மனசு





கடந்த ஒரு வாரமாக உமா அசைவத்தில் விதம்விதமாக சமைத்தாள். அயிரை மீன் குழம்பும், சுறா புட்டும் தன் மனைவி சூப்பராய் செய்வாள் என்பதை ராகவன் அறிந்துகொண்டதே இப்போதுதான். இதற்கெல்லாம் காரணம், உமாவின் அண்ணன் கோபால் மேட்டூரிலிருந்து குடும்பத்தோடு வந்திருந்ததுதான்.

ராகவனின் பெற்றோரும்தான் சென்ற மாதம் ஊரிலிருந்து வந்திருந்தார்கள். ஒரு வாரம் தங்கினார்கள். அவர்களும் அசைவம் விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால், ஒரே ஒருநாள் மட்டுமே உமா அசைவம் சமைத்துக் கொடுத்தாள். மற்ற நாட்களில் வெறும் கீரை சாதம்தான்.

ராகவனுக்கு இது நெருடலாக மனசை உறுத்தியது. உமாவிடம் கேட்டே விட்டான்.

‘‘எங்கண்ணாவைப் பத்தி உங்களுக்குத் தெரியாதா? ரொம்ப பிடிவாதக்காரன். யார்கிட்டயும் எந்த உதவியும் கேக்க மாட்டான். அவன் வேலை பார்க்குற கம்பெனி ரெண்டு மாசமா ஸ்டிரைக்காம். சம்பளமே வரலை போலிருக்கு. மேட்டூர் டேம் மீன் குழம்பு வாரத்துக்கு மூணு நாள் செய்வாங்க அண்ணி. அப்படி இருந்த வீட்டுல, ‘எங்க வீட்ல தினமும் ரசம்தான்’னு குழந்தைங்க சொல்லும்போது பரிதாபமா இருந்துச்சு. அதான் விதம்விதமா சமைச்சுப் போட்டேன்.

வயசான உங்க அப்பா, அம்மா இனிமே அசைவமே தொடக் கூடாதுனு டாக்டர் சொல்லியிருக்கார். அதான் அவங்களுக்கு சத்தான கீரைகளைத் தேடிப் பிடிச்சு சமைச்சேன். உங்களுக்கு ஏன் இப்படி வித்தியாசமா நினைக்கத் தோணுது?’’ - உமாவின் கண்கள் கலங்கின.

கல்யாணமான ஆண்கள் மனசே இப்படித்தான்!