திருப்புமுனை





‘‘சொல்கிற கருத்துகள் பரவலாக எல்லா மக்களுக்கும் சென்று சேர வேண்டும். ஜனரஞ்சகமாக பேசுவதாக நினைத்துக்கொண்டு, சொல்கிற கருத்துகளை மலினப்படுத்திவிடக் கூடாது. மற்றவர்களை ‘இம்ப்ரஸ்’ செய்ய வேண்டும் என்பதற்காக பேசுவதைவிட, உணர்வுகளை ‘எக்ஸ்பிரஸ்’ செய்வதே என் பேச்சின் நோக்கம்...’’

- நேர்படப் பேசுகிறார் ‘சொல்வேந்தர்’ சுகி.சிவம். வெள்ளத்தில் சிக்கிக் கரை சேர முடியாமல் திணறுகிறவருக்கு எங்கிருந்தோ நதியில் மிதந்து வருகிற மரக்கிளையைப்போல், குழப்பத்தில் இருக்கிறவர்களுக்குப் பற்றிக்கொள்ள காற்றில் மிதந்து வருகின்றன சுகி.சிவத்தின் சொற்கள். இலக்கியம் ரசித்து, சமூகத்தை நேசித்து, ஆன்மிகத் தேடல்களைச் சொற்பொழிவுகளாக வடிக்கிறார். பேசுகிற வார்த்தை வேறாகவும், வாழ்கிற வாழ்க்கை வேறாகவும் இல்லாத பேச்சாளராக மக்கள் மனதில் தனி இடம் பிடித்திருக்கிறார். ஆன்மிகம் என்கிற பெயரில் புராணம் பாடாமல், வாழ்வியல் சொல்கிற பேச்சாளரின் வாயிலிருந்து வருகிற ஒவ்வொரு சொல்லுக்கும் அர்த்தங்கள் அதிகம்.

‘‘இறைவனின் படைப்பில் ஒவ்வொரு உயிருக்கும் ஒரு இயல்பு உண்டு. நியாயம் என்று தோன்றுவதை, யாராக இருந்தாலும் முகத்துக்கு நேராக சொல்வது என்னுடைய உயிரின் இயல்பு. அதனால் வருகிற இழப்பு பற்றியோ, சொல்லாமல் விட்டால் அடைகிற லாபம் பற்றியோ சிந்தித்ததில்லை.


சென்னை கம்பன் விழாவில் ‘இலக்கியச் சோலை’ என்கிற தலைப்பில் நிகழ்ச்சி. தமிழகத்தின் முதல்வராக இருக்கிற கலைஞர் தலைமை ஏற்கிற நிகழ்ச்சியில் நானும் ஒரு பேச்சாளன். மேடையில் கம்பன் கழகத் தலைவரான நீதிபதி மு.மு.இஸ்மாயிலும் இருக்கிறார். இருவரும் சிம்மாசனம் போன்ற நாற்காலியில் வீற்றிருக்கிறார்கள். பேச்சாளர்களை தரையில் அமர வைத்துவிட்டார்கள். அந்த மேடையில் அனுபவத்திலும் வயதிலும் இளையவன் நான். ‘நீதியின் அரசருக்கு நாற்காலி இருக்கிறது. நிலத்தின் அரசராக இருக்கிற கலைஞருக்கும் நாற்காலி இருக்கிறது. சொல்லின் அரசனாகிய என்னுடைய நாற்காலி எங்கே? பேச்சாளர்களுக்கும் நாற்காலி போட இடம் இல்லையா? அல்லது மனம் இல்லையா?’ என்று நான் பேசியதும் அனைவரும் பதறி விட்டார்கள்.

‘இது இலக்கியச் சோலை. மரத்தில் அணில்கள் விளையாடும். தரையில் மான்கள் இருக்கும். இதை பெரிதுபடுத்த வேண்டாம்’ என்று இலக்கியச் சுவையோடு சமாதானம் சொன்னார் கலைஞர். நான் பேசியது சரியா, தவறா என்றெல்லாம் எனக்குத் தெரியாது. மற்றவர்கள் நாற்காலியில் அமர, நான் தரையில் அமர்வது மரியாதைக்குறைவாகத் தோன்றியது. அதை நாகரிகமான வார்த்தைகளில் வெளிப்படுத்தினேன். கொள்கையோடு பேசுவதும் வாழ்வதும், இளம் வயதிலிருந்து எனக்கு நானே வகுத்துக் கொண்ட இலக்கணம். அதில் சமரசம் செய்து கொண்டது இல்லை.

அப்பா சுகி.சுப்பிரமணியன் வானொலியில் பணியாற்றினாலும், எழுத்தாளராக அடையாளம் காணப்பட்டவர். பேச்சாளராக விரும்பினார் அவர். எழுத்து கைவந்த அளவு பேச்சு கைவரவில்லை. ‘பிள்ளை நன்றாகப் பேசுகிறான்’ என்று மற்றவர்கள் சொன்னதும் அதிகம் ஊக்கப்படுத்தினார். ஆயிரக்கணக்கான புத்தகங்கள் வீட்டிலேயே படிக்கக் கிடைக்கும். வறுமை இல்லாத வாழ்க்கையையும், நேர்மையாக இருப்பதற்கான சூழலையும் தந்த வீடுதான் என் முதல் பல்கலைக்கழகம்.

சின்ன மனஸ்தாபத்தில் ஒருமுறை குச்சியை எடுத்துக்கொண்டு அடிக்கத் துரத்தினார் அப்பா. அப்போது தோளுக்கு மேல் வளர்ந்த மகனாகவே இருந்தேன். அவர் துரத்த, நான் பின்வாங்கிக் கொண்டே போனேன். சுவர் தடுத்து ஒட்டி நின்றேன். இனி பின்னால் நகரமுடியாத நிலை. கை ஓங்கிய அப்பாவிடமிருந்து குச்சியைப் பிடுங்கினேன். ‘நான் பின்வாங்கினது உங்க மேல இருக்கிற பயத்தால இல்ல; மரியாதையாலதான்! இப்போ குச்சி என் கையில இருக்கு. உங்க மரியாதை உங்க கையில இருக்கு’ என்றதும் எதுவும் சொல்லாமல் போய்விட்டார். அவர் சாப்பிடவில்லை; யாரிடமும் பேசவும் இல்லை. ‘நான் சொன்ன வார்த்தைகளில் எந்த வருத்தமும் எனக்கு இல்லை. நான் மன்னிப்பு கேட்டால்தான் சாப்பிடுவீங்கன்னா, என்னை மன்னிச்சிடுங்க’ என்றேன். நிமிர்ந்த அப்பாவின் கண்கள் கலங்கியிருந்தன. ‘என் மேலதான் தப்பு. என்ன இருந்தாலும் வளர்ந்த பிள்ளையை கை ஓங்கி இருக்கக்கூடாது. உன்கிட்டே மன்னிப்பு கேட்டுட்டு சாப்பிடலாம்னு இருந்தேன். மன்னிச்சுக்கோ. வா, சாப்பிடலாம்’ என்று சொன்னார் அப்பா. இப்போது நினைத்தாலும் கண்ணில் நீர் வருகிற இத்தகைய நிகழ்வுகள் எத்தனையோ நடந்திருக்கிறது. பரஸ்பரமாக அன்பைப் பரிமாறிக் கொள்வதைப் போலவே, மன்னிப்பையும் பரிமாறும் பக்குவம் நிறைந்த பெற்றோர் எனக்கு அமைந்தார்கள்.

ஆறாம் வகுப்பு படிக்கும்போதிலிருந்து மேடையில் பேசுகிறேன். போட்டிக்காக பேசுகிறவர்கள் எழுதி, மனப்பாடம் செய்து பேசுவார்கள். பேசுவதற்கும், மனப்பாடம் செய்து ஒப்பிப்பதற்கும் வித்தியாசம் இருப்பதாக நினைத்தேன். குறிப்புகளை எடுத்து, கருத்துக்களை மனதிற்குள் கோர்த்துப் பேசுவது சிறுவயது முதலே பழக்கமானது. 

சென்னை விவேகானந்தர் கல்லூரியில் படித்தபோது, தவத்திரு குன்றக்குடி அடிகளாரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்து சமய அமைப்புகளின் பேரவைத் தலைவராக இருந்தார் அவர். ‘ஆன்மிகம் என்றால் வயதானவர்களுக்குத்தான் பொருந்தும்’ என்கிற நிலையை மாற்ற, இளைஞர்களை ஒருங்கிணைக்கும் முயற்சி எடுத்தார். சுமார் அறுபது இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து, கூட்டம் நடந்தது. அமைப்புக்கு ‘திருநெறிய இளைஞர் பேரவை’ என்கிற பெயரை முன்மொழிந்தார். ‘திருநெறிய என்கிற சொல் பரவலாக மக்களிடம் சென்று சேராது. மார்க்கெட்டிங் கோணத்தில் பார்த்தால், இந்து என்கிற சொல்தான் மக்கள் மனதில் பதியும்’ என்கிற கருத்தை முன்வைத்தேன். அடிகளாரும் அதை ஏற்றுக் கொண்டார்.

அதுவரை கூட்டத்தில் நடந்தவற்றை தொகுத்துக் கூறிய நான், ‘இளைஞர்களுக்கு சமயம் பயன்படவும், சமயத்திற்கு இளைஞர்கள் பயன்படவும் பணியாற்றுவது இந்த அமைப்பின் நோக்கம்’ என்று பேசினேன். என்னைக் கூர்ந்து கவனித்தார் அடிகளார். ‘நீ மட்டும் இரு’ என்று சொல்லி, மற்றவர்கள் கிளம்ப உத்தரவு கொடுத்தார். சமய அறிவும், சமூக அக்கறையும் உள்ள பெரியவரின் கவனம் அன்றுதான் என் மீது பதிந்தது. அது வாழ்வின் முதல் திருப்புமுனை. அதன்பிறகு அவருடைய சீடனாக மாறினேன்.



குன்றக்குடி அடிகளாரின் பட்டிமன்றங்களில் அணித்தலைவர்கள் மூத்த பேச்சாளர்களாக இருப்பார்கள். பெண்கள் அடுத்த நிலையில் இருப்பார்கள். மூன்றாம் நிலை பேச்சாளர்களில் வயதில் இளையவன் என்னை இணைத்துக் கொண்டார். மறுத்துப் பேசினாலும் அருகில் வைத்துக்கொள்கிற அடிகளாரின் பண்பு என்னை பலமுறை வியக்க வைத்திருக்கிறது.

கோவையில் ஒரு பட்டிமன்றம். அடிகளார் நடுவராக இருக்க, ‘சமூக மாற்றத்திற்கு சமயமே பயன்படும்’ என்கிற அணியில் நான் பேச்சாளராக இருந்தேன். இன்னொரு பக்கம், ‘அரசியலே பயன்படும்’ என்று மார்க்சிய கட்சிகளைச் சேர்ந்தவர்கள் வாதிட்டார்கள். ஆன்மிகம் பேசுகிறவர்களை தரக்குறைவாக அவர்கள் பேசியபோதும், அடிகளார் கண்டிக்கவில்லை. நாங்கள் முறையிட்டும், அதை நிராகரித்தார். ‘பேசி எந்தப் பயனும் இல்லை. தீர்ப்பு அந்த அணி பக்கமாகத்தான் இருக்கும் என்பது நடுவர், தன் நிலை தவறும் மனநிலையில் இருப்பதிலேயே நன்றாக தெரிகிறது. விதியின் மீது நம்பிக்கை உடையவர்கள் சமயவாதிகள். விதியை மறுப்பவர் கார்ல் மார்க்ஸ். குன்றக்குடி அடிகளார் ஒன்று சமயவாதியாக இருக்கட்டும்; அல்லது கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராக இருக்கட்டும். ஆதீனத்தின் தலைவராகவும் இருந்துகொண்டு, கம்யூனிஸ்ட் ஆதரவாளராகவும் இருக்கக்கூடாது’ என்று கடுமையாக விமர்சித்துப் பேசினேன். பொது மேடையில் நான் அவ்வாறு பேசியது அடிகளாருக்கு தர்மசங்கடம் தந்தது. ‘வளர்த்த கடா மார்பில் பாய்கிறது’ என்று என்னை சாடினார். ‘எதிர் அணியினர் நாகரிகமாக பேசி இருக்க வேண்டும்’ என்றும் தீர்ப்பில் கண்டித்தார். சில மாதங்கள் கோபம் நீடித்து பேசாமலேயே இருந்தார். பிறகு எல்லாம் மறந்து பழையபடி அன்பு செலுத்தும் பக்குவம் அவரிடம் இருந்தது.

அப்போது பட்டிமன்ற உலகத்தில் இரண்டு முகாம்கள். ஒரு முகாமிற்கு குன்றக்குடி அடிகளார் தலைமையேற்றார். இன்னொரு முகாமிற்கு தமிழறிஞர் கி.வா.ஜ. தலைமையேற்றார். நான் இருவரின் பட்டிமன்றத்திலும் பேசினேன். இந்த இரு அணிதான் பேச்சு உலகை அப்போது கட்டி ஆண்டது. அடிகளாருக்கும், கி.வா.ஜவுக்கும் ஒத்துப் போகாது. நான் அடிகளாரிடம் கி.வா.ஜ.வின் அறிவு மேதமையைக் கொண்டாடுவேன். கி.வா.ஜவிடம் அடிகளாரின் சமூக அக்கறையைப் பெருமையாகப் பேசுவேன். 

வந்தவாசியில் ஒரு கூட்டத்தில் பேசிவிட்டு பேருந்தில் அதிகாலை 4 மணிக்கு பயணம். நான் கி.வா.ஜவின் தோளில் சாய்ந்து தூங்க ஆரம்பித்துவிட்டேன். ‘இது மார்கழி மாசம். இன்னைக்கு என்ன திருப்பாவை பாட்டுன்னு தெரியுமா?’ என்று எழுப்பிக் கேட்டார். எனக்குத் தெரியவில்லை. ‘சிற்றஞ் சிறுகாலே வந்தென்னை சேவித்து’ என்று தொடங்கும் திருப்பாவை சொல்லி, மூன்று மணி நேரம் அதற்கான விளக்கமும் சொல்லி பிரமிக்க வைத்தார். பல ஆயிரம் பேர் இருக்கிற கூட்டத்தில் பேசும் ஈடுபாட்டிற்கும், தனி ஒருவனான என்னிடம் பேசும்போது காட்டிய ஈடுபாட்டிற்கும் எந்த வேறுபாடும் இல்லை. எவ்வளவு படிக்க வேண்டும் என்பது அவரிடம் கற்றுக்கொண்ட முதல் பாடம்; எந்த மேடையாக இருந்தாலும், எந்த இடமாக இருந்தாலும் ஒரே ஈடுபாட்டோடு பேச வேண்டும் என்பது இரண்டாவது பாடம்.

‘தினமும் அஞ்சு பக்கம் எழுது. ஒரு பாட்டு மனப்பாடம் பண்ணு’ என்று அறிவுரை வழங்கினார். ‘என் எழுத்தை எந்தப் பத்திரிகை பிரசுரம் பண்ணப் போகுது?’ என்று கேட்டேன். ‘இப்ப எழுது. அப்புறம் பிரசுரம் ஆகும். வளர்ந்த பிறகு எழுதுற வாய்ப்பு கிடைக்கும். அப்ப நேரம் கிடைக்காது. எல்லாத்துக்கும் மேல, நம்மகிட்ட எவ்வளவு சரக்கு கம்மியா இருக்குங்கறது எழுதினாதான் தெரியும். பேசிட்டே இருந்தா தெரியாது’ என்று கி.வா.ஜ சொன்ன ஆலோசனை என் வாழ்வில் பல திருப்பங்களை நிகழ்த்திக் காட்டியிருக்கிறது.

வகுப்பறைகளைக் கடந்து வாழ்க்கையிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்கள் என்னை முழுநேரப் பேச்சாளனாக மாற்றின. பேசுகிறவர்களின் முதல் ஆர்வம் அரசியலாக இருக்கும். எனக்குள்ளும் அரசியல் ஆசை இருந்தது...
(திருப்பங்கள் தொடரும்)
படங்கள்: புதூர் சரவணன்