கோமா ஸ்டேஜில் அரசுப் பேருந்துகள்!





எந்நேரமும் பரபரப்பாக இயங்கும் சென்னை, அண்ணா மேம்பாலத்தில் தலைகுப்புறக் கவிழ்ந்து கிடந்த அந்த பஸ்ஸைப் பார்த்த அத்தனை கண்களும் வியர்த்து விட்டன. டிரைவர் செல்போனில் பேசினார், இருக்கை கழன்று விழுந்தது, பிரேக் பிடிக்கவில்லை என விபத்துக்கு காரணத்தை அடுக்குகிறார்கள். அதுவல்ல விவகாரம்... சரிந்த நொடியில் பொல பொலவென உதிர்ந்து சிதைந்த அந்த பஸ்ஸுக்குப் பின்னால் ஆயிரமாயிரம் சந்தேகங்கள் இறக்கை கட்டிப் பறக்கின்றன. அரசுப் பேருந்துகளின் லட்சணங்கள் மெல்ல மெல்ல வெளிச்சத்துக்கு வருகின்றன.
19 மண்டலங்களாக செயல்படும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் 21,169 பேருந்துகள் உள்ளன. சென்னை மாநகரத்தில் மட்டும் 3400. இதில் 45 சதவீதப் பேருந்துகள் ஓடத் தகுதியற்றவை என்று ‘பகீர்’ கிளப்புகிறார்கள் போக்குவரத்துக் கழக ஊழியர்கள்.

‘‘வாங்கி 6 வருஷம் ஆகிட்டாலோ, அல்லது 7 லட்சம் கிலோ மீட்டர் ஓடிட்டாலோ, அந்த பஸ்ஸை அதுக்கு மேல பயன்படுத்தக்கூடாது. ஆனா, சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்துல மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் இந்த விதியை மீறி ஓடுது...’’ என்று மிரள வைக்கிறார் அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத்தலைவர் எம்.சந்திரன்.

‘‘டெக்னிகல் சைடுல 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள் இருக்கு. பஸ்களை பராமரிக்கிறதே இல்லை. அத்தனை விதிகளும் காத்துல பறக்குது. 10 வருஷம் முன்னாடி ஃபிட்டர், வெல்டர், கார்பென்டர், டர்னர்னு 30 கேட்டகிரி ஊழியர்கள் இருந்தாங்க. இப்போ ஒரே கேட்டகிரி... மோட்டார் மெக்கானிக் படிச்சா போதும்.

அப்போ 100 பஸ்ஸுக்கு 125 டெக்னீஷியன்கள் இருப்பாங்க. பஸ்ல உள்ள பிரச்னைகளை ‘லாக்புக்’ல எழுதிட்டு டிரைவர் பஸ்ஸை நிறுத்திடுவார். ஒவ்வொருத்தரும் அவங்கவங்க வேலையை முடிச்சு வச்சிடுவாங்க. இப்போ லாக்புக்கே இல்லை. லாக்ஷீட்னு ஒண்ணு வச்சிருக்காங்க. நேத்து எழுதுன ஷீட்டை இன்னைக்குப் பாக்கமுடியாது. காத்துல பறந்துடும். ஆட்கள் பற்றாக்குறை இருக்கதால வேலைகளை தனியார்கிட்ட கான்ட¢ராக்ட் விடுறாங்க. ஊழியர்களாவது, அதிகாரிகளுக்குப் பயந்து வேலையை பொறுப்பா பாப்பாங்க. கான்ட்ராக்ட் ஆட்களோட வேலையைப் பத்தி சொல்லவே வேண்டாம். ஒரு நாளைக்கு ஒரு டெக்னீஷியன் 30 வண்டிகளை பழுது பார்க்க வேண்டியிருக்கு. எப்படி முடியும்? ‘எல்லாம் ஓகே’ன்னு எழுதி வச்சுட்டுப் போயிடுறாங்க. தமிழ்நாடு முழுக்க பல பஸ்கள் அபாயமான நிலையிலதான் ஓடுது.



விபத்துகளை குறைக்கிறதுக்காக டோர் பஸ்களை கொண்டு வந்தாங்க. இன்னைக்கு பல பஸ்கள் டோர் சாத்துற கண்டிஷன்ல இல்லை. மோட்டார் வாகனச் சட்டப்படி, ஒரு டெப்போவுல எவ்வளவு பஸ்கள் இருக்கோ அதுல 10 சதவீதம் ஸ்பேர் பஸ்கள் இருக்கணும். அவையும் ஓடுற கண்டிஷன்ல இருக்கணும். ஆனா இங்கே ‘ஸ்பேர் பஸ்கள்’ எல்லாம் ‘ஸ்பேர் பார்ட்ஸ் பஸ்’களாத்தான் இருக்கு. ஸ்பேர் பார்ட்ஸ் வாங்குறதே இல்லை. ஏதாவது ஸ்பேர் பார்ட்ஸ் தேவைன்னா, உடனே ‘ஸ்பேர் பஸ்ல இருந்து கழட்டிப் போடு’ன்னு சொல்லிட்டு அதிகாரிகள் போயிடுவாங்க. அப்புறம் எப்படி ஸ்பேர் பஸ்களை ரூட்டுல ஓட்ட முடியும்? சென்னையில விபத்துக்குள்ளான பஸ், ஸ்பேர் பஸ்தான். வழக்கமா ஓட்டுற பஸ்ல ஏர் பிரேக் சரியா இல்லைன்னு ஷெட்ல கொண்டு போய் நிறுத்தியிருக்கார் டிரைவர். அதிகாரிகள், ‘இந்த ஸ்பேர் பஸ்ஸை எடுத்து ஓட்டு’ன்னு சொல்லியிருக்காங்க. தாழ்தள பேருந்துகள்ல நான்கு பக்கமும் பலூன்கள் இருக்கும். அதுலதான் பஸ் நிக்கும். அந்த பலூன்களை ரெகுலரா பராமரிக்கணும். இல்லைன்னா ஓட்டை விழுந்து ஒரு பக்கம் கீழே உக்காந்திடும். அப்புறம் ஓட்டறதே சிரமம். அந்த பஸ்ல இந்தப் பிரச்னை இருந்திருக்கு. அதனாலதான் கட்டுப்பாட்டை மீறி கவிழ்ந்திருக்கு. அது மட்டுமில்லாம டிரைவர் சீட்ல இருந்த பார்ட்ஸ்களை வேற பஸ்ஸுக்கு மாத்திட்டு நைலான் கயிறால கட்டி வச்சிருக்காங்க. அந்த சீட் புடுங்கிக்கிட்டதால டிரைவரால பஸ்சை கண்ட்ரோல் பண்ண முடியல’’ என்று குமுறு கிறார் சந்திரன்.

கடந்த ஆண்டு மட்டும் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் காவு வாங்கிய உயிர்களின் எண்ணிக்கை 123. இந்த ஆண்டு இதுவரை 58 பேர் பலி. விபத்துகளுக்கு பராமரிப்பு லட்சணம் ஒரு காரணம் என்றால் டிரைவர்களது பணிச்சுமை இன்னொரு காரணம் என்கிறார்கள்.

‘‘பஸ்தான் மெஷினே ஒழிய டிரைவர் மெஷின் இல்லை. அவரும் மனுஷன்தான். 8 மணி நேர டியூட்டின்னு பேரு. 10 முதல் 12 மணி நேரம் வேலை பாக்க வேண்டியிருக்கு. சென்னையில 5000 பஸ் ஓட்ட பர்மிட் இருக்கு. பஸ்களை அதிகப்படுத்தாம டிரைவர்களை வதைக்கிறாங்க. குறிப்பிட்ட அளவுக்கு மேல டீசல் புடிச்சா அபராதம். ‘டீசலை மிச்சப்படுத்து, கலெக்ஷனை அதிகப்படுத்து’ங்கிறதுதான் அதிகாரிகளோட தாரக மந்திரம். கூடுதலா புடிச்ச டீசலுக்கு பணம் கட்டினாத்தான் டிரைவருக்கு அடுத்த டியூட்டி போடுவாங்க. பஸ்ஸை தயாரிக்கிற கம்பெனியே லிட்டருக்கு 4.4 கி.மீ.தான் ஓடும்னு சொல்லுது. ஆனா நிர்வாகம், லிட்டருக்கு 6 கி.மீ. ஓட்டச் சொல்லுது.

100 பஸ்ஸுக்கு 250 டிரைவர் இருக்கணும். ஆனா எந்த டெப்போவிலயும் அப்படியில்லை. முன்னாடி சென்னையில இருந்து கன்னியாகுமரிக்குப் போற பஸ்ல 3 டிரைவர் போவாங்க. இன்னைக்கு ஒரே டிரைவர் கன்னியாகுமரியில இருந்து சென்னைக்கு வந்துட்டு, அடுத்த அரை மணி நேரத்தில திரும்பவும் இங்கேயிருந்து கிளம்பி கன்னியாகுமரி போக வேண்டியிருக்கு. 6 மணி நேரம் பஸ் ஓட்டுனா 4 மணி நேரம் ஓய்வெடுக்கணும். அரை மணி நேரம் கூட ஓய்வு கிடைக்கிறதில்லை. அப்புறம் ஏன் விபத்து நடக்காது..?’’ என்று குமுறுகிறார் தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் ஏ.பி.அன்பழகன்.

அரசு பஸ்களில் நாளொன்றுக்கு 2 கோடியே 10 லட்சம் பேர் பயணிக்கிறார்கள். பஸ் பயணம் பாதுகாப்பானதாக அமைய அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- வெ.நீலகண்டன்
படங்கள்: தமிழ்வாணன்