நயம்படபேசு





தியேட்டருக்கு போறவங்கள்ல பாதி பேரு மப்புல போறான்; இல்ல, கார்னர் சீட்டு தேடி தப்பு பண்ணப் போறான். டப்பிங் புண்ணியத்துல இப்ப எல்லா படமும் தமிழ் பேசுது. அதுல எது இங்கிலீஷ் படம், எது இந்திப் படம், எது தெலுங்குப் படம், எது தமிழ்ப் படம்னு பிரித்தறிஞ்சு பிரைன்ல ஏத்துறது கஷ்டமா இருக்கு. செவப்பான ஃபிகருகளும் லிப் கிஸ்ஸும் இருக்கிறதுனால இங்கிலீஷ் படத்த கண்டுபிடிச்சிடலாம். மீச வைக்காம மொழுங்க ஷேவ் பண்ணி, ஹீரோவுக்கும் ஹீரோயினுக்கும் வித்தியாசம் தெரியாட்டி அது இந்திப் படம்னு கண்டுபிடிச்சுடலாம். ஆனா, தெலுங்கு டப்பிங்குக்கும் ஒரிஜினல் தமிழ்ப் படத்துக்கும்தான் வித்தியாசம் கண்டுபிடிக்க கஷ்டமா இருக்கு. ரெண்டு சினிமாலயும் பாட்டு சீனுக்கு வெளிநாடு போயிடுறாங்க; அன்டார்டிக்கால டான்ஸ் ஆடினாலும் ஹீரோயினுக்கு பிகினிதான் கொடுக்குறாங்க; கடைசியாதான் போலீஸ் வருது... இப்படி ஏகப்பட்ட கன்ஃபியூஷன். போன வாரம் ‘சிறுத்த புலி’ன்னு ஒரு படம். தமிழ்ப் படம்னு உள்ள போனா, குண்டா குண்டாவா கொழுக்கட்டை தின்னவன் வயிறு மாதிரி உள்ள டமால் டுமீல்னு ஒரே கலவரம். இதோ... எவ்வளவு மப்புலயும் இரண்டு மொழி படத்துக்கும் வித்தியாசம் கண்டுபிடிக்க எளிய வழிகள்!

*  ஹீரோயின் அரை லூஸா இருந்தா தமிழ்ப் படம். ஹீரோயின் முக்கா லூஸாவும், அவங்கம்மா முழு லூஸாவும் இருந்தா தெலுங்குப் படம்.

*  பாதுகாப்பு அதிகாரிகள அடிச்சுப் போட்டு முதலமைச்சரை ஹீரோ நேருல போயி பார்த்து நியாயம் கேட்டா தமிழ்ப் படம். பாதுகாப்பு அதிகாரிகள அடிச்சு விரட்டி, முதலமைச்சர தான் இருக்கிற இடத்துக்கு ஹீரோ வரச் சொன்னா தெலுங்குப் படம்.
 
*  பரட்டைத் தலை, முள்ளு தாடி, அழுக்கு லுங்கின்னு கெட்டப்போட ஹீரோ திரிஞ்சா தமிழ்ப் படம். எவ்வளவு வறுமையிலயும் தலைமுடிக்கும் மீசைக்கும் டை அடிச்சு, தலை சீவி, பவுடர் அடிச்சிருந்தா தெலுங்குப் படம்.

*  ஒருத்தரே 20 ரவுடிகள சுத்தி சுத்தி அடிச்சா தமிழ்ப் படம்; ஒரே உதைல 20 ரவுடிகள பறக்க விட்டா அது தெலுங்குப் படம்.

*  பாக்கிற நாலு ஹீரோவுக்கு ஒருத்தர் 50 வயசுக்கு மேல இருந்தா அது தமிழ்ப் படம். பாக்கிற நாலு ஹீரோவுக்கு ஒருத்தர் 50 வயசுக்குள்ள இருந்தா அது தெலுங்குப் படம்.

*  விமானத்துல ஏறி வில்லன் வெளிநாட்டுக்கு தப்பிச்சுப் போகாம இருக்க சண்ட போட்டா தமிழ்ப் படம். விமானத்த பறக்க விடாம கையால இழுத்துப் புடிச்சா தெலுங்குப் படம்.

*  அகராதி பேசுற அதிகாரிய கட்டையால அடிச்சா தமிழ்ப் படம். பக்கத்துல இருக்கிற மரத்த வேரோட புடுங்கி அடிச்சா தெலுங்குப் படம்.

*  கிளைமாக்ஸ்ல குண்டு வெடிச்சா தமிழ்ப் படம். கிளைமாக்ஸ் வரை குண்டு வெடிச்சா அது தெலுங்குப் படம்.
*  ஹீரோயினுக்கு ஹீரோ தம்பி மாதிரி இருந்தா தமிழ்ப் படம். சித்தப்பா மாதிரி இருந்தா தெலுங்குப் படம்.

*  ‘ஏய்ய்ய்ய்ய்... ஆய்ய்ய்ய்ய்... ஊய்ய்ய்ய்...’னு வில்லன் மட்டும் கத்தினா தமிழ்ப் படம். படத்துல வர்ற எல்லா கேரக்டர்களும் கத்தினா தெலுங்குப் படம்.



‘புருஷன் வேணுமா... புடவை வேணுமா’ன்னு கேட்டா, நம்ம ஊருல பல பொம்பளைங்க புடவைதான் வேணுமுன்னு சொல்லி, மானத்த வாங்கிடுவாங்க. இருக்காதா பின்ன, புருஷங்களை விட புடவைதானே அவங்களோட அதிகம் இருக்கு.

செங்கிஸ்கான் போருக்குப் போனதை விட, கைப்புள்ள பஞ்சாயத்துக்குப் போனதை விட ரணகளமானது பொம்பளைங்க புடவை எடுக்கப் போறது. கல்யாணத்துக்கு புடவை எடுக்கப் போயி கல்யாணத்தன்னைக்கு காலைல திரும்பினது, தீபாவளிக்குப் புடவை எடுக்க போயி பொங்கலுக்கு திரும்பினதுன்னு இதுக்குப் பின்ன பல கதைகள் இருக்கு.

ஏன், எங்க பட்டுக்கோட்டை பெரியம்மா புடவை எடுக்கப் போயி பதினோரு வருஷமாச்சு. ‘காணாமல் போனவர்’ விளம்பரத்துல இருந்து, ‘காலமானார்’ விளம்பரம் வரை பல பேப்பர்ல கொடுத்தாச்சு. இன்னமும் வரல. இப்போ பெரியப்பா ரெண்டாவது கல்யாணம் பண்ணி 4 வருஷமாவுது. 5 குழந்தைங்க வேற. ஆனா, சென்னிமலை சித்தப்பா அப்படியில்ல. மானஸ்தன். ஏக பத்தினி விரதன். கடந்த நாலு வருஷமா புடவை எடுத்துக்கிட்டு இருக்கிற சித்திக்கு தினம் காலையில இட்லி, தோசை, பூரி, பொங்கல் செஞ்சு டிபன் பாக்ஸ்ல கொண்டு போயி கொடுத்துட்டுத்தான் ஆபீஸ் போவாரு. சாயந்திரம் வர்றப்ப காலி பாத்திரங்கள திருப்பி எடுத்துக்கிட்டு வந்திருவாரு. பல வீடுகளில் வீட்டு வேலைக்காரம்மா வீட்டுக்காரம்மாவா ஆகுறதே, இந்த மாதிரி திரும்பி வராத வீட்டுக்காரம்மாவாலதான்!

சில பொண்டாட்டிங்க இருக்காங்க... அவங்க எல்லாம் ஒரு ‘புடவை விக்கிபீடியா’ மாதிரி. சுற்றுவட்டாரத்துல இருக்கும் பதினெட்டுப்பட்டி புடவை கடைகள்லயும் என்னனென்ன எங்கெங்க இருக்கும்னு மனப்பாடமாவே சொல்வாங்க. கோயமுத்தூர் தாலுகாவுல எந்தப் புடவை எந்தக் கடையில கிடைக்கும்னு எங்க அவினாசி அத்தையதான் கூப்பிட்டு கேப்பாங்க. ‘ராமர் கலர் மாங்கா டிசைன் பார்டர் போட்ட புடவை எங்க கடைல எங்க இருக்கு?’னு ஒரு கடை ஓனரே போன வாரம் போன் போட்டு எங்க அத்தகிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டார்னா பாருங்களேன்.

புடவை எடுக்கிறது சாதாரண விஷயமில்ல. அது கம்ப்யூட்டருக்கு புரோகிராம் எழுதற மாதிரி. ஒரு புடவைய பார்த்தவுடனே, அந்தக் கலர்ல ஏற்கனவே புடவை இருக்கா, இருந்தா அந்த புடவைய எந்த விசேஷத்துக்குக் கட்டினோம், எத்தன தடவ கட்டினோம்ங்கிற புள்ளிவிவரம் நொடில வந்துட்டுப் போகும். புடவை விஷயத்துல கூகுளைவிட வேகமானது பொம்பளைங்க மூளை.

பொண்டாட்டியோட புடவை எடுக்கப் போற ஆம்பளைங்களுக்கு ஆறுதலான ஒரே விஷயம், கடைக்குள்ள அங்கங்க ஒட்டியிருக்குற ஆளுயர அனுஷ்கா, தமன்னா, ஹன்சிகா போஸ்டர்கள்தான். புடவைக்கடையில ஆயிரம் புடவை இருந்தாலும், இந்தப் பொம்பளைங்க பாக்கிறது என்னவோ அடுத்தவங்க கட்டிக்கிட்டு வர புடவையத்தான். பொண்டாட்டிக்கு புது டிசைன் தேடுறேன்னு பொண்டாட்டியையே புது டிசைனா தேடலாம்.



தீபாவளி வேற நெருங்கிடுச்சு. சினிமால புடவையே கட்டாத நடிகைங்க கூட ‘அள்ளிக்கோ அள்ளிக்கோ அப்புச்சி கடையில அள்ளிக்கோ’ன்னு ஆடிக்கிட்டு வந்துடுவாங்க டி.வில. அதனால ஆம்பளைங்களே, அடுத்த தடவ பொண்டாட்டி புள்ளகுட்டியோட துணி எடுக்கப் போறப்போ, நீங்க மறக்காம கொண்டு போக வேண்டிய அயிட்டங்கள்... சோப்பு, பவுடர், பல்லு விளக்குற பிரஷ், பேஸ்ட், துண்டு, லுங்கி.

போன ஜென்மத்துல கொடூரமான பாவம் செஞ்சவங்கள கடவுள் இந்த ஜென்மத்துல புடவை கடை சேல்ஸ்மேனா போட்ருவாருன்னு ‘புரூடா புராணம்’ சொல்லுது. பாவமய்யா... புடவை எடுத்து காமிக்கிறதுக்கே அவங்க தினம் அரை பாட்டில் பூஸ்ட் குடிக்கணும். வாசல்ல நிக்கிற புருசமாருங்க, ‘நம்மல்லாம் எவ்வளவோ பரவாயில்ல’ன்னு நினைச்சுக்கணும்னா இவங்க படுற பாட்டை ஒரு அஞ்சு நிமிஷம் நின்னு பாருங்க போதும்!
(பேசுவோம்)