். முறைகேடான தொழில்கள் மூலம் பெரும் லாபமடையும் சிலர், அதற்கு இடைஞ்சல் வருகிறபோது எந்த லெவலுக்கும் இறங்குகிறார்கள். குறிப்பாக நில ஆக்கிரமிப்பு, மணல் கொள்ளை, கான்ட்ராக்ட் தொடர்பான முறைகேடுகளைக் கண்டிக்கிறபோது கொலை நிகழ்கிறது. மணல்கொள்ளையைத் தடுத்த பல பஞ்சாயத்துத் தலைவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளார்கள். சமூக சேவகர்கள் மர்மமான முறையில் இறந்துள்ளார்கள். இதுபற்றிய பல வழக்குகள் இன்னும் முடிந்தபாடில்லை. காரணம், பலமான நெட்வொர்க்.

பல மட்டங்களில் இந்த நெட்வொர்க் நீண்டு செல்கிறது. அரசியல் பின்புலம் உள்ளவர்கள் மட்டுமே இதுபோன்ற நிழலான வேலைகளில் ஈடுபடுகிறார்கள் என்றில்லை. சில நிறுவனங்களே கூட இதுபோன்ற சட்டவிரோதமான வேலைகளைச் செய்கின்றன. மேட்டூரில் ஒரு குடியிருப்புப் பகுதியில் சட்டத்துக்குப் புறம்பாக நிலக்கரிக் கிடங்கை அமைத்துள்ளது ஒரு நிறுவனம். அதனால் அப்பகுதியில் வசிப்பவர்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. இதை அகற்றுமாறு மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தினோம். ‘சட்டவிரோதமாக மக்களைத் தூண்டி விடுகிறார்கள்’ என்று உள்ளூர் அரசியல்வாதிகளைத் தூண்டிவிட்டு எங்கள் மீது போலீசில் புகார் கொடுக்கிறார்கள். ஏகப்பட்ட மிரட்டல்கள் வேறு. ‘ஜாக்கிரதையா இருங்க’ என்று அதிகாரிகளே எச்சரிக்கிறார்கள்.

கல்பாக்கம் அணு உலைக்கு எதிராக பல ஆண்டுகளாக அறவழியில் போராடி வருபவர் டாக்டர் புகழேந்தி. ஒரு இன்ஸ்பெக்டர் அவரை அழைத்து, ‘என்கவுன்ட்டரில் போட்டுத் தள்ளிவிடுவேன்’ என்று மிரட்டியுள்ளார். இப்படி அதிகாரத்தைக் கேள்வி கேட்பது, முறைகேடுகளைக் கண்டிப்பது எல்லாம் அபாயகரமான விஷயமாகத்தான் இருக்கிறது. நமக்கும் பெரிய பின்புலம் தேவைப்படுகிறது. பொதுமக்களின் மனோபாவமும் இதற்கு முக்கியக் காரணம். தங்களின் நலனுக்காகப் போராடுகிற ஒருவனுக்கு ஆபத்து வரும்போது அவன் பின்னால் நிற்க எல்லோருமே அஞ்சுகிறார்கள்.

நேர்மையாக செயல்பட விரும்பும் அதிகாரிகளுக்குக் கூட இங்கே பாதுகாப்பில்லை. அதனால் பல நல்ல அதிகாரிகள், ‘கெட்டது செய்யாமல் இருந்தால் போதும்’ என்று நினைக்கிறார்கள். நம் நாட்டில் குற்றம் செய்யாதவர்களை உள்ளே போடுவதும் சுலபம்; குற்றம் செய்பவர்கள் வெளியே வருவதும் சுலபம். நீதிக் கட்டமைப்பில் உள்ள இந்த ஓட்டைதான் எல்லாவற்றுக்கும் காரணம்...’’ என்கிறார் நித்யானந்த்.

பல்வேறு இன்னல்களுக்கு இடையில் எக்ஸ்னோரா அமைப்பைக் கட்டமைத்து உருவாக்கிய நிர்மலும் அதிர்ச்சியான மனநிலையோடு இப்பிரச்னை பற்றிப் பேசுகிறார். ‘‘பொதுப் பிரச்னைகளுக்காகப் போராடும்போது, தனி நபரை முன்னிறுத்தாமல் அமைப்பு ரீதியாகச் செயல்பட வேண்டும். அதேபோல பொதுப் பிரச்னைகளையே இலக்காக்கி போராட வேண்டும். தனி நபர்கள் சார்ந்த பிரச்னைகளை எடுப்பதற்கு முன் மக்கள் செல்வாக்கை உருவாக்கிக்கொள்ள வேண்டும். தொடக்கத்தில் ஏகப்பட்ட மிரட்டல்களை சந்தித்தவன் நான். நீர்நிலை ஆக்கிரமிப்பு தொடர்பான பிரச்னைகளில் என் வீட்டைத் தாக்க முயற்சி நடந்தது. நான் தலைமறைவாகி விட்டதாக மீடியாக்களில் எழுத வைத்தார்கள். எல்லாப் பிரச்னைகளையும் அமைப்பை முன்வைத்து எதிர்கொண்டேன். இதுபோன்ற விவகாரங்களில் மக்களின் நிலைப்பாடுதான் புரியாத புதிராக இருக்கிறது. யாருக்காகப் போராடுகிறோமோ, பிரச்னை வரும்போது அவர்கள் ஒதுங்கிக் கொள்கிறார்கள். சமூக சேவகர்கள் யாரும் சூப்பர்மேன்கள் கிடையாது. உடல்பலத்தை நம்பி அவர்கள் போராட்டக் களத்தில் இல்லை. அவர்களுக்கு பலமே மக்கள் ஆதரவுதான். இதைப் புரிந்துகொள்ள வேண்டும்’’ என்கிறார் நிர்மல்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், ‘‘சமூக விரோத சக்திகள் கொலை செய்யும் அளவுக்குத் தலையெடுக்க, கிரிமினல் அரசியலே காரணம்’’ என்று குற்றம் சாட்டுகிறார். ‘‘பொதுச் சொத்தைக் கொள்ளையடிப்பது தங்களது பிறப்புரிமை என்று சிலர் நினைக்கிறார்கள். அரசியலே அவர்களின் பின்புலமாக இருக்கிறது. திருவண்ணாமலை ராஜ்மோகன் கொலைக்குக் காரணமான ஒரு ஆளுங்கட்சி அரசியல் பிரமுகரை எங்கள் கட்சியின் மாவட்டச் செயலாளரும் எதிர்த்துக் குரல் கொடுத்திருக்கிறார். அவர்மீதும் கண்மூடித்தனமான தாக்குதல் நடந்தது. ராஜ்மோகன் அதையும் கண்டித்துள்ளார். அந்த நபர்மீது புகாரும் தரப்பட்டுள்ளது. காவல்துறையின் மெத்தனமே பிரச்னைகளுக்குக் காரணம். தகவல் உரிமைச் சட்டம் வந்ததே தவறுகளைத் தடுக்கவும், தட்டிக் கேட்கவும்தான். ஆனால் அப்படிக் கேட்பவர்களுக்குப் பாதுகாப்பில்லை. கௌரவக் கொலைக்கு எதிராக சட்டம் கொண்டு வருவதைப் போல இந்த ‘ஹானஸ்ட் கில்லிங்’ கொடுமைக்கு எதிராகவும் சட்டம் கொண்டு வரவேண்டும். தமிழகத்தில் போராட்ட உணர்வுக்கு மதிப்பில்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. இதுபோன்ற மிரட்டல்கள் மூலம் முற்றிலுமாக அந்த உணர்வை மழுங்கடிக்கப் பார்க்கிறார்கள்...’’ என்று

குமுறுகிறார் ராமகிருஷ்ணன்.
‘எது நடந்தால் நமக்கென்ன... நம் வேலை முடிந்தால் சரி’ என்று நினைப்பவர்களுக்காக மார்ட்டின் நியமுல்லர் எழுதி நவஜீவன் மொழிபெயர்த்த கவிதை.

ஜெர்மனியில் அன்றொரு நாள்
கம்யூனிஸ்டுகள் மீது நாஜிக்கள்
    பாய்ந்தார்கள்
எனக்கென்ன என்றிருந்தேன்
நான் கம்யூனிஸ்ட் அல்ல.
யூதர்கள் மேல் பாய்ந்தார்கள்
எனக்கென்ன என்றிருந்தேன்
நான் யூதனல்ல
தொழிற்சங்கவாதிகள் மேல்
    பாய்ந்தார்கள்
எனக்கென்ன என்றிருந்தேன்
நான் தொழிற்சங்கவாதியல்ல..
.... இறுதியிலே பாய்ந்தார்கள்
    என்மீது
ஓடிவந்து காப்பாற்ற
    யாருமில்லை அப்போது..!
- வெ.நீலகண்டன்