வலை arusuvai

சமையலுக்கென்று தமிழில் இயங்கும் தளங்களில் மிகப் பெரியது என்றால் www.arusuvai.comதான். சைவ, அசைவ பேதம் இல்லாமல் அநேகமாக எந்த ரெசிபியைத் தேடினாலும் இந்தத் தளத்தில் கிடைக்கிறது. வெறும் சமையலோடு மட்டும் நின்று விடாமல் மகளிர் பகுதி, பல்சுவைப் பகுதி, சந்தேகங்களை பேசித் தீர்த்துக் கொள்ளும் ‘மன்றம்’ என்ற ஃபோரம் பகுதி என்று பரவிப் படர்ந்திருப்பது இந்தத் தளத்தின் ப்ளஸ். ரெசிபிகளை வகை வாரியாக வரிசைப்படுத்தாமல் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டும் என்று வைத்திருப்பது மைனஸ். ஆனால் அதுவும் சுலபமாகத்தான் இருக்கிறது!
இதழ் குழந்தைகள் பாராளுமன்றம்குழந்தைகளுக்கான அரசியலை முன்னிறுத்தி வெளிவரும் மாத இதழ். குழந்தைகள் பாராளுமன்றங்களை உருவாக்கி, அவர்களின் ஆளுமைத்திறனை வளர்க்கவும், உரிமைகளைக் கேட்டுப் பெறவும், தேசிய செயல்பாடுகளில் குழந்தைகளின் பங்களிப்பை உறுதி செய்யவும் நாடு தழுவிய அளவில் இயக்கங்கள் செயலாற்றி வருகின்றன. அந்தக் கட்டமைப்பை பலப்படுத்தும் முயற்சியாக வெளிவருகிறது இந்த இதழ். 12வது ஐந்தாண்டு திட்டக் குழுவினரிடம், குழந்தைகள் திட்டக்குழுவினர் வழங்கியுள்ள பரிந்துரைகளின் பட்டியல் மிகச்சிறந்த பங்கேற்பு. குழந்தைகளின் படைப்புகள், சட்ட விழிப்புணர்வு செய்திகள் என கவனிக்கத்தக்க படைப்புகளோடு வெளிவருகிறது இந்த இதழ்.
(ஆசிரியர்: எஸ்.ஜோசப் ரத்தினம், தனிஇதழ்: ரூ.10/-, ஆண்டு சந்தா: ரூ.120/-, முகவரி: டி-5, சத்யா அபார்ட்மென்ட், எண்-1,
டாக்டர் தாமஸ் சாலை, தி.நகர், சென்னை-17. பேச: 94441 41032.)
புத்தகம் குறுந்தொகை பாகம்-2 - திருவேந்திகாதல் உணர்வுகளை உருக உருக வடித்து வைக்கும் இலக்கியங்களில் குறுந்தொகைக்கு இணையில்லை. அணிலாடு முன்றிலார், செம்புலப் பெயல்நீரார், குப்பைக்கோழியார், காக்கைப் பாடினியார் என பாடலடிகளையே பெயராகக் கொண்ட பழந்தமிழ்ப் படைப்பாளிகளின் தமிழில் ஊடல், கூடல், பிரிவென மிகையில்லா காதல் உணர்வுகள் நிரம்பி வழிகின்றன. ஆனால் இந்தத் தமிழை பொருளுணர்ந்து அனுபவிக்கும் வாய்ப்பு தமிழர்களுக்கு வாய்ப்பதில்லை. திருவேந்தி அந்தக் குறையைப் போக்கி, ஒவ்வொரு பாடலுக்கும் கவிதை மொழியில் உணர்வு சிதறாமல் பொருள் கூறுகிறார். சில கவிதைகள் சற்று இருண்மையாக இருந்தாலும் நடையும், போக்கும் ரசிக்க வைக்கிறது. 101 முதல் 200 வரையிலான குறுந்தொகைப் பாடல்கள் நூலில் இடம்பெற்றுள்ளன. திருவேந்தி, மூத்த படைப்பாளி தி.க.சியின் மகன். கவிஞர் கல்யாண்ஜியின் சகோதரர். இந்த நூல் வெளிவரும்போது திருவேந்தி காலமாகி விட்டார். அவரது தமிழ் நிலைத்து நிற்கிறது.
(168 பக்கங்கள், விலை: ரூ.100/-, வெளியீடு: சந்தியா பதிப்பகம், ப.எண் 57, 53வது தெரு, 9வது அவென்யூ, அசோக் நகர், சென்னை-83. பேச: 044-24896979.)
இசை ஆரோகணம்
நடிகையாக வலம் வந்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்குனராக அறிமுகமாகும் இந்தப் படத்திற்கு கே இசையமைத்துள்ளார். மூன்று பாடல்கள், மூன்று பாடல்களுக்கு வாத்திய கருவிகளின் வாசிப்பு, போனஸாக பத்து பாடல்கள் என வித்தியாச வடிவமைப்பில் வெளியாகியுள்ளது ‘ஆரோகணம்’.முதல் பாடலான ‘தப்பாட்டம் வந்தாச்சு...’, கிளப் ஆட்டக்காரர்களுக்கு விருந்தாக அமைந்திருக்கிறது. ஆனந்த் அரவிந்த கிஷன் பாடியுள்ள ‘இந்த வான்வெளி...’ பாடலில் தபேலாவும் புல்லாங்குழலும் பின்னிப் பிணைந்து, தேன் குடித்த வண்டாய் மயங்கச் செய்கிறது. வந்தனா ஸ்ரீநிவாஸ் பாடியுள்ள ‘திசை அறியாது...’ பாடலைக் கேட்கும்போது மெழுகுவர்த்தி வெளிச்சத்தின் ஊடே முகம் தெரிவதுபோல அத்தனை இயல்பு, எளிமை. ஆர்ப்பாட்டமில்லாத ஒலி கோர்ப்பு, ‘ஆரோகணத்தின்’ சிறப்பு.