ஜட்ஜ்மென்ட்





அக்கம் பக்கத்து வீடுகளில் நடக்கும் மாமியார் - மருமகள் சண்டைகளில், எப்பொழுதும் மாமியார் பக்கமே சைடு எடுத்துப் பேசுவாள் ரகுவின் அம்மா தாரா. அந்த மாமியார்களில் பலரும் வீடுதேடி வந்து தங்கள் மனக்குமுறலைச் சொல்லும்போதெல்லாம் ஆறுதல் சொல்வாள். ''எப்படி படுத்தறாளாம் தெரியுமா? அவ அம்மாகிட்ட இப்படித்தான் நடந்துப்பாளா?’’ என்றெல்லாம் அவர்களோடு சேர்ந்து அந்த மருமகளைத் திட்டுவாள்.

அப்படிப்பட்டவள் இன்று புதிதாய் திருமணமாகி வந்திருக்கும் தன் மனைவியிடம் கரிசனம் காட்டி அன்பாகப் பழகுவது ரகுவுக்குப் புதிராய் இருந்தது.

அம்மாவிடமே கேட்டான்...
‘‘பக்கத்து வீட்டு மருமக புகுந்த வீட்டுக்கு வரும்போது எடுத்துக்கிட்டு வந்த ஒரு பொருளை உன் பொண்டாட்டி எடுத்துட்டு வரலைடா! நான் அவ மேல அன்பா இருக்க அதுதான் காரணம்’’ என்றாள் தாரா.

அவனுக்கு இன்னும் குழப்பமாகத்தான் இருந்தது...
‘‘மண்டு... மண்டு... புகுந்த வீட்டுக்கு வரும்போதே செல்போனும் கையுமா வந்தா பக்கத்து வீட்டு மருமக. இங்க நடக்குற சங்கதியை எல்லாம் அப்பப்போ பொறந்த வீட்டுக்குச் சொல்லி, மூணே மாசத்துல ரெண்டு குடும்பத்துக்கும் தகராறு முத்திடுச்சு. ஆனா நம்ம ராதாவை அனுப்பும்போது, அவங்க வீட்டுல செல்போன் கொடுக்கல. நம்ம மேல நம்பிக்கை வச்சு, ‘எங்க பொண்ணை நல்லா பார்த்துக்கங்க’ன்னு மனசார சொன்னாங்க. அந்த நம்பிக்கைய நாம காப்பாத்தணுமில்ல..?’’
அம்மாவின் ஜட்ஜ்மென்ட் ரகுவுக்குப் பிடித்திருந்தது.