ஆவி






‘‘மச்சி! ஆவியோட பேசணும்னு ஆசப்பட்டியே... என் ரூம் மேட் கார்த்திக் பல முறை ஆவிகளை வரவழைச்சு பேசியிருக்கானாம். இன்னைக்கு ராத்திரி 11 மணிக்கு என் ரூமுக்கு வந்துடு!’’ - வாசு சொன்னதை என்னால் நம்பவே முடியவில்லை.

அரை நம்பிக்கையோடே இரவு அவன் அறைக்குச் சென்றேன். வாசுவின் அறைத்தோழர்கள் கார்த்திக்கும் டேவிட்டும் இருந்தார்கள். ஆனால், வாசு இல்லை. அங்கே ஆவியுடன் பேசுவதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. நானாக அவர்களிடம் பிற்போக்குத்தனமாக எதையும் கேட்க விரும்பவில்லை.

பொத்தாம் பொதுவாக இருவரிடமும் பேசிக் கொண்டிருந்தேன். நள்ளிரவு ஒரு மணி ஆகியும் வாசு வரவில்லை. மறுநாள் எனக்கு காலை ஷிஃப்ட். அதனால் கார்த்திக், டேவிட்டிடம் விடைபெற்றுக் கிளம்பினேன்.

அதிகாலை... செல்போன் ஒலித்தது. வாசுவின் நம்பர்.
ஆத்திரமாகக் கத்தினேன். ‘‘டேய்... ஆவியோட பேசலாம்னு என்னை வரச் சொல்லிட்டு எங்கேடா போய்த் தொலைஞ்சே? ராஸ்கல்! ஒரு மணி வரைக்கும் நானும் கார்த்திக்கும் டேவிட்டும் வெயிட் பண்ணி வெறுத்துட்டோம்!’’

‘‘டேய், என்னடா சொல்றே? கார்த்திக்கும் டேவிட்டும் நேத்து நைட் 9 மணிக்கு பைக்ல வரும்போது, லாரியில அடிபட்டு ஸ்பாட் அவுட். ராத்திரியிலயிருந்து ஜி.எச்.லதான் இருக்குறேன். நீ என்னடான்னா...’’
எனக்கு இதயம் வெடித்து விடுவது போல துடித்தது.