கைதிகளுக்கு வேலைவாய்ப்பு!





உணர்ச்சிவசத்தில் ஏதோ தவறு செய்துவிட்டோ, செய்யாத தவறுக்கோ சிறைக்குப் போகிற பலரும் தண்டனைக் காலம் முடிந்ததும் இயல்பான வாழ்க்கையை வாழ முடிவதில்லை. அவர்களை குற்றவாளிகளாகவே பார்க்கும் சமூகம், எந்த வேலைவாய்ப்பையும் தருவதில்லை. இதனாலேயே தவறான பாதைக்கு அவர்களில் பலர் திசை மாறுகிறார்கள். இந்த சமூக அவலத்தைப் போக்க, ‘திருடனிடமே சாவியைக் கொடுத்தால்..?’ என்ற பழைய டெக்னிக்கை புதிதாக செயல் படுத்தியிருக்கிறது தமிழக சிறைத்துறை. அதாவது, கொலை, கொள்ளை, ஜேப்படி, அடிதடி போன்ற குற்றங்களுக்காக சிறையிலிருக்கும் விசாரணைக் கைதிகளில் சுமார் முப்பது பேரை மட்டும் தேர்ந்தெடுத்து, கைதிகள் மறுவாழ்வுத் திட்டத்தின் கீழ் அவர்களுக்கு செக்யூரிட்டி வேலைக்கான உத்தரவை வழங்கியிருக்கிறது சிறைத்துறை. ‘வாவ்’ என்றும் ‘வேஸ்ட்’ என்றும் பல்வேறு விவாதங்களை இது கிளறி விட்டிருக்க, சட்ட வல்லுனர்களின் கருத்தை அறியக் கிளம்பினோம்.

‘‘சிறைக் கைதிகளில் ரெண்டு வகையினர் உண்டு. ஒன்று, விசாரணைக் கைதி. மற்றது கன்விக்ட் என்று சொல்லப்படும் தண்டனைக் கைதி. என்னைக் கேட்டால், இந்த வேலைகளை விசாரணைக் கைதிகளுக்குக் கொடுத்ததற்கு பதிலாக தண்டனைக் கைதிகளுக்குக் கொடுத்திருக்கலாம்’’ என்று ஆரம்பித்தார் வழக்குரைஞர் கண்ணதாசன்.

‘‘தண்டனைக் கைதி என்றால் சினிமாவில் வருவது போல யூனிபார்ம் உடுத்த வேண்டும்; சிறைக்குள் வேலை செய்ய வேண்டும். ஆனால், விசாரணைக் கைதிகள் இதையெல்லாம் செய்ய வேண்டாம். சாதாரண உடையில் இருக்கலாம். பெயிலில் வெளியே வரலாம். குடும்பத்தோடு வசிக்கலாம். ஆனால், இவர்களில் பலர் பெயிலில் வரவே பயப்படுவார்கள். வெளியே வந்தால் கொன்று விடுவார்கள் என்று பயம். குடும்பத்தினர் கூட அவர்களை வந்து பார்க்க மாட்டார்கள். இதனால்தான் பல விசாரணைக் கைதிகள் சிறையிலேயே தற்கொலைக்கெல்லாம் முயற்சி செய்கிறார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு வேலை என்ற பெயரில் பெயில் கொடுத்து வெளியில் அனுப்புவது பாதுகாப்பானதா? ஒருவேளை தீர்ப்பில் தண்டனை வந்தால், அந்த வேலையால் என்ன பிரயோஜனம்?

குறுகிய கால தண்டனைக் கைதிகளுக்கு - அதாவது, 3 முதல் 10 ஆண்டுகள் வரை தண்டனை அனுபவிக்கக்கூடிய கைதிகளுக்கு - இந்த வேலைகளைக் கொடுத்தால், அவர்கள் தண்டனை முடிந்து வெளியே வரும்போது கூட அந்த வேலைகளைத் தொடரலாம். கைதிகள் மறுவாழ்வு என்ற பெயரில் இப்பொழுது தண்டனைக் கைதிகளுக்கு கடமைக்காக ஒரு கைத்தொழில் கற்றுத்தரப்படுகிறது. வழக்கொழிந்து போன அந்தக் கைத்தொழில்கள் பெரும்பாலும் அவர்கள் வாழ்க்கைக்குப் பயன்படுவதில்லை. அப்படிப்பட்ட வேலைகளுக்கு இது மாற்றாக இருக்கும்!’’ என்று கண்ணதாசன் தெரிவிக்க, ‘‘விசாரணைக் கைதிகளை சிறையில் வைப்பதே தவறு’’ என்று அதிரடி காட்டினார் சென்னை பல்கலைக்கழக குற்றவியல் துறை உதவிப் பேராசிரியர் ஸ்ரீனிவாசன்.

‘‘தேவையையொட்டிதான் விசாரணைக் கைதிகளை சிறையில் வைக்க வேண்டும். குற்றம் நிரூபணம் ஆகாதவரை அவர்கள் குற்றவாளிகள் அல்ல. விசாரணைக் கைதிகளை சிறையில் வைப்பது வெளிநாடுகளில் இல்லாத ஒரு நடைமுறை. வெளியே இருந்தால் மறுவாழ்வை அவர்களே பார்த்துக்கொள்வார்கள்.



சூழ்நிலையால் உணர்ச்சி வசப்பட்டு, கோபத்தால் குற்றங்களைச் செய்பவர்கள், முதல்முறையாக குற்றச் செயலில் ஈடுபடுகிறவர்கள், குறைந்த தண்டனை அனுபவிக்கும் கைதிகளுக்கு இந்த வேலைகளைக் கொடுத் தால் பிரயோஜனமாக இருக்கும். இப்படிப்பட்டவர்களை சிறையிலேயே வைத்திருந்தால் அவர்கள் இன்னும் அதிகமான குற்றங்களை சிறைக்குள்ளேயே கற்றுக் கொள்வார்கள். பிறகு வெளியே வரும்போது அதிகக் குற்றங்களில் ஈடுபடுவார்கள். இப்படிப்பட்டவர்களுக்குக் கொடுக்கப்படும் வேலை, இந்த ஆபத்தைக் குறைக்கும். கைதிகளுக்குக் கொடுக்கப்படும் வேலையும் மருத்துவமனை பராமரிப்பு, சாலை பராமரிப்பு போன்ற மக்கள்நலப் பணிகளாக இருந்தால் சிறப்பாக இருக்கும்’’ என்றார் அவர்.

இத்தனை எதிர்ப்புகளுக்கிடையிலும் இந்தத் திட்டத்தை ஆதரித்து வாதங்களை வைத்தார் வழக்குரைஞர் அருள்ராஜ். ‘‘சிறுசிறு குற்றங்களில் ஈடுபட்டு விசாரணைக் கைதிகளாக இருப்பவர்களில் சுமார் ஐந்திலிருந்து ஆறு சதவீதத்தினரே இறுதியில் தண்டனை பெறுகிறார்கள். கொள்ளை, கொலை முயற்சி போன்ற நடுத்தரமான வழக்குகளில் சிக்குபவர்கள் பத்திலிருந்து பதினைந்து சதவீதத்தினரே தண்டனை பெறுகிறார்கள். இந்நிலையில், கொடுமையான மற்றும் தொடர்ச்சியாக குற்றங்களில் ஈடுபடும் விசாரணைக் கைதிகளைத் தவிர்த்து மற்றவர்களுக்காக இந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது. கைதிகளின் எதிர்கால வாழ்க்கைக்கு வழிகாட்டும் இந்தத் திட்டம் வரவேற்கப்படக்கூடியதே.

வசதி வாய்ப்பற்ற கைதிகளுக்கு இந்த வேலைத் திட்டம் உதவும். இந்தத் திட்டத்தால் கிடைக்கும் வருமானம் அவர்களின் குடும்பத்துக்கு உதவும்’’ என்றார் அவர்.
யாருக்குக் கொடுக்கப்பட வேண்டும் என்பது சர்ச்சைக்கு உள்ளானாலும், உரிய ஏஜென்ட்டுகளின் மூலம் தரப்படும் இந்த வேலை, எந்தக் கட்டத்திலும் பணிக்குச் செல்பவரை ஒரு கைதியாக அடையாளம் காட்டாது என்ற அம்சம் அனைவராலும் வரவேற்கப்படுகிறது. நல்ல விஷயங்களைத் துவங்கிவிட்டால், பிறகு எப்போது வேண்டுமானாலும் செப்பனிட்டுக் கொள்ளலாம் அல்லவா!
- டி.ரஞ்சித்
படங்கள்: ஆர்.சி.எஸ்