பானை ஓவியத்தில் பணம் கொட்டும்!





நட்சத்திர ஓட்டல்கள், கார்ப்பரேட் அலுவலகங்கள், பிரபலங்களின் வீடுகளில் வரவேற்பறையை அலங்கரிக்கும் அழகழகான பானைகளைப் பார்த்திருப்பீர்கள். வெறும் பானையாகவோ அல்லது பூங்கொத்து அலங்காரங்களுடனோ அழகு சேர்க்கும் அந்தப் பானைகளுக்கு ‘டெரகோட்டா பாட் பெயின்டிங்’ என்று பெயர்! டேபிளின் மேல் வைக்கிற குட்டி பானை முதல், ஆளுயர பானை வரை விதம்விதமான அளவுகளில் டெரகோட்டா பானை ஓவியங்கள் செய்வதில் நிபுணி சென்னையைச் சேர்ந்த ராதா. கற்றுக் கொள்ள ஆர்வமுள்ளோருக்கு வழிகளைக் காட்டுகிறார் அவர்.

என்னென்ன தேவை? முதலீடு?
‘‘டெரகோட்டா பானைகள் (சாதாரண பானைகள் விற்பவர்களிடமே கிடைக்கும்), செராமிக் பவுடர், ஃபேப்ரிக் பெயின்ட், ஆயில் பெயின்ட், வார்னிஷ், பிரஷ், பசை.... பானை 30 ரூபாயிலிருந்து கிடைக்கும். செராமிக் பவுடர் 1 கிலோ 40 ரூபாய். பானைகளின் எண்ணிக்கையைப் பொறுத்து, மத்த பொருள்களுக்கும் சேர்த்து ஆயிரம் ரூபாய் முதலீடு போதுமானது.’’

எத்தனை மாடல்? என்ன ஸ்பெஷல்?
‘‘பானையின் வடிவத்தைப் பொறுத்தது மாடல்... வட்டம், நீளம், கிண்ண வடிவம், கூஜா வடிவம் என விதம்விதமான வடிவங்கள்ல பானைகள் கிடைக்கும். தேவைக்கும், இட வசதிக்கும் ஏத்தபடி டிசைன் பண்ணிக்கலாம். பூ டிசைன்தான் ரொம்பப் பிரபலம். பழக்கொத்து, மரக்கிளையில பறவைகள் உட்கார்ந்திருக்கிற மாதிரியும் பண்ணலாம். பெயின்ட் பண்ணி, வார்னிஷ் அடிச்சிட்டா, எத்தனை வருஷமானாலும் பானையோட அழகு மாறாம, புதுசாவே இருக்கும்.’’

விற்பனை வாய்ப்பு? லாபம்?
‘‘நட்சத்திர ஓட்டல்கள், கார்ப்பரேட் அலுவலகங்கள், பார்ட்டி ஹால், வீடுகள்னு எல்லா இடங்கள்லயும் இதுக்கான தேவை இருக்கு. கிரகப்பிரவேசத்துக்கு பொருத்தமான அன்பளிப்பு. சின்ன சைஸ் பானைக்கான அடக்க விலை 150 ரூபாய் ஆகும். அதை 300 ரூபாய்க்கு விற்கலாம்.’’

பயிற்சி?
‘‘2 நாள் பயிற்சிக்குத் தேவையான பொருட்களோட சேர்த்துக் கட்டணம் 500 ரூபாய்.’’
- ஆர்.வைதேகி
படங்கள்: ஆர்.சந்திரசேகர்