சென்டிமென்ட்!

டைரக்டர் உலகநாதன் தன்னை ஒரு பகுத்தறிவுவாதியாக வெளிப்படுத்த எப்போதும் தயங்க மாட்டார்.
‘‘ஆமாய்யா... என்னோட இந்த பத்தாவது படத்தையும் சரியான எமகண்டத்துல முதல் ஷாட் வச்சுத்தான் ஆரம்பிக்கப் போறேன். என்ன நடக்குதுன்னு பாத்துடலாம்’’ - தன் ஒன்பது படங்களும் சூப்பர் டூப்பர் வெற்றியடைந்த உறுதியில் அவர் உறுமிக்கொண்டிருந்தார்.
‘‘சார்... நம்ம ப்ரொடியூசர் ரொம்ப பக்திமான். சிம்பிளா ஒரு கற்பூரமாவது காட்டலாமான்னு கேக்கறாரு’’ - தயங்கியபடி கேட்டார் தயாரிப்பு நிர்வாகி.
‘‘யோவ்... வேணும்னா அவரு வீட்ல தனியா ஏதாவது பண்ணிக்கட்டும். ஷூட்டிங் ஸ்பாட்ல பூஜை அது, இதுன்னு வந்தா டென்ஷன் ஆகிடுவேன். நான் சொன்னது சொன்னதுதான்’’ - உலகநாதனின் பிடிவாதத்தால் தயாரிப்பாளர் விட்டுக் கொடுத்தார்.
சரியான எமகண்டத்தில் ‘உறவுகள்... உண்மைகள்’ படத்தின் முதல் ஷாட் எடுக்கப்பட்டது.
அங்கு விஐபிக்கள் குழுமியிருந்தனர். ‘‘ஆனாலும் உலகநாதனுக்கு தைரியம்தாம்பா. தனக்கு சென்டிமென்ட் சுத்தமா பிடிக்காதுன்னு சும்மா சொல்லிக்கிட்டு இருக்காம, செயல்லயும் காட்டறாருய்யா’’
என்றார் ஒரு விஐபி. ‘‘இவருக்கு சென்டிமென்ட் இல்லன்னு யார் சொன்னா?’’ என்றார் இன்னொரு விஐபி.
‘‘இவருக்கு எதுல சென்டிமென்ட் இருக்கு... சொல்லுங்க!’’ ஆர்வமானார் முதலாமவர்.
‘‘எமகண்டத்துலதான். 9 படம் ஹிட் ஆனதால வேற எந்த நாள்லயும் ஆரம்பிக்க மனசு வரல பாரு!’’ என்று பதில் வந்தது.
|