தமிழால் வெல்ல முடியுமா ஐ.ஏ.எஸ்?





ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட பணிகளுக்கான யு.பி.எஸ்.சியின் தேர்வில் விருப்பப் பாடம் இருந்த இடத்தில் ‘திறனறிவுப் பாடம்’ வந்து உட்கார்ந்து கொண்டதை சென்ற இதழில் பார்த்தோம். புது விருந்தாளியான இந்த திறனறிவுப் பாடத்தையும் மற்ற தாள்களையும் பற்றி தன் வழிகாட்டுதலைத் தொடர்கிறார் சென்னை, சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமியின் இயக்குனர் சங்கர்...

‘‘திறனறிவுப் பாடத்தில் கணித அறிவையும் ஆங்கில அறிவையும் சோதிக்கும் கேள்விகள் இருக்கும். உதாரணமாக, ஒரு பத்தியைக் கொடுத்து, அதிலுள்ள தகவல்களைப் பற்றி கேள்விகள் கேட்டு பதில்களை சாய்ஸாக கொடுப்பார்கள். இது காம்ப்ரிஹென்ஷன் எனப்படும். அதே போல் ஆங்கில இலக்கணம், லாஜிக்கல் ரீசனிங் மற்றும் அனாலிடிக்கல் எபிலிட்டி எனப்படும் காரணம் அறிதல், பகுத்து ஆயும் திறன், மற்றும் அடிப்படை கணிதம் போன்றவற்றில் கேள்விகள் இருக்கும். இந்தத் தாளில் 80 கேள்விகள். ஒவ்வொரு கேள்விக்கும் இரண்டரை மதிப்பெண்கள். மொத்தம் 200 மதிப்பெண்கள்.

பொதுவாக இந்த சிவில் சர்வீஸ் தாள்கள் எல்லாமே ஆங்கிலம் மற்றும் இந்தியில் இருக்கும். இந்த பிரிலிமினரி தேர்வில் ‘நெகட்டிவ் மார்க்’ என்ற முறையும் பின்பற்றப்படுகிறது. அதாவது, ஒரு கேள்விக்கு தவறான விடையளித்திருந்தால் அந்தக் கேள்விக்கான மதிப்பெண்ணில் மூன்றில் இரண்டு பங்கு மதிப்பெண் உங்கள் மொத்த மதிப்பெண்ணில் இருந்து கழிக்கப்படும். ஆகவே, கொஞ்சம் உஷாராக இந்தத் தேர்வை அணுக வேண்டும்.  

அடுத்தது மெயின் தேர்வு. இதில் மொத்தம் ஒன்பது தாள்கள். எல்லாவற்றுக்குமே மூன்று மணி நேரம் கால அவகாசம். இவை எல்லாமே ‘டிஸ்கிரிப்டிவ் டைப்’ எனப்படும் விவரித்து எழுதும் தாள்கள். இதிலும் தேர்வாணையம் மாற்றம் கொண்டு வந்துள்ளது. முன்பெல்லாம் குறைந்த எண்ணிக்கை கேள்விகள் கேட்டு, ஒவ்வொரு கேள்விக்கும் அதிக மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. இதனால் ஒரு சில பாடங்களை படிக்காமல் சாய்ஸில் விட்டுவிடும் வசதி இருந்தது. ஆனால், தற்போது சிறு சிறு கேள்விகளாக நிறைய கேட்கப்படுகின்றன. ஆக, எல்லா பாடங்களிலிருந்தும் கேள்வி வரும். மெயின் தேர்வுக்கான ஒன்பது தாள்களில் முதல் நான்கு தாள்கள் நாம் தேர்ந்தெடுக்கும் விருப்பப்பாடத் தேர்வுகளே. மெயின் தாள் எழுதுவதற்காக விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யும்போதே அதில் கொடுக்கப்பட்டிருக்கும் 26 விருப்பப் பாடங்களில் இரண்டை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். ஒரு பாடத்தில் இரண்டு தாள்கள். இரண்டு விருப்பப் பாடத்துக்கும் நான்கு தாள்கள். ஒரு தாளுக்கு முந்நூறு மதிப்பெண்கள். ஆக மொத்தம் ஆயிரத்து இருநூறு மதிப்பெண்கள்.

ஐந்தாவது தாளாக கட்டுரை தாள் இருக்கும். இதில் குறைந்தது நான்கு அல்லது ஐந்து பொதுத் தலைப்புகள் கொடுத்திருப்பார்கள். ஏதாவது, ஒன்றில் நீண்ட கட்டுரை எழுத வேண்டும். இதற்கு இருநூறு மதிப்பெண்கள். மேற்கூறிய இந்த ஐந்து தாள்களிலுமே ஆங்கிலம் மற்றும் இந்தியில் கேள்விகள் கேட்கப்படும். நீங்கள் இந்திய அட்டவணையிலுள்ள எந்த மொழியிலும் இந்தக் கேள்விகளுக்கு பதில் எழுதலாம். ஆனால், மாநில மொழியை மட்டுமே நம்பி சிவில் சர்வீஸில் ஜெயிக்கக் கிளம்புவது பெரிய வெற்றியைக் கொடுக்காது. ஒரு காலத்தில் தமிழில் சிவில் சர்வீஸ் எழுதியவர்களும் ஜெயித்தார்கள். ஆனால். இன்று கடுமையான போட்டி இருக்கிறது. ஆகவே, ஆங்கிலத்தில் திறனை வளர்த்துக்கொண்டு பதில் அளிப்பதே போட்டியில் ஜெயிப்பதற்கான சுலப வழி.

இந்த ஐந்து தாள்களைத் தவிர பொது அறிவுப் பாடத்தில் இரண்டு தாள்களும் மொழிப் பாடத்தில் இரண்டு தாள்களும் இருக்கும். மெயின் தேர்வில் உள்ள பொது அறிவுத் தாள், பிரிலிமினரி தேர்வின் பொது அறிவுத் தாளிலிருந்து கொஞ்சம் வித்தியாசப்படும். இந்தத் தாளுக்காக தனி பாடத்திட்டம் ஒன்றையே ஆணையம் வெளியிட்டிருக்கிறது. இதில், 1. நவீன இந்தியாவின் வரலாறு மற்றும் இந்திய கலாசாரம். 2. இந்தியாவின் புவியியல். 3. இந்தியச் சட்டம். 4. இந்திய தேசத்தின் இன்றைய பிரச்னைகள் மற்றும் அதுதொடர்பான சமூகக் காரணங்கள் என்பவை தாள் ஒன்றுக்கான பாடத்திட்டமாகவும், தாள் இரண்டுக்கு அண்டை நாடுகளுடனான இந்தியாவின் உறவு என்ற தலைப்பும் கொடுக்கப்பட்டுள்ளது.

இனி, மொழித் தாள். இரண்டு மொழித்தாள்களில் ஒவ்வொன்றுக்கும் முந்நூறு மதிப்பெண்கள் வழங்குகிறார்கள் என்றாலும், இதுவும் பிரிலிமினரியைப் போலவே மொத்த மதிப்பெண்களில் சேராது. ஆனால் உங்களின் சிவில் சர்வீஸ் கனவுகளுக்கான ஒரு அட்மிஷன் கார்டு இதுதான். எப்படி நுழைவுத் தேர்வில் ஒரு கட் ஆஃப் மதிப்பெண்ணை வைத்திருக்கிறார்களோ, அதேபோல இதிலும் ஒரு கட் ஆஃப் மதிப்பெண் இருக்கும். இந்த கட் ஆஃப் மதிப்பெண்ணை எட்டினால்தான் மெயின் தாள்களான மற்ற ஏழு தாள்களையும் திருத்துவார்கள். இரண்டு மொழித் தாள்களில் ஒன்று ஆங்கிலம். இரண்டாவதாக, இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட இருபத்தி இரண்டு மொழிகளில் ஒன்றைத் தேர்வு செய்து எழுத வேண்டும். இதில் தமிழும் உண்டு. இந்தத் தாள்களின் பாடத்திட்டங்கள் பிளஸ் 2 தரத்தில் இருக்கும்.

பிரிலிமினரியில் ஜெயித்தவர்கள் மெயின் தேர்வை எழுதுவதற்கான விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யும்போது, அந்த விண்ணப்பத்தில் எழுதப்போகும் இரண்டு விருப்பப்பாடங்கள், இருபத்தி ஐந்து சர்வீஸில் எந்த சர்வீஸுக்கு விருப்பப்படுகிறீர்கள், வேலை கிடைத்தால் எந்த மாநிலத்தில் சேர விரும்புவீர்கள் போன்ற கேள்விகள் இருக்கும். ஐ.ஏ.எஸ், ஐ.எஃப்.எஸ் தவிர மற்ற சர்வீஸ்களில் வேலை கிடைத்தால், வேலையை ராஜினாமா செய்யாமலேயே மறுபடியும் ஐ.ஏ.எஸ்ஸு.க்கு முயற்சிக்கலாம். ஆனால் ஐ.ஏ.எஸ் வேலை கிடைத்து, விருப்பப்பட்ட மாநிலங்களில் வேலை கிடைக்கவில்லை என்றால், வேலையில் இருந்துகொண்டே விருப்பப்பட்ட மாநிலத்தில் வேலை கிடைப்பதற்காக மீண்டும் தேர்வு எழுத முடியாது. ராஜினாமா செய்த பின்பே தேர்வு எழுத முடியும்.
நிறைவாக நேர்முகத் தேர்வு. இங்கு பாடம் தொடர்பான கேள்விகள் கேட்கப்பட மாட்டாது. உங்களின் ஆளுமைத் திறனை சோதிப்பதற்கான தேர்வே இது. நேர்முகத் தேர்வுக்கு முந்நூறு மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. நேர்முகத் தேர்வில் மாநில மொழிகளில் பதிலளிக்கலாம் என்ற சலுகையை ஆணையம் இந்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்தியுள்ளது. இருந்தாலும் சிவில் சர்வீஸ் தேர்வுகளில் அதிகம் ஜெயிப்பவர்கள் ஆங்கில அறிவை வளர்த்துக் கொண்டவர்களாகவே இருப்பது யோசிக்க வேண்டிய விஷயம்!’’
- டி.ரஞ்சித்