எம்.ஜி.ஆர். நடிக்காத படம்!





‘‘அடடே... இந்த போட்டோ எங்கிட்டகூட இல்லையே! இதுல நாலு காப்பி கிடைக்குமா?’’ என உற்சாகமான பாடகர் பி.பி.ஸ்ரீநிவாஸ்,

உட்லண்ட்ஸ் ஓட்டலில் காபியை ஆர்டர் செய்துவிட்டு, தனது சங்கீத நினைவுகளில் மூழ்கினார்.

‘‘இந்த போட்டோவுல நான் தொப்பி போட்டிருக்கேன்; எம்.ஜி.ஆர் தொப்பி போடாம இருக்கார்... கவனிச்சீங்களா! இந்தப் படம் சென்னை மாவட்ட எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றம் சார்பாக நடந்த விழாவில் எடுக்கப்பட்டது. 

எம்.ஜி.ஆருக்காக நான் நான்கு பாடல்கள்தான் பாடியிருக்கேன். ‘பாசம்’ படத்தில் ‘பால்வண்ணம் பருவம் கண்டு...’, ‘திருடாதே’ படத்தில் ‘என்னருகே நீ இருந்தால்...’, ‘மன்னாதி மன்னன்’ படத்தில் ‘நீயோ நானோ யார் நிலவே...’, ‘காதல் வாகனம்’ படத்தில் ‘இங்கே வா இங்கே வா ஒரு ரகசியம்...’ ஆகிய அந்த நான்கு பாடல்களிலும் என்னோடு சேர்ந்து பாடியிருப்பவர் பி.சுசிலா.

ஒருமுறை விஜயா வாஹினி ஸ்டூடியோவுக்குச் சென்றேன். அப்போது ஒரு ஃபுளோருக்கு வெளியே நாற்காலியில் அமர்ந்து எதையோ படித்துக்கொண்டிருந்தார் எம்.ஜி.ஆர். தொந்தரவு செய்யக்கூடாது என்பதற்காக அவருக்கு வணக்கம் சொல்லிவிட்டு அந்த இடத்தைக் கடந்து சென்றேன். அப்போது எம்.ஜி.ஆர், ‘‘இங்கே வாங்க... உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்’’ என்று அழைத்தார்.
‘‘நம்மிடம் எம்.ஜி.ஆர் பேசுமளவிற்கு முக்கியமான விஷயம் என்ன இருக்கு?’’ என்ற கேள்வியுடன் அருகே சென்றேன். அப்போது எம்.ஜி.ஆர், ‘‘ரொம்ப நாளா ‘தேவதாஸ்’ படம் போல முழுக்க முழுக்க மியூசிக்கல் ஹிட்டா இருக்கிற ஒரு படத்தில நடிக்கணும்னு எனக்கு ஆசை இருக்கு. அப்படியொரு படம் அமையணும். அந்தப் படத்தில் எல்லா பாடல்களையும் எனக்காக நீங்க பாடணும்...’’ என்றார். நானும், ‘‘ரொம்ப சந்தோஷம்’’ என்று சொல்லி அவரிடமிருந்து விடை பெற்றேன்.

ஆனால் எம்.ஜி.ஆர் சொன்னதுபோல அப்படியொரு வாய்ப்பு அமையவில்லை. எனக்கு வயசாகியிருக்கலாம். ஆனால் புகழின் உச்சத்தில் இருந்தபோது எம்.ஜி.ஆர் என்னிடம் சொன்ன அந்த வார்த்தைகள் இன்றும் எனக்குள் இளமை குறையாமல்தான் இருக்கிறது!’’
- அமலன்
படம் உதவி: ஞானம்