நிழல்கள் நடந்த பாதை



கொடுக்கும் கைகளும் யாசிக்கும் கைகளும்


கலைகளிலேயே மிகப்பெரிய கலை, ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு உதவும் விதம்தான். இதை நான் கலை என்று குறிப்பிடுவதற்கு ஒரு காரணம் இருக்கிறது. நிறைய நேரம் நிராகரிப்பையும் புறக்கணிப்பையும்விட அதிக அளவு வருத்தத்தையும் அவமானத்தையும் உதவிகளும் உபகாரங்களும் கொண்டு வந்திருக்கின்றன. சிலர் செய்த உதவிகள் வாழ்நாள் முழுக்க ஒரு ரணமாகவோ தழும்பாகவோகூட மிஞ்சி விடுவதுண்டு. யாசிக்கும் கைகளைத் தொடுகிற கொடுக்கும் கைகள் மகத்தான அன்பினால் நிரம்பியிருக்க வேண்டும். கொடுப்பவன் பெற்றுக்கொள்பவனின் மனித கௌரவத்தை உத்தரவாதப்படுத்திய பிறகே தன் கைகளைத்  திறக்க வேண்டும். அவமதிப்பினூடே செய்யப்படும் உதவிகள் கருணையின்மையைவிட கொடுமையானது.

'ஊனமுற்றோர் நடத்தும் பெட்டிக் கடை’, ‘ஊனமுற்றோர் நடத்தும் பொது தொலைபேசி’ போன்ற அறிவிப்புப் பலகைகளைப் பார்க்கும்போதெல்லாம், ஒரு சமூகம் தன் உதவிகள் வழியே ஒரு மனிதனை எப்படியெல்லாம் குரூரமாக நடத்த முடியும் என்று தோன்றியிருக்கிறது. அந்த இடத்தைக் கடந்துபோகும் ஒவ்வொருவரும் அங்கே ஊனமுற்ற ஒருத்தன் உட்கார்ந்திருக்கிறான் என்று நினைத்துக்கொண்டே போகவேண்டும். ‘தன்னைக் கடக்க வேண்டும்’ என்றுதான் ஒருவர் அங்கே வந்து உட்காருகிறார். ஆனால் அவர் நெற்றியில் அவர் யார் என்று நிரந்தரமாக ஒரு பச்சை குத்தப்படுகிறது.
சமீபத்தில் இந்து அறநிலையத்துறையின் மூலமாக 1006 ஜோடிகளுக்கு திருவேற்காட்டில் தமிழக முதல்வரால் இலவசத் திருமணம் செய்து வைக்கப்பட்டது. பொருளாதார வசதியற்றவர்களின் திருமணத்திற்கு உதவி செய்யும் நல்லெண்ணம் பாராட்டிற்குரியதுதான். ஆனால் அது திருமணம் என்ற நிகழ்ச்சியின் சமூக, கலாசார உறவுகளை கேலிக்கூத்தாக்குவதாகவே பட்டது. ஒரு திருமணம் என்பது மணமகனும் மணமகளும் தங்களை நாயகர்களாக உணரும் தருணம். ஆனால் இங்கு ஒரு மாநாட்டுப் பந்தலில் அமர்ந்திருப்பதுபோல ஆயிரக்கணக்கான ஜோடிகள் அமர்ந்து, தங்கள் திருமணத்தை பார்வையாளர்களைப் போல பார்த்துக்கொண்டிருந்தனர். ஒவ்வொரு ஜோடியுடனும் நான்கு உறவினரே வர அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்த ஜோடிகளில் பெரும்பாலானோர் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின சமூகத்தினர். அவர்களுக்கென்று பிரத்யேகத் திருமண முறைகளும் சம்பிரதாயங்களும் உண்டு. நாம் அவர்களின் ஏழ்மையின் வழியாக உதவி என்ற பெயரில், அவர்களது பண்பாட்டு மதிப்பீடுகளை அவமதிக்கிறோம் என்பதுதானே உண்மை?

சமீபத்தில் ஃபேஸ்புக்கில் மணிகண்டன் ஆறுமுகம் என்ற நண்பர் ஒரு சம்பவத்தை எனது பக்கத்தில் பகிர்ந்து கொண்டார். ஒரு பள்ளி விழாவில், பள்ளி இறுதி வகுப்பில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்படுகின்றன. அப்போது ஒருவர் மேடைக்கு வந்து, ‘‘நான் இங்கே இரண்டாவது மதிப்பெண் பெற்றிருக்கும் தந்தையில்லாத, ஏழையான மாணவனைத் தத்தெடுத்து வளர்த்து வருகிறேன். அவனுக்கான செலவுகள் அனைத்தையும் நான் செய்தேன்’’ என்கிறார். அடுத்து ஒருவர் வந்து, ‘‘இந்த ஏழை மாணவனைப் போல எல்லோரும் படித்தால் அவர்களுக்கும் இதுபோல உதவிகள் கிடைக்கும். நாளை நடக்கும் விழாவில் அந்த ஏழை மாணவனுக்கு பத்தாயிரம் ரூபாய் உதவி அளிக்கப்படும்’’ என்கிறார்.


அடுத்த நாள் நண்பரிடம் வந்த அந்தப் பையனின் அம்மா அழுதுகொண்டே சொன்னது இது: ‘‘அந்தத் தலைவரு  என் மகனை ஏழைன்னு, அப்பா இல்லாதவன்னு அடிக்கடி சொன்னதோட, அவனுக்குப் படிப்புச் செலவு எல்லாத்தையும் நான் செஞ்சு படிக்க வச்சேன்னு சொன்னாராம். ஆனா அவரு ஒரு பேக்கும் ஐந்து நோட்டும் மட்டும் கொடுத்தாரு. அத மட்டும் செஞ்சிட்டு முழுசா நான்தான் படிக்க வச்சேன்னு எல்லார் முன்னாடியும் இப்டி சொல்லிப்புட்டாரேன்னு அழுதுக்கிட்டே இருக்கான் சார்! அது மட்டுமில்ல, அவங்க விழாவுல கொடுக்கறதா சொன்ன பத்தாயிரம் ரூபாவுக்கு பதிலா கவர்ல ஐந்தாயிரத்த மட்டும் வச்சுட்டு, ‘பத்தாயிரம் கொடுத்து உதவிய தலைவருக்கு நன்றி’ன்னு சொல்லச் சொல்லி வற்புறுத்தினாரு. அவனும் வேற வழியில்லாம ‘பத்தாயிரம் கொடுத்த தலைவருக்கு நன்றி’ன்னு சொல்லிட்டு வீட்டுக்கு வந்ததிலிருந்து ‘நான் படிக்கப் போகலை’ன்னு அழுதுக்கிட்டே இருக்கான்...’’

இதுபோன்ற சம்பவங்களை எத்தனையோ முறை சந்தித்திருக்கிறேன். ‘இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்’ - ‘யாசித்து வாழ வேண்டிய நிலையை உருவாக்கியவன் கடவுள் எனில், அவன் கெட்டழியட்டும்’ என்று வள்ளுவர் சாபம் கொடுத்தார். இது இன்னொருவரிடமிருந்து பெற்று வாழ்தலின் கொடுந்துயரத்தைச் சொல்வதற்காகக் கொடுத்த சாபம். ஆனால் அது ஒரு அவமானமல்ல!

ஏற்றத் தாழ்வான சமூகத்தில் பலரைப் பலியிட்டே சிலரிடம் செல்வம் சேர்கிறது. செல்வமுள்ளவர்கள் சமூகத்திலிருந்து அபகரித்ததில் கொஞ்சத்தை சமூகத்திற்கே தரவேண்டும் என்பதற்காகத்தான் வரி விதிக்கப்படுகிறது. கொடை என்பதும், உதவி என்பதும், ஒருவர் சமூகத்திடமிருந்து பெற்றதைத் திருப்பிக்கொடுக்கும் ஒரு அறவியல் கடமையே தவிர, அது பிச்சை அல்ல! மேலும் பெற்றுக் கொள்பவரும் இந்த சமூகத்திற்கு அவசியமான ஒன்றைச் செய்பவரோ, செய்யப் போகிறவரோதான். அவருக்குத் தனது அடிப்படை ஆதாரத் தேவையை இயற்கையிடமிருந்தோ, சமூகத்திடமிருந்தோ பெற்றுக்கொள்ள எல்லா உரிமையும் இருக்கிறது. இயற்கையில் உயிரினங்கள் எப்படி ஒன்றையொன்று சார்ந்து வாழ்கின்றனவோ, அப்படித்தான் சமூகத்திலும் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்கிறோம். இதில் கொடுப்பவர், பெறுபவர் என்ற ஏற்றத் தாழ்வுகள் இல்லை.

ஒரு உதவியை அளிக்கும் தருணம் என்பது, கடவுள் ஒருவருக்குத் தரும் மகத்தான சந்தர்ப்பம். அதை அதன் மகத்துவத்துடன் கையாள்பவர்கள் வெகு சிலரே. யாருக்கோ சிறிய ஒன்றைக் கொடுத்துவிட்டு, அதற்குப் பதிலாக பெரிய ஒன்றை வேண்டி நிற்பவர்கள்தான் அதிகம். அவர்கள் தங்களை மட்டுமல்ல... பிறரையும் அவமதிக்கிறார்கள்.

‘நான் பிறருக்குக் கொடுத்ததைவிட பிறரிடமிருந்து எவ்வளவோ பெற்றுக் கொண்டிருந்திருக்கிறேன். மகத்தான அன்பின் கௌரவம்மிக்க கணங்களை அனுபவித்திருக்கிறேன். யாசகனாக இருப்பதில் எனக்கு என்றுமே அவமானமோ, துயரமோ இல்லை. கொடுக்கும் கைகளைப் போலவே யாசிக்கும் கைகளும் புனிதமானதுதான்’ என்கிறது இந்திய மரபு.

 ஒதுங்க ஓரிடம்...
குடிப்பதில் ஆர்வம் உள்ள எனது நண்பர் ஒருவர் குடிப்பழக்கத்தை சமீபத்தில் விட்டுவிட்டார். அவரிடம் காரணம் கேட்டேன். ‘‘டாஸ்மாக் குடிகாரர்களைப் பார்த்துப் பார்த்தே, குடிகாரனாக இருப்பதன் மேல் ஒரு அருவருப்பு உணர்வு வந்துவிட்டது’’ என்றார். ஒரு டாஸ்மாக் கடையின் முன் அரை மணி நேரம் நின்று, குடிகாரர்களின் சேஷ்டைகளைக் கொஞ்ச நேரம் கவனித்தாலே போதும்... மனித நடத்தையை குடி எந்த அளவு சீரழிக்கும் என்பதை உணர்ந்துகொள்ளலாம். அதுமட்டுமல்ல, அவர்கள் சக மனிதர்களுக்கு எவ்வளவு மன நெருக்கடிகளை ஏற்படுத்தக்கூடியவர்கள் என்பதையும் அறியலாம்.



அண்மையில் டிராபிக் ராமசாமி முன்வைத்த ஒரு கோரிக்கையை, ‘நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிப்பதாகக் கூறி’ உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. ‘டாஸ்மாக் கடைகளில் கழிவறைகள் அமைக்க வேண்டும். கடையில் நாள் முழுவதும் குடிப்பவர்கள் சாலையிலே சிறுநீர் கழிக்கிறார்கள். இதனால் சுற்றுப்புறம் பெரும் அசுத்தமடைகிறது’ என்பதுதான் அவரது கோரிக்கை. நீதிமன்றம் இந்தக் கோரிக்கையின் நியாயத்தைப் புரிந்துகொள்ளவில்லை என்று தோன்றுகிறது. ஒரு ஹோட்டலில் கழிவறைகள் இருப்பது எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியம் டாஸ்மாக் கடைகளில் இருப்பது. குடிகாரர்களிடம் இருந்து வருடத்திற்கு 18 ஆயிரம் கோடி ரூபாயை அரசாங்கம் கறந்துகொண்டு, மூத்திரத்தை மட்டும் ஜனங்களின் தலையில் விடச் சொல்வது என்ன நியாயம்?

நம் ஊரில் போல உலகத்தில் எங்காவது இவ்வளவு பேர் தெருவில் நின்று குடிக்கிறார்களா என்று தெரியவில்லை!
 நூலகத்தில் ஆர்க்கெஸ்ட்ரா...

அண்ணா நூலகத்தை அழிக்கும் விக்கிரமாதித்ய முயற்சிகள் ஒவ்வொரு முறையும் புதுப்புது வடிவம் எடுக்கின்றன. குழந்தைகள் மருத்துவமனையாக மாற்றும் முயற்சிகள் தோல்வியடையவே, ‘சரி... குழந்தைகள் பிறப்பதற்கு வழிசெய்யும் திருமண மண்டபமாக அதன் ஆடிட்டோரியத்தை மாற்றலாம்’ என முடிவு செய்துவிட்டார்கள். ஆசியாவின் பிரமாண்டமான நூலகத்தில் பந்தல் போட்டு, பன்னீர் தெளித்து, தலை வாழை இலையில் சாப்பாடு பரிமாறி, ஆர்க்கெஸ்ட்ராவோடு ஆடவிட்டால்... நிச்சயமாக வரலாற்றில் அது தனிப்பெரும் சாதனையாக இடம் பெறும்.

நீதிமன்றம் தலையிட்டு இந்த சாதனைக்கு இப்போது முட்டுக்கட்டை போட்டிருக்கிறது. இந்த நூலகம் சரியாகப் பராமரிக்கப்படவில்லை என்கிற குற்றச்சாட்டும் பரவலாக உள்ளது. இப்படி ஒரு பிரமாண்டமான நூலகத்திற்குப் படிப்படியாக நஞ்சூட்டுவது என்பது நமது பண்பாட்டு நுண்ணுணர்வுக்குச் செய்யும் நாசவேலை என்பதன்றி வேறென்ன?
(இன்னும் நடக்கலாம்...)

பத்தாயிரம் மைல் பயணம்

‘பயணம்’ என்ற சொல், தனிமனிதர்கள் செய்யும் பயணத்தைத்தான் குறிக்கிறது. ஆனால் உண்மையில், நாகரிகங்களும் பழக்க வழக்கங்களும், ஏன்... ஒரு காலகட்டமும்கூட பயணம் செய்கிறது. இந்தப் பயணங்கள்தான் உலகை மாற்றியிருக்கின்றன. புதிய பண்பாடுகளை உருவாக்கியிருக்கின்றன. அவ்வாறு நிகழ்ந்த பண்பாட்டுப் பயணங்களை இந்த நூலில் வெ.இறையன்பு வெகு சுவாரசியமாக எழுதிச் செல்கிறார். நாம் வெகு இயல்பாக பயன்படுத்தும், பங்கேற்கும் பல விஷயங்கள் எப்படி நம்மை வந்துசேர்ந்தன என்பதை அறியும்போது ஒரு கணம் பெரும் வரலாற்று உணர்வின் வெளிச்சத்தில் திகைத்து நின்றுவிடுகிறோம்.. விளையாட்டு, தேநீர், காபி, புகையிலை, சாக்லெட், சாப்பாடு, கரும்பு, வாசனைத் திரவியங்கள், தக்காளி, மருத்துவம், மிருகங்கள் என எத்தனையோ விஷயங்களின் பயணக்கதை மூலமாக உலக வரலாற்றை வேறொரு கோணத்திலிருந்து எழுதுகிறார் வெ.இறையன்பு. இனி ஒரு காபி குடிக்கும்போதும் நீங்கள் அதன் சரித்திரத்தையும் சேர்த்து அருந்த வேண்டும்.
(விலை: ரூ.100/-, வெளியீடு: புதிய தலைமுறை பதிப்பகம்,
24, ஜி.என். செட்டி சாலை, தியாகராய நகர், சென்னை - 600017.)