குழந்தைக்காக...

‘‘சுப்பிரமணி, நம்ம படத்துக்கு பர்த் டே பார்ட்டி ஷூட்டிங் எங்க போய்கிட்டு இருக்கு?’’
- தயாரிப்பாளர் ராஜராஜன் அலைபேசியில் மேனேஜரிடம் கேட்டார். கார் விரைந்து கொண்டிருந்தது.
‘‘வளசரவாக்கம் ரமா ஹவுஸ் ஸார்...’’ ‘‘டைரக்டர் கேட்டதை எல்லாம் ஏற்பாடு பண்ணிக் கொடுத்துட்டீங்களா?’’
‘‘கொடுத்துட்டேன் சார்... சீன்படி க்ரவுடுக்காக ஆதரவற்றோர் இல்லத்துல இருந்து இருநூறு குழந்தைகளும் வந்திருக்காங்க.’’
‘‘தெரியும். ஜாக்கிரதையா பார்த்துக்குங்க...’’ என்று அலைபேசியை அணைத்த ராஜராஜன், பத்தாவது நிமிடத்தில் படப்பிடிப்பு தளத்தில் இருந்தார்.
பதறியபடி ஓடி வந்து வரவேற்றார் சுப்பிரமணி. அவர் கண்களில் ஆச்சரியம் டன் கணக்கில்! ‘இதுவரை பத்து படம் தயாரித்திருக்கும் ராஜராஜன், ஒருமுறை கூட எந்த ஷூட்டிங் ஸ்பாட்டுக்கும் வந்ததில்லை.
இப்போது ஏன்?’ ‘‘பர்த் டே கேக் ரெடியா..?’’ ‘‘ரெடி சார்... நாலடி உயரத்துக்கு பிளாஸ்டர் ஆஃப் பாரீஸ்ல ஆர்ட் டைரக்டர் டம்மி கேக் செஞ்சிருக்காரு... கலர்ஃபுல்லா சூப்பரா இருக்கு சார்...’’
‘‘தெரியுமே... இப்படி ஏதாச்சும் பண்ணுவீங்கன்னு. எப்பவுமே சினிமாவையே யோசிக்கக் கூடாது சுப்பிரமணி. இவ்வளவு குழந்தைகள் இருக்கே... அதெல்லாம் ஆசையா கேக்கை பார்க்குமேன்னும் யோசிக்கணும்’’ என்றபடி அவர் கார் கதவைத் திறக்க, உள்ளே பிரமாண்டமான நிஜ கேக் அமர்ந்திருந்தது.
‘‘ஷாட் முடிஞ்ச உடனே கேக்கை குழந்தைகளுக்குக் கொடுங்க’’ என்ற ராஜராஜனை பிரமிப்பாய் பார்த்தார் சுப்ரமணி.
|