வளர்ப்பு





திடீரென்று வந்து நின்ற தோழியைக் கண்டதும், வியந்து போனாள் வள்ளி. ‘‘ஏய் புவனா... அஞ்சு வருஷத்துக்கு முன்னால பார்த்தது. எப்படி இருக்கே?’’ 

‘‘நல்லா இருக்கேன்டி! என் கணவரை இந்த ஊருக்கு மாத்திட்டாங்க. போன வாரம்தான் வந்தோம். இந்தத் தெருவில் ஏதோ ஆஞ்சநேயர் கோயில் இருக்காமே... அதைத் தேடி வந்தேன். திடீர்னு பார்த்தா, இந்த வீட்டு வாசல்ல நீ இருக்கே...’’
‘‘ஆன்ட்டி! என் ரேங்க் கார்டை பாருங்க...’’ என்றபடி நாலு வயது சிறுமி ஓடிவந்தாள். வாங்கிப் பார்த்த புவனா, ‘‘என்ன இது? இவ்வளவு மோசமா மார்க் வாங்கியிருக்கா’’ என்று கேட்டாள்.

‘‘இவள் இப்படித்தான்!’’ என பட்டும் படாமலும் பதில் சொன்னாள் வள்ளி. அதற்குள், ‘‘எனக்குப் பசிக்குது...’’ என அடம் பிடித்தாள் சிறுமி. ‘‘இரு... வர்றேன்’’ என்றபடி உள்ளே சென்ற வள்ளி, புட்டிப் பாலுடன் வந்தாள்.

‘‘இவ்வளவு வளர்ந்தும் இன்னுமா புட்டியில் குடிக்கிறா?’’ என்ற புவனாவின் கேள்விக்கு, ‘‘இவள் இப்படித்தான்!’’ என்றாள் வள்ளி.

பாதி குடித்துவிட்டு, ஹால் முழுக்க பாலை ஊற்றி விளையாடினாள் சிறுமி. ‘‘என்னடி இது?’’ என புவனா அதிர, ‘‘இவள் இப்படித்தான்!’’ என்றாள் வள்ளி.

‘‘நீ எவ்வளவு பொறுப்பானவ... குழந்தையை இப்படிப் பொறுப்பில்லாம வளர்த்திருக்கியே?’’ என்று புவனா கேட்கவும், வீட்டுக்குள் ஒரு பெண் வரவும் சரியாக இருந்தது.
‘‘புவனா... போகலாமா? இது என் அண்ணி வீடு. அம்சா, இவங்க குழந்தை! என் வீடு பக்கத்துத் தெருவுல இருக்கு’’ என்றாள் வள்ளி.

புவனா முகத்தில் அசடு வழிந்தது!