இந்தியத்தாயின் வாழ்க்கையை இந்திய அரசியல்தான் நிர்ணயிக்குது!





‘‘இந்தியாவில எடுக்கப்படற படங்கள் எல்லாம் இந்தியப் படங்கள் இல்லை. இந்திய வாழ்க்கையை உலகத்துக்கு உணர்த்தற படங்களைத்தான் இந்தியப் படங்கள்னு சொல்லணும். அப்படித் தமிழர் வாழ்வை படத்துக்குப் படம் சொல்லி வர்ற என்னோட முயற்சியில அடுத்த படம், உலக சினிமாவுக்கு இந்தியப் படவுலகோட பங்களிப்பா அமையப்போகுது...’’ என்று சொன்னவருக்கு அறிமுகம் தேவையில்லை. ‘தங்கர் பச்சான்’ என்ற ஒற்றைப் பெயரே அவரை உலகுக்குச் சொல்லும்.

தமிழர் வாழ்வியல் கதைகளில் உறவுகளின் மேன்மையை உரத்துக் கூறுவதோடு, சமகால சமூக நிகழ்வுகளையும் ஒப்பனைகளற்ற இயல்பான முகத்துடன் பதிவு செய்யும் முன்னணி இயக்குநரான அவர், இப்போது தன் தங்கர் திரைக்களத்துக்காக ‘அம்மாவின் கைபேசி’யோடு வருகிறார். இதே தலைப்பில் அவரே எழுதிய புதினத்தின் திரைப்பட உருவாக்கம்தான் இது.

‘‘அம்மாங்கிற சொல்லுக்கு உலகமெல்லாம் பொருள் ஒன்றுதான்னாலும், தனித்தன்மைகள் கொண்ட அம்மாக்களை நம் நாட்டிலதான் பார்க்க முடியும். ஒன்பது பிள்ளைகளை சுமந்து பெத்துக்கிற அம்மா இங்கேதான் இருக்கா. ஒன்பதையும் பாசத்தால கட்டி வளர்த்தாலும், வளர்ந்த பின்னால எந்தப்பிள்ளை முன்னுக்கு வருதோ அது பின்னால ஓடாம, செல்லாக்காசா வீணாகி நிக்கிற பிள்ளை மேல பாசத்தைக் கொட்டி கண்ணும் கருத்துமா பார்த்துக்கிற தாயை உலகத்திலேயே இங்கேதான் பார்க்க முடியும்...’’ என்ற தங்கர் தொடர்ந்தார்.



‘‘பெரும்பாலும் கடைசிப்பிள்ளைதான் அளவுக்கு அதிகமான பாசத்தால இப்படி உருப்படாமல் போகும். ஒரு அம்மாவுக்கும் இப்படிப்பட்ட கடைசிப் பிள்ளைக்குமான பாச வலை அலாதியானது. குடும்பமும், உறவுகளுமா வாழ்ந்துக்கிட்டிருந்த கிராமங்கள் இப்போ வெறிச்சோடிக் கிடக்குது. நகர ஈர்ப்புல சொந்தங்கள் குடிபெயர்ந்து போனதோட, நகர வாழ்க்கையில தாய்க்கு இடமில்லாத வீடுகள், அவங்களை கிராமங்கள்லயே தனிச்சு இருக்க வைக்குது. எந்த மகன்தான் தாயைப் பிரிஞ்சு வாழத் துணிவான்..? ஆனா இறுக்கமான நகர வாழ்க்கை அந்த சுகத்தையும் வேரறுத்து, எல்லாம் இருந்தும் தாய் அருகே இல்லாத குற்றவாளியா அவனை ஆக்குது. இப்படி பிரிஞ்சு நிற்கிற சொந்தங்களுக்கு ஒரே ஆறுதலா இருக்கிற நவீனம்தான் கைபேசி. அப்படி ஒரு தாய் உறவுகளைப் பாதுகாத்து வைக்கிற மந்திரப் பெட்டியா தன் கைபேசியைப் பயன்படுத்தற கதைதான் இது.

எல்லோருக்கும் இருக்கிற தவிப்பு, தேவை, அதை சரி செய்துகொள்ள முடியாத சூழல்... இவற்றோட சூழ்ச்சி நிறைஞ்ச உலகத்துல உறவுகளும் அப்படி ஆகிப்போகிற அவலத்தையும் சொல்லியிருக்கேன். எல்லாமே நம்மகிட்ட இருக்குங்கிற இறுமாப்பு ஒரு நூலிழை அளவுக்குதான் வலிமையானது. இந்த உண்மையை, அது அறுந்துபோகும்போதுதான் உணர முடியும். அப்ப வாழ்க்கையே முடிஞ்சு போயிருக்கும். இப்படி இதுவரை உலக சினிமாவில பேசப்படாத பகுதிகள்ல இழையெடுத்து ஒரு கதை சொல்லியிருக்கேன். ஒரு இந்தியத்தாய் எப்படி வாழணும்ங்கிறதை இந்திய அரசியல்தான் நிர்ணயிக்குதுங்கிற நுட்பம் இந்தப் படத்துல புரியும். ஒவ்வொரு மனசையும் குற்றவாளி ஆக்கப்போகும் படமா உருவாகியிருக்க இது என் படங்கள்லயே நானே பெருமைப் பட்டுக்கிற நிறைவைத் தந்திருக்கு.

லுங்கி, சட்டை, தோளில் துண்டுன்னு வர்ற சாந்தனு, இந்தப்படத்துலதான் ஒரு கிராம வாழ்க்கையையே பார்க்கிறான். அவனுக்கு இணையாகிற இனியாவோட திறமையால, எட்டு ஆண்டுகால இடைவெளி சொல்ற நடிப்பின் கனத்தை 15 நாள்ல எடுத்து முடிச்சேன். இவங்களோட 72 பேர் புதிய முகங்களா ஆனதால இரண்டரை மாதம் பயிற்சிப்பட்டறை வச்சு நடிக்க வச்சேன்.

அம்மா வேடத்துக்குக்கூட கதாநாயகி அளவுக்கு சம்பளம் கேட்கிற இன்றைய சினிமாவுக்குள்ள, ஸ்கிரிப்ட்டைப் படிச்சுட்டு கண்ணீர் விட்டு ‘நாளைக்கே ஷூட்டிங் போகலாமா..?’ன்னு கேட்ட நடிகை புதுமுகமில்லை. ‘காக்கும் கரங்கள்’, ‘பஞ்சவர்ணக்கிளி’ன்னு பேர் பெற்ற படங்கள்ல பெயர் சொல்லிக்காம நடிச்சு அனுபவப்பட்ட ரேவதிதான் அவங்க. பார்க்கிற எல்லோருக்கும் அவங்கவங்க தாயோட இருக்கிற உணர்வை மூன்று மணிநேரம் தரப்போகிற படம் இது..!’’
- வேணுஜி