நியூஸ் வே





ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி சிறைக்குப் போய் நூறு நாட்கள் ஆகிவிட்டது. ஐதராபாத்தில் இருக்கும் சஞ்சால்குடா சிறையில் இருக்கும் அவர், சிறை நூலகத்திலிருந்து மகாத்மா காந்தி, ஜோதிபா பூலே ஆகியோரது புத்தகங்களை எடுத்துப் படிக்கிறார். ‘‘2014ம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கான தங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையையும் அவர் சிறையிலேயே ரெடி செய்து வருகிறார்’’ என்கிறார்கள் அவரது கட்சியினர்.

பதவிக்காலம் முடிந்த ராஜ்ய சபா எம்.பி.க்களுக்கு சமீபத்தில் விருந்து கொடுத்தார் துணை ஜனாதிபதி அன்சாரி. விருந்துக்கு வந்த பிரதமர் மன்மோகன் சிங் பக்கத்தில் அமர்ந்தவர், பி.ஜே.பியின் செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜாவேத்கர். நிலக்கரி ஊழல் விவகாரத்தில் பிரதமரை காய்ச்சி எடுத்தவர். இங்கே என்ன ஆகுமோ என பிரதமர் இறுக்கமான முகத்தோடு அமர்ந்திருக்க, ஜாவேத்கர் அவர் பக்கம் திரும்பி, ‘‘உங்களுடையது காதல் திருமணமா?’’ என்று கேட்டார். இப்படி ஒரு கேள்வியை எதிர்பார்க்காத பிரதமர் சிரித்தபடியே, ‘‘ஆமாம்’’ என்றார். நிம்மதியான சிரிப்பு!

வெளிநாட்டுவாழ் இந்தியர்கள் நலத்துறை அமைச்சராக இருக்கிறார் வயலார் ரவி. கூடவே இன்னொரு சிறப்பும் இந்தக் கேரளத்துக்காரருக்கு உண்டு. யாராவது அமைச்சர் பதவி விலக நேர்ந்தால், அவரது துறை வயலார் ரவியிடமே வருகிறது. வீர்பத்ர சிங், விலாஸ்ராவ் தேஷ்முக் என பல அமைச்சர்களின் துறைகளைக் கூடுதலாக ஏற்று, ஏற்று, இப்போது பிரதமரைவிட அதிகத் துறைகளை கவனிப்பவராக ஆகியிருக்கிறார் ரவி.

மேற்கு வங்காளத்தில் டெங்கு ஜுரம் அதிவேகமாக பரவுகிறது. டாக்டர்கள் ஒருபுறம் எச்சரிக்கை செய்திகளைத் தந்தபடி இருக்க, முதல்வர் மம்தா பானர்ஜியும் திடீர் டாக்டராக அவதாரம் எடுத்து, ஹெல்த் டிப்ஸ் வழங்குகிறார். ‘‘யாரும் உடம்பைக் குறைக்கிறேன்னு டயட் இருக்காதீங்க. அப்புறம் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துடும்’’ என்பது அவரது திடீர் டிப்ஸ்களில் ஒன்று. ‘‘தவறான தகவல்கள் தரக்கூடாது’’ என டாக்டர்கள் முணுமுணுத்தாலும், ‘‘எங்க தலைவி சொல்றதுதான் சரி’’ என்கிறார்கள் அவரது கட்சியினர்!

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மகள் சர்மிஷ்டா முகர்ஜி, கதக் நடனக் கலைஞராக உலகப் புகழ்பெற்றவர். அடிக்கடி வெளிநாடுகள் சென்று நடன நிகழ்ச்சிகள் நடத்துவார். இப்போது அவர் ஐரோப்பா கிளம்புகிறார். பிரணாப் ஜனாதிபதி ஆனபிறகு சர்மிஷ்டா செல்லும் முதல் வெளிநாட்டு நிகழ்ச்சி இது. உடனே ஆங்காங்கே இருக்கும் இந்தியத் தூதரகங்கள் பிஸியாகி, பயண ஏற்பாடுகள் செய்ய ஆர்வம் காட்டின. ‘‘நான் சாதாரண நடனக் கலைஞராகவே வருகிறேன். ஜனாதிபதியின் மகளாக அல்ல’’ என்று சொல்லி எல்லா சலுகைகளையும் மறுத்துவிட்டார் சர்மிஷ்டா.