கன்னியில் பிறந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு தரும் இறைவன்





கன்னி ராசிக்காரர்கள் வேலை பார்க்கும் இடத்தை எப்போதும் கலகலப்பாக வைத்திருக்க விரும்புவீர்கள். பேச்சில் சுவாரசியம் காட்டினாலும், சரியான நேரத்தில் வேலையை முடித்து விடுவீர்கள். இந்த ராசியிலேயே சித்திரை நட்சத்திரக்காரர்கள் மட்டும் கொஞ்சம் சீரியஸாக வேலையைப் பார்ப்பீர்கள். ‘‘அரட்டை அடிச்சது போதும். எம்.டி வர்ற நேரம். அவங்கவங்க சீட்டுக்குப் போய் வேலையைப் பாருங்கப்பா’’ என அலாரம் அடிப்பீர்கள். ‘‘ஸார்... இந்த டிரஸ்ல நீங்க ஹீரோ மாதிரி இருக்கீங்க’’ என்று உயரதிகாரி உள்ளே நுழைந்தவுடன் வணக்கத்துடன் கலவரப்படுத்திப் பார்ப்பதெல்லாம் ஹஸ்த நட்சத்திரக்காரர்களுக்கு கைவந்த கலையாகும். ‘‘சிக்கரி கலக்காத பியூர் காபித் தூள் ஸார்! கும்பகோணம் போனப்ப உங்களுக்கும் ஒரு கிலோ வாங்கிட்டு வந்தேன்’’ என்று தூள் கிளப்புபவர்களும் இவர்கள்தான். அதிகம் ஐஸ் வைக்காமல், நியாயமானதை மட்டும் பாராட்டி, கம்பெனி வளர்ச்சிக்கு அடுத்தடுத்து என்ன செய்யலாம் என்று உத்திர நட்சத்திரக்காரர்கள் யோசிப்பார்கள்.

உங்கள் ராசிநாதன் புதனே உங்களின் உத்யோக, வியாபார ஸ்தானத்திற்கும் அதிபதியாக வருவதால் எங்கும் அர்ப்பணிப்போடு வேலை செய்வீர்கள். சுதந்திரமாக விட்டுவிட்டால், கொடுத்த வேலையை வித்தியாசமாகவும் சிறப்பாகவும் செய்து முடிப்பீர்கள். ‘‘நாம இல்லேன்னா இந்த ஆபீஸ் அவ்வளவுதான்... தேறாது’’ என்று சில நேரங்களில் கொஞ்சம் தலைக்கனத்தோடு எடுக்கும் முடிவுகள் உத்யோக விஷயத்தில் அவ்வப்போது சறுக்கலை உண்டாக்கும். எனவே, மற்றவர்களைக் குறைத்து மதிப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

உங்கள் ராசியில் பலபேர் நாற்பத்தைந்து வயதுக்குப் பின்னர் சொந்தத் தொழில் தொடங்குவீர்கள். நிறைய பேர் சம்பாதித்ததை நாலு பேருக்கு உதவுவதில் செலவழிப்பீர்கள். ஒருபோதும் கலப்படம், கள்ளத்தனமாக தொழில் செய்வதை விரும்ப மாட்டீர்கள். அதனாலேயே உங்களை சிலர் ஒதுக்கியும் வைப்பார்கள். ‘‘பழைய ஆபீஸர் ரொம்ப நல்லவர்ப்பா. நாம சொன்னா ஏத்துப்பாரு. பத்து நிமிஷம் லேட்டா போனாலும் சிரிச்சுக்கிட்டே ஒண்ணும் கேட்காம போயிடுவாரு. இப்ப வந்திருக்கறவர் ரொம்ப கறார். எதுக்கெடுத்தாலும் எரிஞ்சு விழறாரு. மூணு மாசத்துல ரெண்டு மெமோ கொடுத்துட்டாரு. அதான் வேலையை விட்டுட்டு சொந்தமா பிசினஸ் பண்ணலாம்னு இருக்கேன்’’ என்று அலுவலக கெடுபிடிகளைத் தாங்காது வெளியேறுபவர்கள் உங்கள் ராசியில் அதிகமுண்டு.

சொந்த ஜாதகத்தில் ராசிக்கோ அல்லது லக்னத்திற்கோ பத்தாவது வீட்டில் குரு, செவ்வாய், புதன் இருந்தாலோ, அல்லது இதில் ஏதாவது ஒரு கிரகமாவது இடம் பெற்றிருந்தாலும் உத்யோகத்தில் சறுக்கலும் சங்கடங்களும் இருக்கத்தான் செய்யும். புதனோடு சுக்கிரனோ அல்லது சனியோ சேர்ந்திருந்தால் பெரிய தொழிற்சாலை வைத்து நடத்துவீர்கள். ஷேர் மார்க்கெட்டில் பெரிதாக சாதிப்பீர்கள். சிலர் நீதிபதியாக உட்கார்ந்து சமூகத்தைத் திருத்துவீர்கள். செய்யும் வேலையில் நிறைய பணம் கிடைத்தாலும், மனசுக்குப் பிடிக்கும் வேலைதான் வேண்டும் என்று தேடுவீர்கள். தொடர்ந்து ஒரு கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்ப்பதை விரும்ப மாட்டீர்கள். அலுவலகத்தில் யார் எந்த சந்தேகத்தை திரும்பத் திரும்பக் கேட்டாலும் சலிப்பில்லாமல் பேசுவீர்கள். உங்களின் ஆலோசனைக்காகவே பலர் காத்திருப்பர். பலபேருக்கு தன்னம்பிக்கை அளிக்கும் விதத்தில் உங்கள் பேச்சு இருக்கும்.



உத்திர நட்சத்திரத்திற்கு அதிபதி சூரியன். ராசிக்கு அதிபதி புதன். இந்த அமைப்பை புதாத்திய யோகம் என்பார்கள். இந்த யோகம் உள்ளவர்களிடம் எல்லாவற்றிலும் நிபுணத்துவம் இருக்கும். அறிவுபூர்வமான முரட்டுத்தனமும் உண்டு. யார் என்ன சொன்னாலும் கேட்டுக் கொள்வீர்களே தவிர, உங்கள் மனதுக்குப் படும் முடிவையே எடுப்பீர்கள். முதுகுக்குப் பின்னால் ஒலிக்கும் விமர்சனங்களுக்கு அஞ்ச மாட்டீர்கள். மற்ற ஊழியர்களிடமிருந்து வித்தியாசப்படுவீர்கள். உங்கள் அலுவலகத்தில் பலருக்கு ரோல் மாடலாக விளங்குவீர்கள். யாரைப் பற்றி எந்த புகார் வந்தாலும் சட்டென்று அதை ஒப்புக் கொள்ள மாட்டீர்கள். தற்புகழ்ச்சி அறவே பிடிக்காது. தான் இதற்குத் தகுதியானவன்தானா என்கிற கேள்வி இருந்து கொண்டே இருக்கும். அலுவலக நண்பர்களிடம் கடன் வாங்குவதும், கொடுப்பதும் அவ்வளவாக பிடிக்காது. வேலையில் தவறு செய்தால், தயங்காமல் மன்னிப்பு கேட்பீர்கள். நீங்கள் பார்க்க பரபரப்போடு காணப்பட்டாலும், வேலைகளில் நேர்த்தியும் நேர்மையும் இருக்கும்.

உத்திர நட்சத்திரம் இரண்டாம் பாதத்தினர் மெக்கானிகல் எஞ்சினியர், டர்னர், ஃபிட்டர், எலெக்ட்ரானிக் உபகரணங்கள் பழுது பார்ப்பவர், புத்தகக் கடை, கிரிமினல் லாயர், ரிப்போர்ட்டர், கேட்டரிங் சர்வீஸ், மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட், ஓவியர், மருந்தாளுநர், விலங்குகள் சரணாலயத்தில் பணி, ஆர்கெஸ்ட்ரா என்று குறிப்பிட்ட துறைகளில் நுழைந்தால் சாதிக்கலாம். மூன்றாம் பாதத்தினர் எச்.ஆர்., பி.ஆர்.ஓ., தட்டச்சர், நீதிமன்றப்பணி, பைலட், டெலிபோன் துறை, பிறப்பு - இறப்பு கணக்கெடுப்பவர், மாநகராட்சி ஊழியர், கண்ணாடித் தொழிற்சாலை, கார்- டூ வீலர் உதிரிபாகங்கள் விற்பவர், சிகை அலங்காரம் செய்பவர், கூரியர் கம்பெனி என்று சில குறிப்பிட்ட துறைகளில் முயற்சி செய்யுங்கள். நான்காம் பாதத்தினர் உளவியல் பேராசிரியர், உடற்கல்வி ஆசிரியர், நரம்பியல் நிபுணர், நர்சரி கார்டன், காலண்டர் தயாரிப்பவர், விளையாட்டுப் பொருட்கள் விற்பவர், கல்வெட்டு ஆய்வாளர், ஃபர்னிச்சர் மார்ட், பட்டிமன்ற பேச்சாளர், மொழிபெயர்ப்பாளர், வன அதிகாரி என்று குறிப்பிட்ட சில இடங்களில் தனித்துவம் பெறுவீர்கள்.

ஹஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள், வியாபாரத்தில் எத்தனை பெரிய இழப்பு ஏற்பட்டாலும் நொறுங்கிவிட மாட்டீர்கள். அடுத்தடுத்த காரியங்களில் கவனம் செலுத்துவீர்கள். புதனுடைய ராசியில் சந்திரன் வருவதால், புதனுடைய ஏட்டறிவும், சந்திரனுடைய அனுபவ அறிவும் ஒரு சேர சங்கமித்துக் காணப்படும். அலுவலகத்தில் உங்களுக்குத் தெரியாத விஷயமே இல்லை என்கிற அளவுக்கு புகழ்வார்கள். எவ்வளவு பெரிய அதிகாரியாக இருந்தாலும், தயக்கமின்றி உங்கள் அபிப்ராயங்களைச் சொல்லுவீர்கள். வியாபாரத்தில் அதிகம் முதலீடு செய்யாமல் லாபம் பார்க்கும் சாமர்த்தியமும் உங்களுக்கு உண்டு. நெருக்கடி நேரத்தில் பிறரை அழுத்திவிட்டு உங்களை உயர்த்திக் கொள்ளும் தந்திரமும் தெரியும். அலுவலகத்தில் உங்களைச் சுற்றி ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்யும். அவர்களோடு நைச்சியமாகப் பேசி காரியம் சாதித்துக் கொள்வீர்கள். குடியேறிய ஊர் எதுவாக இருந்தாலும், சொந்த ஊரிலிருந்து பலரை உங்கள் கம்பெனிக்கு ஊழியர்களாக தேர்ந்தெடுத்துக் கொள்வீர்கள். தலைக்கனம் இல்லாது இருப்போரை தேடிச் சென்று நட்பு பாராட்டுவீர்கள். கீழே பணிபுரிவோரை நண்பராகத்தான் பார்ப்பீர்கள். எத்தனை இடையூறு வந்தாலும் பெரிதாக கவலைப்பட மாட்டீர்கள்.



முதல் பாதத்தில் பிறந்தவர்கள் ஹோட்டல், லேடீஸ் ஹாஸ்டல், ஆர்க்கிடெக்ட், சிவில் எஞ்சினியர், பெட்ரோல் பங்க், நீதித்துறைப் பணி, செங்கல், கிரானைட், செராமிக் செய்பவர், டிடெக்டிவ் ஏஜென்சி, வானிலை ஆராய்ச்சி மையத்தில் பணி, ஏர்போர்ட்டில் செக்கிங் ஆபீஸர் என்று சில துறைகளில் சிறப்பாக வருவீர்கள். 2ம் பாதத்தினர் தஞ்சாவூர் ஆர்ட் பெயின்டிங், ஆடிட்டர், நடிகர், கதாசிரியர், மனநல மருத்துவர், டெக்ஸ்டைல் பிசினஸ், ஜோதிடர், நிகழ்ச்சித் தொகுப்பாளர், சாஃப்ட்வேர் துறை, ஏற்றுமதி இறக்குமதி செய்யும் பன்னாட்டு நிறுவனத்தில் பணி, பைலட், கிரிக்கெட் வீரர் என்று தனித்துவத்தோடு சாதிப்பீர்கள். 3ம் பாதத்தில் பிறந்தவர்கள் செய்தி வாசிப்பாளர், வங்கி அதிகாரி, ஜோதிடர், பெயின்டர், புத்தகப் பதிப்பாளர், யோகா மாஸ்டர், பிசியோதெரபிஸ்ட், அக்குபஞ்சர் நிபுணர், பறவை ஆராய்ச்சி செய்பவர், டிராவலிங் கைடு, வனப் பாதுகாவலர், இ.என்.டி. நிபுணர், நில புரோக்கர் என்று சில துறைகளில் கால் பதித்தால் நிச்சயம் வெற்றிதான். நான்காம் பாதத்தினரில் கார் பழுது பார்ப்பவர், டூவீலர் - கார் ஷோரூம், டிசைனர், டைரக்டர், டெக்ஸ்டைல் டிசைனிங், திருமண மண்டபம் கட்டுதல், கேட்டரிங் சர்வீஸ், நகைக்கடை, ஜவுளிக்கடை, விவசாயம், டீ, காபி எஸ்டேட், நீர்மின் நிலையத்தில் பணி, சுரங்கவேலை, சங்கீத ஆசிரியர் என்று சில பணிகளில் ஈடுபட்டால் பெருத்த லாபத்தை அடையலாம்.

சித்திரையின் முதல் இரண்டு பாதங்கள் கன்னி ராசியிலும், 3, 4ம் பாதங்கள் துலாம் ராசியிலும் இடம்பெறுகின்றன. கன்னி ராசியிலேயே சித்திரை 1, 2 பாதங்களில் பிறந்தவர்கள் கொஞ்சம் விட்டுக் கொடுத்துத்தான் போவார்கள். இதனால், ‘‘அவர் ஏமாளி ஸார்’’ என்பார்கள். அறிவுஜீவியாக இருந்தாலும் அலுவலகத்தில் அங்கீகாரம் கிடைக்காது அவஸ்தைப்படுவீர்கள். காட்டுப்பூக்கள் போல யாராலும் பார்க்கப்படாமல் இருப்பீர்கள். வித்தைகாரகனான புதனின் ராசியில் பிறந்திருப்பதால் அறிவுக் கடலாகத் திகழ்வீர்கள். தன்மான கிரகம் செவ்வாய் உங்களின் நட்சத்திர அதிபதியாக வருவதால் வேலையில் கௌரவத்தையே பெரிதும் எதிர்பார்ப்பீர்கள். புத்திக்குரிய புதன் ராசியாக இருந்தாலும், உணர்ச்சிப் பிழம்புக்குரிய செவ்வாய் நட்சத்திர அதிபதியாக வருகிறார் என பார்த்தோம். உங்கள் புத்தியை புதன் ஆளுவார்; உடலை செவ்வாய் ஆளுவார். பொதுவாக புதனும் செவ்வாயும் கொஞ்சம் எதிர் எதிர் அம்சம் கொண்டவை. புத்தி கட்டளையிடுவதை உடம்பு செய்ய மறுக்கும். இந்த மாதிரி சின்ன போராட்டம் உங்களிடத்தில் வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கும். அலுவலகத்தில் பெரிய பணியைச் செய்ய வேண்டும் என்று தொடங்கினால் உடம்பு படுத்தும். உடம்பு நன்றாக இருந்தால் உங்கள் மனம் ஆர்வமின்றி இருக்கும்.

சித்திரை 1ம் பாதத்தினர் ராணுவம், மருந்துக்கடை, ஆப்டிகல்ஸ், மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், நிலக்கரி சுரங்கம், அனல் மின் நிலையம், ரத்த வங்கி, ஸ்கேன் சென்டர், நகை டிசைனிங், கனரக வாகனம் இயக்குபவர், மர வியாபாரம் என்று குறிப்பிட்ட சில துறைகளில் வெற்றியை வசப்படுத்தலாம். 2ம் பாதத்தினர் கம்ப்யூட்டர் ஹார்டுவேர், சர்க்கஸ் கம்பெனி, அத்லெடிக்ஸ், ஜிம்னாஸ்டிக்ஸ் வீரர், கிரிக்கெட் கோச், ஜிம் வைத்து நடத்துதல், குழந்தைகள் நல மருத்துவர், மெழுகு பொம்மை வியாபாரம், நூலகத்தில் பணி, வன விலங்கு சரணாலயத்தில் பணி என்று குறிப்பிட்ட துறைகளில் சேர்ந்தால் நல்ல நிலைக்கு வந்து விடுவீர்கள்.


கன்னி ராசிக்கு அதிபதியாக புதன் வருகிறார். மேலும், வேலை ஸ்தானத்தை நிர்ணயிப்பவராகவும் மிதுன புதன் வருகிறார். எனவே, பெருமாளை வணங்குவது எப்போதுமே நன்மை பயக்கும். அதிலும் மூன்று ஆறுகள் சங்கமிக்கும் தலமான திருமுக்கூடல் ஸ்ரீநிவாசப் பெருமாளை வணங்குங்கள். இத்தலத்திலுள்ள பெருமாளின் சங்கு, சக்கரத்தை முக்கியமாக தரிசியுங்கள்; உரிய வேலை நிச்சயம்! அரிதும், மிகப் பழமையானதுமான இத்தலம் செங்கல்பட்டு - காஞ்சிபுரம் பாதையில் பழைய சீவரம் எனும் தலத்திற்கு அருகேயே உள்ளது.
படங்கள்: கங்காதரன்
(தீர்வுகளைத் தேடுவோம்...)