தந்திரம்





வழக்கம் போல அந்த ஜவுளிக்கடையில் மனைவிக் கும் தங்கைக்கும் சம விலையில் புடவை வாங்கினான் ஈஸ்வர்.
தங்கை ரேவதி சிவந்த நிறம். கல்லூரியில் படிப்பவள். அவள் வயதிற்கும் ஆசைக்கும் ஏற்ப பூப்போட்ட பாலியஸ்டர் புடவை எடுத்தான். மனைவி சரஸ்வதி கொஞ்சம் பருமனாக இருப்பாள்; நிறமும் சற்று குறைவுதான். அதனால் அவள் உருவத்துக்கு ஏற்றபடி கட்டம் போட்ட அகல பார்டர் வாயில் புடவை எடுத்திருந்தான்.

இப்படித்தான் சென்ற முறையும் வாங்கினான். ஆனால் ரேவதிக்கு வாங்கிய புடவைதான் தனக்கு வேண்டுமென்று அடம்பிடித்து அபகரித்துக் கொண்டாள் சரஸ்வதி. அவளுக்குத் தானும் இளவட்டம் என்கிற நினைப்பு. தங்கையின் முகம் சூம்பிப் போனதைப் பார்க்கப் பாவமாக இருந்தது ஈஸ்வருக்கு.
இந்த முறை புடவைகளோடு வீட்டிற்குள் நுழைந்ததும், மனைவியை அழைத்தான்.

‘‘சரஸ்... பூப்போட்ட புடவைய நீ எடுத்துக்க. ரேவதி காலேஜ் போறவ... கொஞ்சம் கௌரவமா தெரியணும்... அதனாலே கட்டம் போட்ட வாயில் புடவை அவளுக்கு’’ - என்றான்.

சுருக்கென்று கோபம் வந்தது சரஸ்வதிக்கு. ‘‘ஏன்?... உங்களுக்கு நான் கௌரவமா தெரியக்கூடாதாக்கும்’’ என்று எகிறியபடி, வாயில் புடவையை எடுத்துக்கொண்டு உள்ளே போனாள்.

இந்தத் தந்திரம் புரிந்து தங்கை ரேவதி சிரிக்க, நிம்மதியாக அவளிடம் பூப்போட்ட புடவையைக் கொடுத்தான் ஈஸ்வர்.